கவிஞர் அவர்களே
அது எப்படி
உங்களுக்கு இந்த
கண்ணாமூச்சி விளையாட்டில்
அந்த "இலந்தை வடகத்தை குழியிட்டு"
ஒளிந்திருக்கும்
அந்த "வைரலை"
வலை வீசிப்பிடிக்கத்தோன்றியது.
இப்போது "வைரல்"
எல்லாம் நம் செல்லப்பிள்ளைகள் தான்.
நாலு வரியை தேய்த்து தேய்த்து எழுதி
அதனோடு
பாட்டும் கூத்துமாய்
கேமிராக்குப்பையிலிருந்து
சிலவற்றை தோரணம் கட்டி
தொங்கவிட்டால்
வைரலோ வைரல் தான்.
இருப்பினும் உங்கள்
"இலந்தை வடகக்குழி"
உங்கள் பிரபஞ்சத்தினவுகளின்
அற்புதமான இலக்கிய
ப்ளாக் ஹோல்.
கவிதைக்கு சொற்பஞ்சம் ஏற்பட்டால்
காய்ச்சல் வருவதுண்டு.
உங்கள் கவிதைகளில்
சொற்பிரளயங்களே அலையடிக்கும்.
உங்களுக்கு
சொல்வெள்ளமே
நோய் ஆகுமா என்ன?
அதெல்லாம் இருக்காது.
கருப்பொருளில் தான் கனமான
வியாதி வந்ததாய்
ஒரு அடிமட்டத்துக்கற்பனை.
தமிழ்
தன் தமிழ் ஒரு தட்டுப்பாடு நோயினால்
தள்ளாடுகிறதோ
என்ற கவலை நோய்
காய்ச்சலாய் உங்களை
காய்த்திருக்கலாம்.
அப்புறம் என்ன?
நம் தமிழின் உயிர் மூச்சு
சிந்து வெளியிலும் கீழடியிலும்
குரல் வளை நெறிக்கப்படும் போதும்
டிக்கட் முன்பதிவே
நூத்தம்பது கோடி வசூல் என்று
எச்சில் இலைப்பட்டாளங்களாய்
சினிமா வைரல்களில்
சிதிலங்களாய் சிதறிக்கிடக்கும்
நோய் பற்றி என்ன நொந்தல் கொள்வது?
கவிஞனின் காய்ச்சல்
சமுதாயத்தின் காய்ச்சல்.
அதுவும்
"ஈரோடு தமிழன்பனின்"
அந்த பேனாவுக்குள்ளும் ஏற்பட்ட
உள் காய்ச்சல்
இப்படியே போனால்
தமிழ் நெஞ்சங்களின்
"சஹாரா"க்கள்
தமிழைச்சருகுகளாய் சிதறடித்து விடுமே
என்பது தான்.
காய்ச்சலின் அந்த தேய்ந்த முனகல்களிலும்
ஒரு பாய்ச்சலுடன்
முழங்குவோம்.
தமிழ் வாழ்க! தமிழ் வெல்க!
________________________________________
சொற்கீரன்
(11.8.25 ல் "காய்ச்சலின் கடைசி மூச்சு"
என்ற தலைப்பில் ஈரோடு தமிழன்பன் அவர்கள்
எழுதிய கவிதைப்புயலில் மூச்சு வாங்கி
நான் எழுதியது.)
______________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக