புதன், 1 ஏப்ரல், 2020

பிரம்மசூத்திரம்

பிரம்மசூத்திரம்
================================================ருத்ரா

மனது நம நம என்கிறது.
வாய் அப்படி நாவில்
நீராய் ஊறினால்
மசால் தோசைக்கு ஆர்டர் செய்து
ஓட்டலின்
மேஜையைத் தட்டிக்கொண்டிருப்போம்.

சிந்தனையின் அரிப்பு
மனிதனை
மூளையை சொறிந்து கொள்ளச்
செய்கிறது.

அப்படித்தான்
பிரம்ம சூத்திரம்
இரண்டாம் பாகத்தில்
மூன்றாம் பிரிவில்
17 வது சூத்திரமாய்
இந்த வரி ஓடுகிறது.

ந ஆத்மா அஸ்ச்ருதே ஹ‌
நித்யத்வாத் ச
தாப்யஹ.

ஆத்மா என்று ஏதுமில்லை
வேதத்திலிருந்து ஆத்மா
கிளை விடவில்லை.
தொடக்கமும் முடிவும் இல்லாததாய்
அது
அறியப்படுகிறது.

மனித மூச்சுகளின்
மகரந்தங்கள்
தூவிக்கிடக்கின்றன.
இதில்
ஒரு விதை அல்லது செடி
அல்லது இன்னும் விதைகள்
பரவின.
வேதம் என்பது
இதன் ஊடே தான்
ஒலிகளைத்தூவியிருக்கிறது.
ஆம்.
மனித நாவுகளின் அதிர்வு தான் அது.
அது
எங்கோ வானத்திலிருந்து உதிரவில்லை.
மனித சிந்தனையின்
உள்ளிருந்து தான்
"ஓங்கரிக்கப்பட்டன"
முகம் தெரியாத அந்த வாந்தி
புனிதம் ஆயிற்று.
ஓம் என்று
பூச்சூடி நீராட்டி
தீ வளர்த்து
ஆடிக்களித்தனர்.
மனிதன் நுண்மை
வேதத்தை
அடையாளம் காட்டியது.
ஆனால்
அந்த வேதம் எப்படி
மனிதனுக்கு வர்ணம் பூசி
வேறு படுத்தியது?
ஆத்மாவை உடைய‌வன் ஆத்மி ஆனானா?
ஆத்மியின் உட்சாறு ஆத்மாவா?
அது மூளையா? இதயமா?
தமிழ் மொழி அழகாய்
சொல் சமைக்கிறது.
ஆள் என்றால் ஆட்சி செய் என்று பொருள்.
மனிதன் தன் சூழலை ஆட்சி செய்ய
முனையும்போது
ஆள் ஆகிறான்.
அந்த ஆள்மமே ஆத்மம் ஆகிறது.

மனித மூளையிலிருந்து முளைத்த வேதம்
அந்த முகம் தெரியாத‌
காரணத்தால்
அது தன்னை ஒலி எனும்
சுருதி சுருதி என்றே சொல்கிறது.
இந்த ஒலி கேட்கப்படவே வேண்டும்.
அப்போது அது கடவுள்
அல்லது பிரம்மம்.
அது மனிதனால் மறு ஒலிபரப்பு ஆனால்
பிரம்மம் எச்சில் பட்டு போகிறது.
எனவே
வேதம் பற்றிய மறு ஒலிகள்
மனிதனின் நினவுக்குள் ஏற்றப்பட்டு
மீண்டும்
உபனிடதங்கள் புராணங்கள் இதிகாசங்களாய்
வெளிப்படும் போது
அவை வெறும் நினைவுப்பிண்டங்களே.
அவை ஸ்மிருதி எனப்படுகின்றன.
நானே அந்த பகவான் என்று
மார் தட்டிக்கொள்ளும்
அந்த கீதை கூட‌
ஸ்ருதியின் எச்சில் அதாவது ஸ்மிருதி தான்.

மனிதனும் அவன் அறிவும்
ஏன் இப்படி
வேறு பட்டு
ஒரு கயிற்று இழுப்புப்போட்டியில்
வந்து முறுக்கிக்கொண்டன.

இன்னும்
வேதத்தின் உள்ளடக்கம் என்பது
இந்த மண்ணில் ஏற்கனவே இருந்த குடிகளும்
இந்த மண்ணுக்கு வந்த குடிகளும்
உரசிக்கொண்டதன்
தீப்பொறிகளின்
பூவாணங்கள் தான்.

மனிதமை எனும் ஆத்மா
சீற்றம் நிறைந்த‌
மனிதனின் அறிவுப்பரிணாம
ஓட்டமாய் இருக்கும் போது
வேதம்
அதை வெறும்
செத்த பாம்பாய் அடித்துக்கொண்டிருக்கிறது.
தன் ஒலிகளால்.

பிரம்மம் என்ற ஏதோ ஒரு உயர் பொருள்
எல்லாம் ஆள்கிறது
என்று வேதம் சொல்லும்போதும்
அது
தன்னை அறியாமலேயே
மனிதமையின்
கூரிய ஒளியை
போற்றிப்பாடுகிறது.
வேதம் சொல்லு.
ஆனால்
பொருளை அறிய உள் நுழையாதே
என்பதையும்
வேதமே சொல்கிறது.
அறி என்றாலே
அறி தான்.
ஒலியைக்கேள்.
அறிய எதுவும்
தேவையில்லை
என்ற "கன பாட்டமே"
எல்லாவற்றையும்
மறைத்து நிற்கிறது.
அதனால் தான்
வேதம் மறை ஆயிற்று.
பிரம்மசூத்திரம்
திறப்பதற்கு
ஒவ்வொரு முறையும்
ஒரு
புதிய சாவியை நீட்டுகிறது.
எனவே
அந்த சாவி திறக்கும் ஒலியில்
ஆத்திகத்தை விட‌
நாத்திகமே ஒலிக்கிறது.

=================================================





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக