அன்று ஒரு நாள் இப்படித்தான் சிரித்தாய்.
===============================================ருத்ரா
அன்று ஒரு நாள் இப்படித்தான் சிரித்தாய்.
என் நரம்பில் தெறித்த பூவாணமாய்.
பூத்தையல் போட்ட புது வானமாய்.
அப்படி என்ன சொல்லி விட்டேன்?
நான் உன்னை காதலிக்கிறேன்.
நீ என்னை காதலிக்கிறாயா? என்று.
அது என்ன பண்டமாற்றா?
நீ கேட்டாய்.
ஏதாவது ஒரு வாக்கியத்தை தான்
நான் சொல்லியிருக்க வேண்டும்.
நான் உன்னை காதலிக்கிறேன் என்று
நிறுத்தியிருந்தால்
அதற்கும் நீ சிரித்திருப்பாய்.
ஆனால் அதற்கப்புறம்
உன் தூக்கம்
சூடான தோசைக்கல்லில் உடைத்த
ஹாப் பாயிலாய்
சிதைந்து
மஞ்சளும் வெள்ளையுமாய்
ரங்கோலி ஆகியிருக்கும்.
உன் எம் எம் ஃபோம் கூட
சுநாமியாய்
எங்கோ உன்னை சுருட்டி வீசியிருக்கும்.
மறுநாள் என்னைப் பார்க்கும் ஆவலில்
கல்லூரி வகுப்புக்குள்
என்னை எதிர்பார்த்து ஆவலுடன்
விழித்தூண்டில் வீசிக்கொண்டு
கண்ணுக்கு தெரியாத அந்த "தக்கையில்"
கண்பூத்து நின்றிருப்பாய்.
நான் வந்தவுடன் என்னை ப்பார்த்தவுடன்
அதே அலட்சியம்..
வேறு ஒரு விட்டம் நோக்கி
வெறும் பார்வை.
அப்போதும் இதே சிரிப்பு..
நான் கண்டுபிடித்து விட்டேன்
அந்த கதிர்வீச்சின் கண்ணாடி இழைக்கீற்றுகளில்
ஊமையாய்
ரகசியமாய்
ஒரு கண்ணீர்த்துளி
முத்துக்கோத்துக்கொண்டிருப்பதை.
அது போதும்.
அதற்கே நான்
"பேண்ட்"அணிந்துகொண்டிருந்த போதும்
ஒரு "லுங்கி" டான்ஸ்க்கு அபிநயம்
காட்டிக்கொண்டிருப்பேன்.
அதைக்கண்டு
நீ வெடுகென்று திரும்பினாலும்
அங்கு ஒரு "க்ளுக்" சிரிப்பு
எனக்கு பன்னீர் தெளித்துக்கொண்டிருக்கும் என்று
நிச்சயமாய் தெரியும்.
===============================================
14 மே 2015ல் எழுதியது.
2 கருத்துகள்:
bro
get out of love
you will achieve more
Anbu Nanbare
Of course ,You are right. But when I get out of love I find that I am out of date.
anbudan ruthraa.
கருத்துரையிடுக