சனி, 15 அக்டோபர், 2016

மாமனிதன் அப்துல் கலாம் எனும் ஒப்பற்ற ஒளியே!




http://i.ndtvimg.com/i/2015-07/apj-abdul-kalam_640x480_41438055167.jpg




மாமனிதன் அப்துல் கலாம் எனும் ஒப்பற்ற ஒளியே!
===============================================
ருத்ரா இ பரமசிவன்



மீண்டும்
உயிர்த்தெழுந்து வந்து
நிற்கிற
இந்த மண்ணின் உருவகமே!
இறந்த நாள் என்று
அன்று நாங்கள் கொட்டிய
கண்ணீரின் கனமழையில்
மரிக்கவே மறந்து
மறுபடியும் முகம் காட்டும்
எங்கள் கனல் ரோஜாவே!
குடியரசு தலவர் என்ற உயர்நிலை
நாங்கள் அளித்த போதும்
அந்த நீண்ட கோட்டின்
ஒவ்வொரு பித்தானிலும்
மக்கள் இதயங்களை
கொத்து கொத்துகளாக‌
கோடி உள்ளங்களாக அல்லவா
அணிந்திருந்தாய்!
உன் விஞ்ஞானம்
இந்த தேசத்துக்குள்
விதையூன்றி விருட்சம் ஆனது.
விண்வெளியில்
இந்திய மண்ணின் மகத்தான‌
வெற்றிக்"கையெழுத்தும்"
வலம் வந்து கொண்டிருக்கிறது.
எங்கள் கோடிக்கைகளையும்
அறிவின் கூர்மை தீட்டி
ஒரே கையாக்கி உயர்த்திக்காட்டினாய்.
நியூடிரினோ
இன்னும் எங்கோ ஒளிந்து கொண்டு
இன்னும் கண்ணாமூச்சி ஆடுகிறது..
ஆம் அது உன் "கனவின்"
கதிர்வீச்சைப்போல!
நீ கொடுத்த உறுதியும் நெஞ்சுரமும்
விஞ்ஞானத் தீக்கொளுந்தும்
எங்களிடம் இன்னும்
சுடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
நாங்கள் இன்னும்
இருட்டை அள்ளிப்பூசிக்கொண்டிருக்கிறோம்
என்று நீ
"அக்கினிசிறகில்" வலம் வந்தாய்.
அதில்
கடவுளும் சைத்தானும்
தங்களுக்குள் முட்டி  மோதி
கொம்பு முறுக்கிக்கொள்ளும்
கதைகள் இல்லை.
பக்கம் தோறும்
நம்பிக்கை அவநம்பிக்கையை
காலில் போட்டு மிதித்து
நசுக்கிய தடங்களே அதிகம்.
கனமான இருளெல்லாம் அறிவின்
கனவுகளால்
அழித்துத் துடைக்கப்பட்டிருந்தது !
மண்ணில் புதைத்தாலும்
விண்ணில் முகம் காதி ட்டுபவன் நீ!
விண்வெளிக்கு ஏதோ
கடவுளைத் தேடி போயிருக்கிறாய்
என்று இவர்கள் நினைக்கலாம்.
ஆனால்
சூரியனே மங்கிப்போகும்
அதோ அந்த கண்களைப்பாருங்கள்!
அந்த மாமனிதன்
நம்மை நோக்கி அல்லவா
உற்றுப்பார்த்துகொண்டிருக்கிறான்.
அப்துல் கலாம் எனும்
அறிவார்ந்த‌
மனித நேயம் கலந்த‌
ஒப்பற்ற ஒளியே!
நீ ஒளிந்து ஒளிந்து விளையாடினாலும்
எங்கள் இதயங்களின்
ஆரிக்கிள் வெண்டிரிக்கிள் அறைகளுக்குள் தான்
ஓடி ஓடி ஒளிந்து வெளிப்படுகிறாய்.
ஆம்
உன் கனவே
இந்த இளைய பாரதத்தின் கனவு!

========================================================================
10/14/15 ல் எழுதியது

2 கருத்துகள்:

Puwa சொன்னது…

The man with man kind!

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

the gods are in Que to simulate the mankind but they miserably failed

கருத்துரையிடுக