வியாழன், 14 ஆகஸ்ட், 2025

ERODE THAMIZHANBAN/14.08.25

 


ஊர்களுக்கு வேறுவேறு பெயர்கள்
தெருக்களுக்கு வேறுவேறு பெயர்கள்
ஓர் ஊருக்குள் மற்றோர் ஊர்வந்து
படுக்கைபோட்டால் என்னாகும்?
ஒரு தெருவிலேயே
இன்னொரு தெருவந்து கடைகள்
திறந்தால் எப்படி?
விலகிச் சிந்தித்ததால்
ஒரு சாக்கட்டீசு அறிவு வரலாற்றுப்
புத்தகத்தில்புதிய பக்கத்தைத்
திறந்துவைத்தான்
கலிலியோ அறிவியல்
பூமியையே சுழற்றத் தொடங்கியது
விலகிநின்று
ஞானம்தேடியவர்
புத்தனாக மக்களுக்குள்
திரும்பி வந்தார்
விலகவும்விலக்கவும்
அரிச்சுவடித் திண்ணையில் வழிகாட்ட
யாரும் இருக்கமாட்டார்கள்
வந்ததை நினைவின் கைகளில்
கொடுத்துவைக்கலாம்
வராததைக் கனவின்கைகளில்
கொடுத்துவைக்கலாம்
நிழல் உருகிஉருகி
உன்நெஞ்சுக்குள் ஓடையாகத்
தவழ்ந்துவரும்
வெளிச்சவிதைகள்
முனைநெகிழ்ந்து உன்அறிவில் ஒளிப்பள்ளிக்கூடங்கள் ஆயிரம்
திறந்துவைக்கும்
கண்ணாடிகளில்
தெரியும் பிம்பங்களில்சொக்கிக்
கிடந்ததுபோதும்
அவை
கட்டமைக்கப்பட்டவை கற்பனையானவை
உண்மையின்
ஒருநொடி வினாவுக்குத்
தாக்குப்பிடிக்க முடியாதவை.
விலகிவெளியே வா
பிம்பங்கள் உடைபடும் ஓசையின்
அடியே கிடந்து அலறப்போவதும்நீதான்
உன்னை உன்னிலிருந்து விலக்கி
ஒருநாளேனும் உரையாடமாட்டாயா?
14-8-25 காலை 8-22
தலைப்பு- விலகுவதால்.......

__________________________________________________________


ஈரோடு தமிழன்பன் அவர்கள் பிழிந்து தெறித்த‌ கவிதைச்சாரல் கற்பனையின் மலைப் பிம்பங்களிலிருந்து பளிங்கு நடையில் சொற்களை பல்லாங்குழி ஆடியிருக்கிறது. எழுத்துக்களின் பஃறுளியாறு அவர் பேனாவுள் கல் பொருது சொல் பொருது பிரளயங்களை பிரசவித்ததில் அந்த கணியன் பூங்குன்றனும் கண் விழித்தான். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்ற சொல்லடாலை நீ உன் ஆற்றுப்படுகையின் ஆற்றுப்படையில் தீ மழை பெய்து கூட‌ குளிர் பூந்தென்றலின் குழைக்கின்ற கவரியாக அல்லவா உரு மாற்றி உரு தந்திருக்கிறாய் என்று வியந்திருக்கிறானே அது எப்படி? தமிழன்பன் அவர்களே உங்கள் சொற்பெருக்கில் அவன் கொஞ்சம் தலை நனைத்துக்கொண்டான். அவன் எழுத்தாணியின் அடியில் உங்கள் பிம்பம் இருந்தது கண்டு இறும்பூது கொண்டான். இது காலப்பரிமாணம் சட்டை மற்றிக்கொண்ட‌ ஒரு குவாண்டம் என்டாங்கில்மென்ட் ஆகவும் இருக்கலாம்! ________________________________________ சொற்கீரன் (ஈரோடு தமிழன்பன் அவர்கள் 14.08.25ல் எழுதிய கவிதைக்குள் இருந்த பிம்பம் பற்றிய கவிதை)

__________________________________________________

"ஊர்" எனும் வினையாகுபெயரே
நம் இருப்பிடங்களுக்கு
இலக்கணம் என்று
பெயர்ப்பலகை வைத்துவிட்டது தமிழ்!
வினைக்கு ஆகி வந்ததால் தான் 
அது என்று
ஒலியின் மூச்சுக்குள்
தமிமைச் செருகி வைத்த தமிழே!
நாங்கள் புழுக்களாய்த்தான்
நசுங்கி நசுங்கி ஊர்ந்து 
கொண்டிருக்க வேண்டுமா?
தமிழன்பன் அவர்களே
உங்கள் சொற்களின் கட்டுமானம் 
என்பதில்
தன் மானம் மிகக்கனமாகவே இருக்கிறது.
அது தான் இனி நம் நம்பிக்கைச்சுடர்! 
"ஸ்தல புராணம்"
என்று 
தூப தீபம் காட்டிக்கொண்டிருக்கும்
பக்தித்தமிழ் 
நம் கல்லறையைத்தான் 
இப்படி பிரமாண்டமாய் கட்டி வைத்து
கட்டி வைத்தவன் கூட தோஷமானவன் 
என்று தள்ளிவைத்திருக்கிறது.
ஏதோ தெரிகிற பிம்பங்கள்
நம்மைப் பிய்த்து பிய்த்து
சிதலமாக்கிக்கொண்டிருக்கிறது.
தீந்தமிழ் என்று இனித்துக்கொண்டிருந்தது
போதும்...தமிழா!
தீத்தமிழின் அறிவுப்பொறிகள்
உன்னைச் சூடேற்றும் நாள்
எந்நாளோ?
________________________________________
சொற்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக