செவ்வாய், 25 அக்டோபர், 2016

"கடவுளும் கந்தசாமியும்"

"கடவுளும் கந்தசாமியும்"
================================================ருத்ரா


"உனக்கு என்ன வரம் வேண்டும்"
வாலிபன் கந்தசாமியாகிய நான்
குரல் கேட்டு சுற்றும் முற்றும் பார்த்தேன்.
கடவுள் குரல் தான் அது!
கடவுள் கேட்டார்
எனக்கு பளிச்சென்று பொறி தட்டியது.
"இறைவா 
அவள் கடைக்கண் என் மீது விழவேண்டும்.
அதோடு
என்னிடம் அவள்
ஐ லவ் யூ சொல்லவேண்டும்."

"தந்தேன் வரம் "

மறைந்து விட்டார் அவர்.

அவர் சொன்னது போல்.
அவள் எதிரே தோன்றினாள் 
வா என் அருகில் வா 
என்றாள்
அடக்க முடியாத ஆசையில் 
அவள் அருகில் சென்றேன்.
என் தலையை நெகிழ்ச்சியோடு வருடினாள்.
எழில் கொஞ்சும் தோற்றத்தில்
அம்பிகை போல் நின்றிருந்தாள்.
அவள் தான் சந்தேகமில்லை.

"வா மகனே வா."

"என்னது.  மகனேயா"..
வடிவேல் பாணியில் வீறிட்டுவிட்டு
மயங்கி வீழ்ந்தேன்.
கூட்டம் கூடிவிட்டது.
தண்ணீர் தெளித்து
என்னை எழுப்ப முயன்று கொண்டிருந்தார்கள்.
நான் இன்னும் கண் விழிக்க வில்லை.
கனவு உலகில் நான்.
என்னைச்சுற்றி பஞ்சு பஞ்சாய்
மேக மண்டலங்கள் .....
அங்கே ...
கொண்டையில் பூ சுற்றிக்கொண்டு
துந்தணாவை நிமிண்டி விட்டுக்கொண்டு
நாரதர் "நாராயணா" என்றார்.
அவரிடம் 
எங்கே ஈசன் என்று
அவர் கொண்டையை பிடித்து ஆட்டி 
கோபத்துடன் கேட்டேன்.
ஈசன் பின்னாலேயே நின்றிருந்தார்.
இறைவா என்ன சோதனை.?
ஏன் இப்படி பண்ணி விட்டீர்கள்..
அவர் விளக்கினார்.
"ஓ அதுவா!
நீ என்னவோ சொன்னாயே என்ன ..அது...
ஆம் "லவ்"..அது என்ன என்று 
நாரதரைக்கேட்டேன்.
அன்பு என்றார்.
ஓ ..அப்படியா!
அம்பிகையின் கடைக்கண் வேண்டும் 
அவள் அன்பு வேண்டும் என்று தான்
கேட்கிறாய் போலிருக்கிறது என்று
அவளை உடனேயே அனுப்பினேன்..."

"போதும் சாமி..போதும்..
"உங்களுக்கு ஒரு கும்பிடு
உங்கள் வரத்துக்கும் ஒரு கும்பிடு"

கூட்டத்திலிருந்து
திமிறிக்கொண்டு ஓடினேன்.
எதிரே யார் நின்று கொண்டிருக்கிறார்கள்?
தெரியவில்லை.
அவரையும் முட்டி மோதிக்கொண்டு
தலை தெறிக்க ஓடினேன்.
எதிரே புதுமைப்பித்தன் தான்
"கட கட வென்று "சிரித்துக்கொண்டு
நின்றிருந்தார்.

=========================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக