செவ்வாய், 5 ஆகஸ்ட், 2025

நம் மைல் கற்கள்

 


இவர்கள் கவிஞர்கள் அல்ல.

நம் மைல் கற்கள்

_________________________________________‍

சொற்கீரன்



1.ந பிச்சமூர்த்தி


எழுத்துகளையே

எழுந்து உட்கார வைத்து

யோசிக்கச் செய்தவர்

இந்த புதுக்கவிதையின்

"பிள்ளையார் சுழி"க்காரர்.


2.கவிக்கோ


"காலிக்கோ"பைண்டு செய்து

படிக்க வேண்டிய‌

காலத்தையே மறுத்துக்கொண்டு

நிற்கும் கவிதைகள் படைத்தவர்.


3.விக்கிரமாதித்தன்.


எழுத்துக்களின் பஞ்சபூதம்.

தாடி மீசை வைத்துக்கொண்டு

அகத்தியன் அருவியில்

குளித்துக்கொண்டே இருக்கும்.


4.ஈரோடு தமிழன்பன்.


கற்பனைகளும் உவமைளும்

எத்தனோயோ 

பில்லியன் ஒளியாண்டுகளையும்

தாண்டிக்கொண்டு

இவரிடம் மேய்ந்து கொண்டிருக்கின்றன.


5 நா.காமராசன்


சொற்கள் மின்னலைக்கொண்டு

இவரிடம் 

நெசவு செய்து கொண்டேயிருக்கும்.


6.வண்ணதாசன்.


ஓய்வாக 

ஈசிச்சேரில் இருந்தபோதும்

அந்த ஈசிச்சேர் கூட‌

எழுத்துக்களால் செய்யப்பட்டிருக்கும்.


7.கலாப்ரியா.


இவரது தருணங்கள் தான்

கவிதைகள்.

ஆனால் அவை கடிகாரங்களால்

"டிக் டிக் டிக்..டிக்"

ஆவதில்லை.


8 வானம்பாடிகள்


பிரபஞ்சமே எழுத்தின் சுவாசத்தை

பிய்த்து பிய்த்துப்

போட்டுக்கொண்டு

இருட்டுக்கடை அல்வாவை

கிண்டிக்கொண்டன.


9 நெல்லை ஜெயந்தன்


கருத்துக்களை வெடிக்க‌

வைத்துக்கொண்டே

சரம் தொடுத்துக்கொண்டிருப்பவர்.


10 மு மேத்தா..


சொற்துண்டுகளைக்கொண்டு

இவர் செய்த‌

கலைடோஸ்கோப்பைத்தான்

நாம் இன்னும்

உருட்டிக்கொண்டிருக்கிறோம்.


11."இங்குலாப்"


இவர் பேனாவின் நிப்பு மட்டும்

காகிதப்பரப்பில்

"பிக் பேங்கை"யே கொப்பளிக்கும்.


12. வைரமுத்து


இவர் பெயரை

பட்டியலில் 

எங்கோ கொண்டு போய்

நிறுத்தினாலும்

கவிதைகளின் சிகரம் 

அவர் மட்டுமே.


13 பெரியசாமித்தூரன்.


கல்லூரிப்பருவத்தில் 

இவரது "நிலாப்பிஞ்சுகளை"

தரிசித்து

அந்த எழுத்துக்களின் இனிப்பில்

நான் திடுக்கிட்டுத்தான் போனேன்.


14 வாலி, கண்ணதாசன்கள்


இப்படி சொல்வது ஒரு துடுக்குத்தனமோ?

இசைகருவிகளின் அருவிகளில்

அமிழ்ந்து கொண்டு

அந்த ராட்ச மவுனத்தை

சாகித்ய அகாடெமித்தனமாக‌

மாற்றுவது என்பது

மிகச்சிறந்த இலக்கிய வல்லமை

என்பதை மறுக்கவே இயலாது.


15 சி சுப்பிரமணிய பாரதி.


நம் மகாகவியா?

ஆம் அந்த கவிதைக்கடலே தான்.

இன்றைய புதுக்கவிதைகளை

வரவேற்று

"ரத்னக்கம்பளம்" விரித்துக்காட்டியது

பாரதியின் "வசன கவிதைகளே"



16.பாவேந்தர் பாரதி தாசன்.


தீச்சுடர் கொண்டு 

வழிகாட்ட வந்தவனுக்கு

மயில் பீலிகள் எனும்

புதுக்கவிதைகள் அந்நியமாக‌

தோன்றிய போதிலும்

அவரது

"அழகின் சிரிப்பு" ஒன்று போதும்

புதுக்கவிதைகளின் 

ரத்தினக்குவியல் அவர் என்று

நாம் தெரிந்து கொள்ள.


17 .ந.முத்துக்குமார்.

__________________________


எல்லாக் கவிதைகளுக்கும்

ஒரு மொழி பெயர்ப்பு எனும் 

உயிர்ப்பெயர்ப்பே

ந முத்துக்குமார்.

புல்லும் புழுவும்

பச்சைப்புல்லில் கவிதை உருப்பெற‌

இவர் வீட்டு வாசற்சுவடுகளில்

படரும்..ஊரும்.

தொட்டாற் சிணுங்கிக்

கவிதையை 

தொட்டு தொட்டு எழுப்பியவர்.

கிராமத்துச் சுவர்களில்

வட்ட வட்டமாய் 

சாணி தட்டிக்கொண்டு

வந்த புதுக்கவிதை

இவரிடம் அசோசகக்கரங்கள் ஆகின.


_____________________________



("மைல் கற்களும் தொடரும்

பயணமும் தொடரும்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக