அரிதாரம் பூசிய "அறிவு"
_________________________________________
நமக்குத்தெரியும்
இந்த கிளிகளும்
பூம் பூம் மாடுகளும்
நமக்கே பாடம் சொல்லும்
என்று.
நம் காரணமற்ற ஆசைகளும்
கனவுகளும்
பேய்த்தனமான
முட்டாள் தனத்தை
முக்காடு போட்டுக்கொண்டு
கிசு கிசுக்கும்
சந்து பொந்துக்கூடங்களில்
சதிராடும் சமாச்சாரங்கள் தானே
"சோதிடம்".
ஏன்
பல்கலைக்கழகங்கள் கூட
இதற்கு நாற்காலிகள்
ஒதுக்கியிருக்கின்றனவே.
இப்போது
"விண்குழல்கள்" கூட
(யூ டியூப்)
இந்த வக்கிரம் பிடித்த
மனபலூன்களை
பறக்கவிட்டு
கல்லா கட்டுகின்றனவே.
இதில் வேதனையான வேடிக்கை
என்ன தெரியுமா?
அங்கே ஈக்கள் மொய்த்தது போல்
வேடிக்கை காட்டிக்கொண்டிருந்த
"கணிப்பொறி"க் கச்சாத்துகளுக்குப்
பின்னே
ஒரு ஒப்பற்ற விஞ்ஞானத்தின்
அரிதாரம் பூசிக்கொண்டு
கிலுகிலுப்பை ஆட்டிக்கொண்டிருக்கிறது
...அந்தோ!
அந்த "ஏ ஐ" எனும்
செயற்கை மூளையும் தான்.
__________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக