வியாழன், 20 அக்டோபர், 2016

கற்பனைகள் கூட ரணங்கள் தான்.


கற்பனைகள் கூட ரணங்கள் தான்.
=============================================ருத்ரா

நான் நடந்து நடந்து
ஓய்ந்த பாதங்களை
வீட்டில் உட்கார்ந்த போது
வருடிக்கொண்டிருப்பேன்
என் காலின் கீழ் அமர்ந்த
பொமெரேனியன்
நாக்கை சுழட்டி சுழட்டி
அதன் மூக்கையே
நக்கிகொடுப்பது போல்.
மூசு மூசு என்று
வரலாற்று குறுக்கு நெடுக்கு
கோடுகளின் ஓவியத்தின் மீது
தூரிகைகளின் மயிர் நாக்குகள்
நக்கிக்கொடுப்பது தெரிகிறது.
கண்ணீர்த்துளிகளும்
ரத்த விளாறுகளும்
வண்ணக்குப்பிகளிலிருந்து
சம்பவத்திரையின் மேல்
கொட்டிக்கவிழ்ந்தன.
ரத்தினம் பதித்த இருக்கைகளுக்காக‌
தலைகள் கொய்யப்பட்டு
இறைந்து கிடந்தன.
காலப்பரிமாணங்களின்
அடித்தொண்டையிலிருந்து
காறி காறி உமிழப்பட்ட‌
வெறியின் நீராய் வழிந்து
சித்திரமே நனைந்தது போல்
தெரிந்தது.
மக்களே கிளர்ந்து அவர்களுக்கு
வெறி பிடித்த போது
கொடுங்கோல் ராணி
அன்டாய்னெட்டை அந்த கில்லட்டினில்
ரத்தக்குழம்பு ஆக்கினார்களே
அதில் நியாயமும் அநியாயமும்
இப்படித்தான் நக்கி நக்கி சுவைத்தன.
நிகழ்வுகள் கோரமிருகமாய்
நம் முதுகுக்குப்பின்னே
தன் கோரைப்பற்களை
புருசுகளாக்கி
வரலாற்றை கீறிக்கொள்ள‌
நீள நாக்கில்
சொட்டிக்கொண்டே  இருக்கின்றன.
பசுவின் கன்றுக்காக தன மகனையே
தேரின் சக்கரத்தில் இட்டு
நீதியை மிகவும்  உயர்த்திவைத்திருந்த
சோழனை
வாய் வலிக்காமல் சொல்லிக்கொண்டே
எத்தனை நியாயங்களை
நாம் இன்னும் நசுக்கி நசுக்கி
கொன்று கொண்டிருக்கிறோம் .
பொசுக்கென்று
ஒரு மரண தண்டனை
சவுதி அரேபியாவில்!
நம்மையெல்லாம்
அது அதிர வைத்து விட்டது.
ஒரு நட்பை கொலை செய்து
கடும் குற்றத்தை புரிந்தது
தன் இளவரசு என்றும் பாராமல்
உடனே
அந்த மரண தண்டனை!
மனித நாகரிக மலர்ச்சிக்கு
இது உறுத்தலாக இருந்த போதும்
ஒரு நியாயமே பீறிட்டெழுந்து
நிலை குத்தி நின்று
நம்மை பொறிகலங்க வைத்துவிட்டது.
வரலாறு எனும் காட்டாறு
கபாலங்களையும்
வெட்டிய உடல்களையும்
கூழாங்கற்களைபோல
உருட்டிக்கொண்டு வருவதில்
கண்ணுக்குத்தெரியாத
ஒரு எந்திரத்தனத்துடன்
எக்காளமிட்டுக்கொண்டு வருகிறது.

கி.பி கி.பி என்று
அந்த எண்கள்  எனும்  வருடங்களின்
வருடல்களில்
எதை "புள்ளிவிவர இயல்" படி
பிளந்து பார்ப்பது
அதாவது இன்டர்பொலேட் செய்வது?
கற்பனைகள் கூட ரணங்கள் தான்.

===========================================================

1 கருத்து: