திங்கள், 31 அக்டோபர், 2016

ஜெயமோகன் என்றொரு ஷைலக்

ஜெயமோகன் என்றொரு ஷைலக்
=======================================ருத்ரா இ பரமசிவன்.

(நம் தமிழ் இலக்கிய வாதி திரு.ஜெயமோகன் அவர்கள் அவரது வலைப்பூவில் தன் நண்பர் "சுந்தர ராமசாமியுடன்" உரையாடி வரும்போது அந்த பஸ் நிலத்தில் மாலைமுரசு கட்டுகளில் தூங்கிக்கொண்டிருந்த ஒரு சிறுவனைப் பார்த்து "அதோ பார் ஒரு  "மோசிகீரன்" என்று சுந்தர ராமசாமி ஜோக்  அடித்தார். இருவரும் சிரித்துக்கொண்ட்டார்கள். புண்படுதல் பற்றி தன் பழைய கட்டுரையை மீள்பதிவு செய்ததில் இதையும் குறிப்பிட்டு இருக்கிறார். "ஜோக்"எப்படியிருக்கிறது என்று பாருங்கள்.அதைக்குறித்தே எனது இக்கவிதை)


"புண்படுதல்" பற்றி
ஒரு ஆற்றொழுக்காய்
பஃறுளி ஆறு பாய்ந்தாற்போல்
எழுதியிருக்கிறீகள்.
அருமை.அருமை.
ஆனால் உங்கள் எடுத்துக்காட்டல்களில்
அதிகம் இருப்பது
தமிழ் மொழி..
தமிழ் மொழி இலக்கிய வாதிககள் தான்.
என்பதை நன்கு உணர முடிகிறது.
இதற்குள்ளும்
ஒரு ஃப்ராடிஸப் பிறாண்டல்
இருக்கிறது என்று சொல்லலாம்.
தமிழ் எனும் சிந்தனைக்களம்
அதிகம் ஆரிய சிந்தனைகளை
தகர்த்து எறிவதாகத்தான் இருக்கிறது.
அதைப் பொறுத்துக்கொள்ளமுடியாத‌
ஒரு "சப்கான்ஷியஸ் காம்ப்ளெக்ஸ்"
உங்களுக்கு இருக்கிறதே!
உங்களுடன் பஸ்ஸில் வந்து இறங்கிய‌
சுந்தர ராமசாமி அவர்கள்
அந்த "மாலை முரசு"க்கட்டுகள் மீது
படுத்திருக்கும்
சிறுவனைக்கண்டதும்
மோசிகீரனை நினவுபடுத்தும்
அந்த நுட்ப தமிழ் இலக்கிய சிந்தனை
மிகவும் பாராட்டுக்குரியது.
அது ஒரு அருமையான உவமையுடன் கூடிய‌
நகைச்சுவை என்பதில்
எந்த ஐயமும் இல்லை.
ஆனால் அந்த அரசன் ஒரு "சேரளத்து" தமிழன்
பெருஞ்சேரல் இரும்பொறை.
இன்று போல் ஒரு இந்து முன்னணிக்காரனாயிருந்தால்
வாளை அல்லவா அவன் மீது வீசியிருப்பான்.
அவருக்கு தமிழை விட‌
அந்த "பூஜை போட்டு மரியாதையுடன் வைக்கப்பட்ட"
முரசுக்கட்டில் தானே முக்கியம்.
ஆனாலும் பெருஞ்சேரல் இரும்பொறையின் தமிழ் உணர்வு அது.
நகைச்சுவை சொல்லும்போதும் தேடிப்பார்த்து
தமிழ் உணர்வை கொச்சைப்படுத்துவது போல்
ஜோக் அடிப்பது தான் "ஆரியக்கூத்து" என்பது.
அந்த பத்திரிகைக்கட்டுகள் எல்லாம்
புத்தகம் மாதிரி.
அதன் மீது சோம்பேறி போல்
படுத்து தூங்குவதைப் பார்த்து
அந்தப்பயல் படுத்திருப்பதை பார்த்தால்
"சரஸ்வதி இவனுக்கு மெத்தையா?
பாவம் சரஸ்வதி தேவி" என்று தானே
அவர் ஜோக் அடித்திருக்க வேண்டும்.
ஆனாலும்
மோசிகீரனையும்
பெருஞ்சேரல் இரும்பொறையின்
தமிழ் உணர்வையும் சேர்த்து
ஒரு வாரு வாரியிருக்கிறார்.
"முரசு" என்ற பெயர் அப்படி
ஜோக் அடிக்க வைத்திருப்பதில்
ஆச்சரியமில்லை.
"போங்கடா போக்கத்த பசங்களா
உங்களுக்கெல்லாம்
சங்கத்தமிழ் ஒரு கேடா "என்றும்
அவர் பொங்கியிருக்கலாம்.
இருப்பினும்
ஜெயமோகன் அவர்களே
கட்டுரையின் எல்லா பகுதியிலும்
தமிழ் மொழி பற்றிய ஒரு பெருமித உணர்வை
தாழ்வு மனப்பான்மை என்றே
சாடுகிறீர்கள்.
தமிழன் உணர்வை மழுங்கடித்து
மொட்டை போட்டு
சந்தனம் பூசும்
இந்துத்துவா நோயை
உடன் பிறந்தே கொல்லும் இந்த‌
புற்று நோயை
மர்மப்புன்னகையோடு
புகழ்ந்து வருகிறீர்கள்.
அதன் வெளிப்பாடு தான்
திராவிட சிந்தனையின் மீது
உங்கள் திராவக வீச்சு.

=========================================================
இதோ அந்த புறநானூற்றுப்பாடல்.
============================================================
50. கவரி வீசிய காவலன்!
பாடியவர்: மோசிகீரனார்.
பாடப்பட்டோன்: சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை.
திணை:பாடாண். துறை: இயன் மொழி.
குறிப்பு: அறியாது முரசுகட்டிலில் ஏறியவரைத் தண்டம் செய்யாது
துயில் எழுந் துணையும் கவரிகொண்டு வீசினன்
சேரமான்; அது குறித்துப் புலவர் பாடிய செய்யுள் இது.


மாசற விசித்த வார்புஉறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய, மஞ்ஞை
ஒலிநெடும் பீலி ஒண்பொறி, மணித்தார்,
பொலங்குழை உழிஞையடு, பொலியச் சூட்டிக்,
குருதி வேட்கை உருகெழு முரசம்
மண்ணி வாரா அளவை, எண்ணெய்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
அறியாது ஏறிய என்னைத் தெறுவர,
இருபாற் படுக்குநின் வாள்வாய் ஒழித்ததை
அதூஉம் சாலும், நற் றமிழ்முழுது அறிதல்;
அதனொடும் அமையாது, அணுக வந்து, நின்
மதனுடை முழவுத்தோள் ஓச்சித், தண்ணென
வீசி யோயே; வியலிடம் கமழ,
இவன்இசை உடையோர்க்கு அல்லது, அவணது
உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்:
வலம்படு குருசில்! நீ ஈங்குஇது செயலே?
====================================================

இப்படி மணித் தமிழ் ஒலியெல்லாம்
வெறும்
கோவில் மணிஒலியாகி
தமிழை வெளியே துரத்திய‌
ஆரிய ஒலிப்புகள் பற்றி
தவித்து தகித்து எழுதுவோரே
உங்கள் நையாண்டிக்குள் வருகின்றார்கள்.
புண்படுகிறதே தமிழ் என்று
மடல்கள் இட்டால் பழிகள் தூற்றி
அந்தத் தமிழையும்
மொய்த்து தின்று
அழிக்காமல் விடமாட்டோம் என‌
ஈக்களாய் மொய்த்து
சொற்கள் குவிக்கின்றீர்.
மோசிகீரன் பாடிய அந்த தமிழ் முரசு
உங்களுக்கு அத்தனை கேவலமா?
அந்த புலவர் போல நீங்களும்
தமிழில் ஒரு நுட்பமான இலக்கியம் படைக்கின்றீர்
என்று தான் இந்த தமிழன்களும்
உங்களுக்கு வாள் நீட்டாமல்
உங்கள் எழுத்துக்களுக்கு
கவரி வீசுகிறார்கள்.
அந்த நயத்தக்க நாகரிகம் துளியும் இன்றி
எப்போதும் தமிழையே..தமிழ்க்கலைஞர்களையே
தாக்குகின்றீர்.
"ஒரு பவுண்டு உன் மார்புச்சதையை"
கடன் தொகைக்குப்பதிலாக கேட்டானே
அந்த "ஷைலக்"
அது போல உங்கள் சிறந்த இலக்கியங்களுக்கு
மாறாக "தமிழ் இதயத்தைக்"க் கூறு போடத்
துடிக்கிறீர்கள் .
தமிழைக்கொண்டு தமிழின் மார்புக்கே
குறிபார்க்கும்
உங்கள் "மராமர" தந்திரங்களைத் தான்
உங்கள் சொற்களின் மூட்டையில்
பொதி சுமந்து கொண்டிருக்கிறீர்கள்!

============================================ருத்ரா இ.பரமசிவன்

1 கருத்து: