தம்பி செங்கோடி!
___________________________________
தம்பி செங்கோடி!
எங்கோ நோக்கியோ
அல்லது
எங்கிருந்து கொண்டோ
உனக்கு குரல் கொடுக்கும்
என் உள்ளம் இன்னும்
நைந்து தான் கிடக்கிறது.
அண்ணன் என்றால்
தம்பியோடு
போட்டி போடுவதா?
அப்புறம் அந்த
அன்பின் சதுரங்க விளையாட்டில்
யானையும் குதிரையும்
ஒன்றுக்கொன்று தாக்கிக்கிடக்கும்
ரத்தக்களம் தானே மிஞ்சும்?
தம்பி
நீயும் என்னோடு "எசலியிருக்கிறாய்".
நானும் நீயும்
அந்த பத்துப்பன்னிரெண்டு வயது
ஆரண்ய காண்டங்களில்
நிறைய விளையாடி இருக்கிறோம்
அம்புகள் இல்லாமல்.
நான் சூரியஒளியில் லென்ஸ் பிடித்து
பிலிம் துண்டுகளைக் காட்டி
நம் வீட்டுப் "பட்டால" டூரிங்க் டாக்கீஸில்
சினிமா காட்டுவேன்.
நம்ம சேக்காளிகள்
ஆளுக்கு ஒரு பாக்கு(அப்போது அது தான் டிக்கெட்)
எடுத்துக்கொண்டு சினிமா பார்க்க
வருவார்கள்.
நம் மகிழ்ச்சி நிறைந்த விளையாட்டு அது.
உன் ஒத்துழைப்பில் தான் அது முடியும்.
ஆனால்
உனக்கு அன்று ஏதாவது ஒரு கோபம்
உன்னிடம் மேகம் போல் மூடியிருக்கும்.
அப்போது
அந்த ஆட்டத்துக்குரிய லென்ஸ் ஒட்டிய அட்டை
ஃபிலிம் துண்டுகள் இதையெல்லாம்
சிதறியடித்து விட்டு ஓடி விடுவாய்.
அப்போது என் கோபம்
வெறும் ஊமைக்கோபம் மட்டுமே.
தம்பி..
அந்த காட்சிகள் எல்லாம்
ரணமாகிப்போன சோகப்படலங்களாய்
இன்று சினிமா காட்டுகிறது.
அன்று உன் இறுதிக்கட்டத்தில்
நீ உன் மருத்துவமனைப்படுக்கையில் இருக்கும்போது
"இப்போது அவனுடன் பேசமாட்டேன்.
வீட்டுக்குப் போய்த் தான் பேசுவேன்"
என்று சொல்லிவிட்டாயாம்.
அப்புறம் நீ பேசவே இல்லையே!
ஏன் தம்பி?
இதுவும் அந்த "விளையாட்டுக்கோபம்" தானா?
தெரியவில்லை.
உன்னை எழுப்பிக்கேட்க முடியாத
தூரத்துக்கு
சட்டென்று மறைந்து போனாயே!
துயர அஞ்சலிகளை
இப்படி அடிக்கடி புதுப்பித்துக்கொள்ளும்
"அஞ்சல் வழி"கல்லூரி ஒன்றை
என் உடைந்த நெஞ்சின்
செங்கல் சிதிலங்களைக்கொண்டு
கட்டி எழுப்பிக்கொண்டிருக்கிறேன்.
தம்பி செங்கோடி.
முடியலையடா!
என்னோடு நீ எசலிக்கொண்டு போவதும்
அப்புறமும் உன்னை
விளையாடக்கூப்பிட்டு தொடர்வதுமாய்
அந்த "செப்பு" விளையாட்டு !
மனவோட்டத்தில்
செதில் செதிலாய் செதுக்கும் வலிகள்
வதைக்கின்றனவே.
_____________________________________________
இசக்கி பரமசிவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக