வரிசையாய்
அந்த மராமரங்கள்
உங்கள் முதுகுக்கு
வறுமை வில் வளைத்து
அம்புகள் விட்டபோதும்
அவை
உங்கள் காகிதங்களை
ரத்தத்தில் நனைத்த போதும்
நீயும் சொன்னாய்
"இன்று போய் நாளை வா"
என் எதுகை மோனைகளின்
கூர்மை என்ன செய்யுமோ உன்னை?
கூர் தீட்டிக்கொண்டு வா
உன் அவதார அவசியத்தை என்றாய்.
என் சீதை அன்னையே
பூமிககுக்கெல்லாம் பூமி.
அவளை
எந்த மரத்துக்கு உரமாக்க
இந்த பூமிக்குள் புதைய விட்டாய்?
போ
இன்னும் எத்தனை சம்புகன்களின்
தலைகள் உனக்கு வேண்டுமோ?
உன்னை எழுதிய வால்மீகியைக்கூட
தீட்டு ஆக்கிவிட்டாயே
என்று அவனுக்கும் சிரச்சேதம் என
உன் ரிஷிகள் உனக்கு
இன்னுமா போதிக்க வில்லை?
என்று கேட்கிறாய்.
இவர்கள் இங்கே எடுக்கிறார்களே
"அவதார்"
அந்த ஆரண்யங்களின் ஆத்மாவைக்
காக்க
இவர்கள் முறித்துக்கொள்ளும்
உடல்களை விடவா
உன் தனுஷ் வில் உயர்ந்தது?
உங்கள் தேவலோகங்களின்
விதிமீறல்களை சரிப்படுத்த
எங்கள் "அவதாரங்களே"
வானத்துக்கு ஏறும்
அவரோகதாரங்கள்!
சரி.
நான் அகத்தியன் அருவியில்
குளிக்கப்போகிறேன்.
நீயும் வாயேன்
குளித்துக்கொள்ள.
தெரியுமா?
இதை நன்றாக உற்றுக்கேள்
அவர் உனக்கு எழுதிய
ஆதித்யஹ்ருதயம்
நன்றாக பளிங்குத்துல்லியமாய்
கேட்குமே!
வா! குளிக்கலாம்!
என்றெல்லாம் கூப்பிடுகிறாய்.
ஓ!எங்கள் அருமை விக்கிரமாத்தக்கவிஞனே!
ஹிந்தி வேதாளங்கள் உன்
தோளில் சவாரி செய்ய வந்திடலாம்.
உன் தமிழ்த்தீப்பந்தங்கள்
உன்னைக்காப்பாற்றட்டும்.
சொற்கீரன்.
_______________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக