வியாழன், 13 அக்டோபர், 2016

ஈடன்
ஈடன்
============================================ருத்ரா இ.பரமசிவன்

என்ன ஊற்றுப்பார்க்கிறாய்?
அரைக்கால் விழியைக்கூட அன்று நீ
அடையாளம் காட்டவில்லையே.
குமுக்கு சிரிப்பொன்று
குமிழ்த்து விட்டு
அமிழ்த்து விடுவாய்
குற்றாலத்தின் அந்த‌
ஒரு பொங்குமாங்கடலில்.
நான் கூட மங்குஸ்தான் கனி கொடுத்து
கெஞ்சினேன்
உன் மாம்பழக்கன்னத்துக்கு
பண்ட மாற்றாய்.
நீ விட்டில் மாதிரி மறைந்து விட்டாய்
அந்த பெண்கள் கூட்டத்தில்.
வகிடு பிரித்து படரும்
ஐந்தருவிப்பெண்ணின் நீர்க்கூந்தலுள்
சிக்கிக்கிடந்த போது
உன் மயிர்க்காட்டின்
தூரிகை சிலிர்ப்புகளை நான்
ஓவியங்கள் ஆக்கினேன்.
இன்று உறுத்துப்பார்க்கிறாய்.
உன் முழுவிழியையும்
கருநாவல் கனித்திரட்சியாய்
விண்ணென்று கவண்கல் போல்
என் மீது வீசுகிறாய்.

பிஞ்சுக்காதல் எல்லாம் வடிந்த பின்னே
முற்றிய காதல் முன்
நாணத்தின் மென்மை முனை முறிந்த வீச்சில்
உற்றுப்பார்க்கிறாய்.
நீ பாய்ச்சிய நங்கூரத்தில்
என்னை உன் விழி விளிம்பில்
நிறுத்தி வைத்திருக்கிறாய்.
காதல் கனிந்து கடிமணம் கூடிய பின்
அந்த தொட்டாற்சிணுங்கித்தனம்
தொலைந்து போனதே.

"போதும் அருவியில் ஆட்டம் போட்டது.
இருட்டும் முன் வீடு போய் சேருவோம்."

கூட்டாஞ்சோற்று சம்புடங்களை அள்ளிக்கொண்டு
கூடவே கொண்டு வந்திருந்த‌
நகைக்கடைக்காரன் கொடுத்த‌
விளம்பர ஃபோம் லெதர் பைக்குள்
நனைந்த துணிகளைத்திணித்துக்கொண்டு
என்னையும் கையோடு இழுத்துக்கொண்டு
பஸ்ஸில் திணித்துக்கொண்டாய்.
வீட்டின் கட்டில் அறையில்
கன இருளில்
கலந்து கொள்ளும் அவசரம்.
இன்பத்தின்
கிளேசியர் பனி விழுதுகள்
தோரணம் கட்டும்
ஒரு கோக்கூனுக்குள்ளே
அடைந்து கொள்ளும் ஆவேசம்..
மெல்லிய பட்டாம்பூச்சி இறகுகளின்
சாமர வீச்சுகளில்
காதல் கசிந்த காற்றுபிழம்புடன்
மானசீகமாய்
மெகந்தி வரைந்து கொண்டிருந்த‌
பெண்மையின்
அந்த சிற்றாறு இன்று காட்டாறு ஆனது.
அடர்த்தியான காதல்
பாம்புச்சட்டையை கழற்றிக்கொண்டுவிட்டது.
மரக்கிளையை சுற்றிக்கொண்டிருந்த பாம்புக்கு
வெட்கம் பிடுங்கிதின்றது.
பிளந்து பிளந்து நாக்கு நீட்டிய போதும்
அது கண்களை மூடிக்கொண்டது.
தேவனும் சைத்தானும்
முறுக்கிக்கொண்டது போதும் என்று
ஒப்பந்தம் போட்டுக்கொண்டார்கள்.
உயிர்ச்சங்கிலியை கோர்த்துக்கொண்டே
போவதற்கு மட்டும் அல்ல‌
இந்த காதல்.
ஆரியன் காவு டன்னல் நுழைந்த‌
ரயில் போல‌
சைபர் குகைக்குள் சல்லாபம்
செய்வதற்கும்
டி.வி காட்சிகளில்
சுளுக்கிய இடுப்புகளுக்கு
களிம்பு தடவி
காசுகளை அள்ளுவதற்கும் கூட‌
காதலே துணை.
தடுக்கப்பட்ட மறைக்கப்பட்ட‌
பழம் கடித்துக் குதறப்பட்டுவிட்டது.
ஈடன் தோட்டம்
கொம்பு துருத்தி முட்டி
கொழுப்பு விடைத்து மோதிக் களித்து
விளையாடும் கிடாய்களுக்கு
குத்தகை விடப்பட்டு விட்டது.
ஆதாம் யார்?ஏவாள் யார்?
வித்யாசம் இல்லை.
எரிகின்ற தீ மட்டுமே சிவப்பாக எரிகின்றது.

======================================================
20.10.14ல் எழுதியது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக