திங்கள், 4 ஆகஸ்ட், 2025

எல் ஐ சி பென்சனர்கள் சங்கம்.

 எல் ஐ சி பென்சனர்கள் சங்கம்.

_____________________________________


பராசக்தியில் ஒரு வசனம் வருமே

"உனக்கேன் இந்த அக்கறை?

யாருக்குமில்லாத அக்கறை?"

ஆம் 

சமுதாய அக்கறையே இல்லாமல்

பஞ்சப்படிக்கும்

போனஸ்ஸுக்கும்

சீறிப்பாய்ந்து கொண்டிருக்கும்

தொழிற்சங்கக்கொடிகளிடையே

எங்கள் கொடி

ஒரு சித்தாந்தச்சிந்தனைக்கு

அலையடித்டுக்கொண்டிருக்கும்.

எல்லோருக்கும் எல்லாமும் வேண்டும்

என்று தானே

இந்த சமுதாயம் 

கொந்தளித்துக்கொண்டிருக்கிறது.

மார்க்சிசம் என்று

இதை முகம் சுழித்துக்

கொண்டிருப்பவர்களிடையே

எங்கள் எரிமலை லாவா முகங்கள்

அனல் வீசுவது உண்டு.

ஒரு வித வினோத தீண்டாமை அரசியலால்

நாங்கள் 

ஓரம் கட்டப்படுவதுண்டு.

நாங்கள் அந்த அலைத்துடிப்புகளின்

உள் துடிப்புகளையே

சுவாசித்துக்கொண்டிருப்பவர்கள்.

ப்ரவ்த்தான் என்பவர் எழுதிய‌

"ஃபிலாசஃபி ஆஃப் பாவர்டி"க்கு

எசப்பாட்டு பாடிய கார்ல்மார்கஸ்

"பாவர்டி ஆஃப் பிலாசஃபி" என்று

எழுதிய அந்த எழுத்தின் கூர்மையைக்கூட‌

சாணை பிடித்துக்கொண்டு

விவாதங்கள் மூலம் சமுதாய ஓர்மையை

அன்று 

வேள்வி வளர்த்துக்கொண்டிருந்தவர்கள்

எல் ஐ சி ஊழிய நண்பர்கள்.

அறிவு ஜீவுத்தனம் 

அரக்க ஜீவித்தனத்தை 

நோக்கிப் போய்க்கொண்டிருப்பதை

இன்றைய கணிப்பொறிப்பெருச்சாளிகளே

உணர்ந்து மூச்சு அடைபட்டுத்

திணறிக்கொண்டிருக்கிறன.

"ஏ ஐ" அடிப்படையில்

இப்போது "மனிதம்"என்ற‌

வெளிச்சத்தை

இருட்டின் "காட்டுக்கருப்பைக்"கொண்டு

சாந்து பூசி மூட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது

என்று உணரத்துவங்கி விட்டார்கள்.

அதன் பசி பில்லியன் பில்லியன் டாலர்களாய்

பெருக்கெடுத்து

பங்கு மூலதனக்கோட்டையே 

பொத்து வெடிப்பதாக‌

பொறுமிக்கொண்டிருக்கிறார்கள்.

கணிப்பொறியின் வேலைகளையெல்லாம்

அந்த "குவாண்டம் சிப்பே"

விழுங்கி ஏப்பமிட்டு விட்டதாக‌

அலறிப்புடைக்கிறார்கள்.

இந்த அரக்கனை அடக்கியாண்டு

மனிதம் பொதுமை பூத்த‌

தொழிற்பூங்காவில் மட்டுமே

நாம் அந்த செயற்கை மூளையின்

நுண்விசையை இயக்க முடியும்.

இந்த தொலை நோக்கு

நம் எல் ஐ சி ஊழியர்களிடையே

அன்றே செம்மலராய் பூத்து சுடர்ந்தது.

அதன் வெளிப்பாடே அன்று

நாம் "கல்கத்தாவில்" நடத்திய‌

"இலாக்கோ விஜில்" முற்றுகைப்போராட்டம்.

அன்றைய "ராட்சசக்கம்பியூட்டரை"

நாம் அப்படித்தான் அணுகினோம்.

அது லாபச்சுரங்கம் மட்டுமல்ல.

"சமூக மனிதம்"என்று ஒரு 

"மனித உழைப்பு மூலதனம்"

அடிமாடுகளாக கசாப்பு செய்யப்படுவதை

உள்ளடக்கமாய்க்கொண்டிருக்கும்

ஒரு "சமுதாய கில்லட்டின்" ஆகும்.

நண்பர்களே

எல் ஐ சி ஊழியர்களின் 

"ஏ ஐ ஐ எ ஏ" எனும் பேரவையே

ஒரு இந்திய துணைக்கண்டம் போன்றது.

நம் மண்ணின் கனவுகளின்

திரண்ட "மேக்மா"வாக‌

உள்ளிருந்து விடியல் வீச்சுகளை

தெறிக்க விட்டுக்கொண்டிருப்பதே

அதன் "அணுக்கரு".

எல் ஐ சி பென்சனர்களே

உங்கள் ஒய்வு என்பது

மற்றைய "ஈசிச்சேர்"கள் போல் 

"இந்து பேப்பர் படிப்பு"களால்

ஊறிக்கிடப்பது அல்ல.

நாளை விடியும் கிழக்கில் தான்

உங்கள் இதயம் துடித்துக்கொண்டிருக்கும்

என்பதும் 

உங்களை அறியாமல்

உங்களை அறியவைத்துக்கொண்டே இருக்கும்

என்பதையும் அறியுங்கள்

என் அன்பான 

எல் ஐ சி பென்சனர் நண்பர்களே!

__________________________________________________

சொற்கீரன்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக