வியாழன், 23 ஏப்ரல், 2020

போற்றுதும் போற்றுதும்

போற்றுதும் போற்றுதும்
(இளங்கோ அடிகள் தினம்)
====================================ருத்ரா



பூந் தமிழ் போற்றுதும்.
புலர் தமிழ் போற்றுதும்.
ஐம்பெரும்காப்பியம்
தந்த சான்றோர்
அடிகள் போற்றுதும்
அடிகள் போற்றுதும்.
இளங்கோ அடிகள்
என்றொரு இமயம்
நமது தமிழின்
இதயத்துடிப்பை
இடி குரல் நரம்பில்
யாத்ததோர் யாழின்
எரிமலைப் பாட்டை
இயம்பிய எண்ணமும்
எழுதிய வண்ணமும்
ஏந்திய ஒளியை
போற்றுதும் போற்றுதும்
போற்றுதுமே.
அலை கடலோரம்
அலையையும் எதிர்த்த‌
விரியலைக் கூந்தல்
அநீதியை எதிர்த்து
அனல் விழி வீச‌
நின்றதோர்
உயிர்ச்சிலை அது.
நம் எழுச்சியின்
உருவகக் "கார்ட்டூன்" அது.
கண்ணகிப்பெண்ணின்
கனல் உமிழ் சிலை அது.
பூம்புகார் நகரில்
கோட்டம் கண்டோம்.
சிலம்பு உருவில்
அந்த வாயிற் கதவு
"வாயிலோயே
வாயிலோயே" என‌
விளிக்கும் குரலும்
நமக்கு கேட்கும்.
தமிழ் உணர்ச்சியை
நம்மிடம் பெய்து
தமிழ் செழிக்க‌
ஆண்டவர் திறமும் அங்கு
கண்டோம் கண்டோம்.
கண்ணகி என்னும்
பேரொளி தன்னை
கோணிப்பாயில்
எங்கோ சுருட்டி
வீசி எறிந்தவர்
ஆண்ட விதமும்
நாம் கண்டோம்.
சோழி உருட்டி
பேய்க்கதை சொன்ன‌
பிரசன்னம் எல்லாம்
தமிழின் தணலை
அவித்திட இயலுமோ?
தமிழா! தமிழா!
இன்னும் இன்னும்
பகடை உருட்டி
காசுகளின் அந்த‌
சில்லறைச்சத்தமா உனை 
இயக்கி நிற்பது?
இளங்கோ என்ற‌
சேரனும் இன்று
கேரளன் ஆயினும்
நம் தமிழன் தான்.
மழை தவழும்
கார் நாட்டான்
கர்நாடகத்தான் ஆகி
முரண் பட்ட போதும்
நம் தமிழன் தான்.
தெள்ளிய தமிழென‌
தெலுங்கு "செப்பினும்"
அவனும் அவனும்
நம் தமிழன் தான்.
நம் இதயம் நுழைந்து
நம்மை இணைக்கும்
பொற்கயிறே நம்
திராவிடம் தான்.
மறைத்து மறைத்து
ஒலி செய்யும்
நான் மறை மூடி
மறைத்ததனால்
ஒற்றுமை இன்றிக்
கிடக்கின்றோம்.
மீண்டும் நாம்
ஒன்றிட வேண்டும்
பெருந்தமிழாய்.
உயர் தமிழாய்.
பேசிட வேண்டும்
மீண்டும் அந்த‌
பன்மலை அடுக்கத்து
குமரிக் கோட்டின்
குமுறும் குரல் தனை
"தமிழ்ச்சீற்றமுடன்"

==================================================







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக