வெள்ளி, 21 அக்டோபர், 2016

கலக்கி அடிக்கிறார் "தர்மதொரை"

கலக்கி அடிக்கிறார் "தர்மதொரை"
=========================================ருத்ரா இ பரமசிவன் 
(விஜய் சேதுபதி)

அண்ணந்தம்பி கதை
ஆயிரம் வந்துருச்சு.
ஆனாலும்
அண்ணங்களே தம்பியை
"போட்டுத்தள்ளும்"
கொடூரத்துக்கு
படம் ஏன் தாவியது.
சீனு ராமசாமி
"குடியிருக்கும்"
திரைக்கதைக்குள்ளே
டாஸ்மாக் "குடி"யிருந்து
டார்ச்சர் பண்ணுது.
விஜய் சேதுபதி
இழவு வீட்டு
குத்தாட்டத்தில்
சாராய நாற்றத்தோடு வாழ்க்கையின்
சாராம்சத்தையும்
மனம் உருக பிழிந்து காட்டுகிறார்.
வடக்கத்திய தமன்னா கூட‌
ஒரு கவிஞர் எழுதிய மாதிரி
"வெள்ளாவி"யில் வச்சு எடுத்த‌
வெள்ளை ரோஜாவாய்
விஜய சேதுபதியுடன்
"எந்தப்பக்கம் பார்த்தாலும்
வானம் ஒன்று தான்"
என்ற பாட்டில்
வானச்சிரிப்பின் மின்னல் பூவாய்
மத்தாப்பு கொளுத்துகிறார்.
தமிழனுக்கு
குடித்து நாசமாகாதே என்பதையும்
நடித்து தான் காட்ட வேண்டியிருக்கிறது.
இதுவும்
நமக்கு "வாத்தியார்"
கத்துக்கொடுத்த பாடம் தான்.
குடிப்பது போலே நடிப்பார்
நடிப்பது போலே குடிப்பார்
என்று அபிநயித்து
"குடி"யிருந்த கோயிலாய் தான்
தமிழ் நாட்டை ஆக்கி விட்டிருந்தார்.
இதில் ராதிகாவுடன்
விஜய்சேதுபதி
பேசும் வசன‌ங்கள்
முள் போல் தைப்பது
அவர் நடிப்பின் கூர்மை!
குதர்க்கத்தை தர்க்கமாக்குகிறார்.
கழுதையை குதிரையாக்கி
ஓடும் பொய் வாழ்க்கையின்
தள்ளாட்டங்களை
தள்ளாட்டம் இல்லாமல் தத்துவமாக்கி
"பொளந்து"கட்டுகிறார்.
இவர் நடித்த
"சூது கவ்வும்"என்ற படத்தின் தலைப்பின்
முன் வரிகள் "தர்மத்தின் வாழ்வுதன்னை"
என்பது எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்?
தெரிந்திருந்தால்
அந்த நெருப்புக்கவிஞன் பாரதியின்
உருட்டுவிழிகளில் சுடரும்
விடியல் தெரிந்திருக்கும்!
ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா
என்று அவன் அழைத்ததும்
காதில் நுழைந்திருக்கும்!
இப்படி இருட்டுக்குள் நுழைந்து
குடியின் "வர்ண வர்ண தேசங்களை"
காண நேர்ந்திருக்காது.
இருப்பினும் விஜயசேதுபதியின்
கனல் துண்டுகள் தெறித்துவிழும்
விழிகளின் நடிப்பில்
புதிது புதிதாய் நாம்
பல பரிமாணங்களை பார்க்கின்றோம்.
குடியின் தீமைகளை விளக்கமட்டும்
படம் எடுத்தால்
அது வெறும் பிரச்சாரமும் அரசியல் நெடியும்
கலந்ததாக வறண்டு போய்விடும்.
எனவே தான் மூணு வித கலர்க்கன‌வுகளும்
மூணு நாயகிகளும்.
இந்த மசாலாவுக்குள்
திகிலும் அதிர்ச்சியுமாய்
கொஞ்சம் பொடி தூவியிருக்கிறார்கள் கதையில்.
ராஜேஷின் ப்ரொஃபெஸ்ஸர் பாத்திரம்
விஜய சேதுபதியோடு
மெருகு கூட்டுகிறது.
ராஜேஷுக்கு அவர் குரல் தான் நடிப்பு.
குழைவு கனிவு ஒரு கம்பீரம் மற்றும் கணீர் ஒலி
இத்தனையின் சங்கமமே அவர்.
வெகு காலம் கழித்து தலை காட்டியிருந்தாலும்
இன்னும் நடிப்பின் சதுரங்க கட்டத்தில்
ராஜா தான்.
அவர் மகள் ஐஸ்வர்யாவின் களையான எளிய தோற்றம்
எல்லோராலும் பெரிதும் ரசிக்கப்படுகிறது.
எம் எஸ் பாஸ்கர் எந்த கோணத்திலும்
நம்மை கிச்சு கிச்சு மூட்டியும்
குணசித்திரத்தைக்காட்டியும் நெகிழ்த்திவிடுவார்.


விஜய சேதுபதி அவரது இரண்டாவது சகாப்தத்தில்
நுழைந்து விட்டார்,
முந்தைய படங்களில்
கதையின் அழுத்தத்தையும் கனத்தையும்
ஒன்றாய் தாங்கி
வெண்கொற்றக்குடை ஏந்திய ராஜாவாய் வருவார்.
இப்போது "கதாநாயக" ஒளிவட்டம் மட்டும்
தலையில் சூட்டிக்கொண்டு
அலப்பறை செய்கிறார்.
ஒரு கட்டத்தில்
நடிகர் திலகம் "மூக்கைச்சிந்தினாலும்" (புதிய பறவை)
பெரும் நடிப்பென ரசிக்கப்பட்டது.
ரஜனியோ சிகரெட் தூக்கிப்போட்டு வாயில் பிடிப்பது
என்ற மேன்னரிசத்தில் துவங்கி
ஸ்டைல் மன்னனாய் சூபர்ஸ்டார் ஆகிவிட்டார்.
ஆனால் வெறும் யதார்த்தம் காட்டி சூப்பர்ஸ்டார்
ஆகி விட்டவர் விஜய சேதுபதி.
ஆனால் இந்த இரண்டாம் சகாப்தத்தில்
மசாலா சேதுபதியாய்
பழைய புழுக்கூட்டை (கொகூன்) உடைத்துக்கொண்டு
பட்டாம்பூச்சியாய் பறக்க நினைக்கிறாரோ.?
அதற்கு "பாஷா" போல கதை அமைத்து
பாதை போட்டுவிடுவார் சீனுராமசாமி!
ஒரு ரஜனிபதியாய் அல்லது சிவாஜி சத்ரபதியாய்
அவர் ஆரோகணித்து வந்திடுவார் என்பதை
கட்டியம் கூறுவதே இந்த "தர்மதுரை".

==================================================================
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக