தவம்
____________________________________
ஒரு சர்வாதிகாரத்தை முறியடிக்க
எதிர்க்கட்சிகளின் ஒன்று பட்ட
கூட்டணி மிக அவசியம்.
அப்படியே ஒன்று பட்டால் கூட
ஆளும் எந்திரம் செய்யும்
சூழ்ச்சிகளும் தந்திரங்களும்
மக்களுக்கு புரிய வேண்டும்.
சட்டப்படியே அது கொடுங்கோல்
ஆட்சி என்றுகண்டுபிடிக்கப்பட்டாலும்
அது நீக்கப்படும் அதிகாரம்
எங்கிருந்து யாரிடமிருந்து வரும்?
மக்கள் அப்படி ஒன்றும்
எரிமலைகள் அல்ல.
அப்படி அவர்கள் பொங்கிவிடக்கூடாது
என்பதற்காக அவர்கள் மீது
அபினி மழை பொழிவது போல்
சாதி மதம் இனம் நிறம் மொழி
இவற்றின்
வர்ண பேதங்கள்
ஒரு ஜிகினாத் திரையைக்கொண்டு
மூடி விடும் அல்லது
மரண மழை தூவும் துப்பாக்கிகள்
மேலே சிறகடித்துக்கொண்டே இருக்கும்.
இப்போது
பூனைக்கு மணி கட்டுவது யார்
என்று
ஒரு காமெடி பீஸாக
வரலாற்று வெடிப்புகளின்
திருப்புமுனைகள் கூட
முனை மழுங்கிக்கிடக்கும்.
அந்தக்கழுத்தில்
அந்த மணியைக் கட்டுவது
பற்றிய கேள்வியே இங்கு இல்லை.
அதையே அங்கீகரித்துக்கொண்டு
தங்கள் கழுத்திலேயே
தாலியாகக் கட்டி
பூஜை செய்யும் ஒரு
புழுதிக்காட்டில்
எந்த விடியலும்
சீறிக்கொண்டு
பாய்ந்து வருவதில்லை.
இருட்டைத்தின்று
இருட்டைச் செரித்து
இருட்டில் மரத்துப்போன
ஆயிர ஆயிர ஆண்டு
சவக்கிடங்கின் சுகம் கண்ட
இந்த போதைத்தூக்கத்தில்
"மாற்றி யோசிக்கும்" சிந்தனைகள்
அற்றுப்போய்
அதைக்கனவு காணும் வலிமையும்
அற்றுப்போய்
இற்றுப்போன இந்த பஞ்சாங்கக்கூட்டத்தில்
உற்றுப்பாருங்கள்
கடவுள்கள் கூட
ராகு கேது தோஷம் கழிக்க
நதிக்கரையில்
தர்ப்பைகளோடு தவம் செய்ய
தேங்கிக் கிடப்பார்கள்.
____________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக