ஜனவரி 12, 2015
இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு கவிஞர் ருத்ரா இ. பரமசிவன் அவர்கள்
கவிதைகள் எழுதுவதை தனது முதன்மை சிந்தனை வெளிப்பாடாகக் கொண்டாலும் அதிலும் பலவேறு கோணங்களில் திறமையைக் காட்ட முடியும் என்று தொடர்ந்து காண்பித்து வருகிறார் கவிஞர் (உ)ருத்ரா இ. பரமசிவன் அவர்கள். அவரது கவிதையிலக்கிய ஆளுமையையை வியந்து அவரை வல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டி மகிழ்கிறோம்.
கல்லிடைக்குறிச்சியை தனது பூர்வீகமாகக் கொண்டு தாமிரபரணி நதிக்கரையில் வளர்ந்த கவிஞர் ருத்ரா அவர்களின் கல்விப் பின்னணி பொருளாதாரத்துறை. தற்பொழுது 71 வது அகவையை எட்டியுள்ள ருத்ரா, கல்லூரி நாட்களில் பொருளாதாரப் பாடத்தில் தரவரிசையில் முதல் நிலையில் தேர்வு பெற்றதால் ‘நேரடித் தேர்விற்கு உட்படுத்தத் தேவையில்லை’ என்ற சிறப்பு விதிகளின் அடிப்படையில் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தில் (LIC of INDIA) பணிக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டவர். இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் பல்வேறு துறைகளிலும் பணியாற்றியுள்ளார். பணி ஓய்விற்குப் பிறகு தனது மனைவியுடன் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்து கலிபோர்னியாவில் வசிக்கும் அவரது மகன் மற்றும் மகள் குடும்பத்துடனும், பேரன் பேத்திகளுடன் வாழ்ந்து வருகிறார்.
கல்கி, ஜூவி, குங்குமம், செம்மலர் போன்ற பத்திரிக்கைகளிலும் கவிஞர் ருத்ராவின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. அகரமுதல, திண்ணை, வார்ப்பு போன்ற இணைய இதழ்களிலும், இணையத்தமிழ்க் குழுமங்களிலும், தனது பல்வேறுபட்ட வலைப்பூக்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். பொருளாதாரத் துறையின் பின்னணி கொண்டாலும் அறிவியலில், அதிலிலும் குறிப்பாக இயற்பியலில் ஆர்வம் மிகக் கொண்டவர் கவிஞர் ருத்ரா. குவாண்டம் மெக்கானிக்ஸ், ஆலன் கத்ஸ் இனஃப்லேஷன் தியரி(Alan Guth Inflation Theory), சவ்வுப்படல வெளிகள் (RS MODELS I AND II), அண்டம், பெருவெடிப்பு, ஹிக்ஸ் போசோன் சப்அட்டாமிக் பார்டிகில் (higgs boson subatomic particles) போன்றவற்றைப் பற்றி விளக்கிக் கட்டுரைகள் எழுதும் வல்லவர். இயற்பியல் கட்டுரைகள் மட்டுமன்றி அத்தகவல்களை கவிதையின் கருப்பொருளாகவும் கொண்டு கவிதைகளும் எழுதுவார்.
கவிஞர் ருத்ராவின் கவிதைகளின் பாடுபொருள் பொதுவாக வழங்கிவரும் கருப்பொருட்களில் இருந்து மாறுபட்டவை, கவிதைகளின் நயமும் கவிதைநடையில் வேறுபட்டவை. பொதுவான புழக்கத்தில் இருக்கும் கவிதை பாணியிலும் இவரால் எழுத முடியும், பிற கவிஞர்கள் தொட்டிராத கோணங்களையும் கவிஞர் ருத்ராவால் காட்ட முடியும். இவர் எழுதும் கவிதைகளுக்கு சொல்லலங்காரம் ஆதாரம் அல்ல. சொல்லவரும் கருத்துக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எழுதுபவர். இவர் கவிதைகளின் பல்வேறு கோணங்களை அடுத்து பார்ப்போம் (கவிதைகள் முழுமையாகவோ அல்லது சிறப்பு வரிகள் மட்டுமோ இடத்திற்குத் தக்கவாறு பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது).
அறிவியல் தாக்கக் கவிதைகள்:
களிப்பருளும் “களிப்பே” என்ற கவிதையில் கவிஞர் ருத்ரா இயற்பியல் கருத்துக்களின் வழி ஆன்மிக விளக்கமளிக்கிறார்.
களிப்பருளும் “களிப்பே”!
=======================
[…]
எது ஞானம்?
எது அஞ்ஞானம்?
அது மெய்ஞானம்?
எது விஞ்ஞானம்?
முடிவில்லாததற்கு
முடி போட்டு குடுமி போடமுடியாது.
முனை தெரியும் வரை
கையில் கருத்தில் நிரடும் வரை
பாதியாக்கு
பாதியாக்கிக்கொண்டே இரு.
கிரேக்க மொழியில்
மெலிடஸ் (கிமு 610_540)
இதை “அபெய்ரான்” என்றார்.
இன்ஃபினிடி என்று
இது நுண்கணிதம் ஆயிற்று.
லிமிட்டிங் டு சீரோ என்பது
டிஃபரன்ஷியல் கால்குலஸ்.
லிமிட்டிங் டு இன்ஃபினிடி என்பது
இன்டெக்ரல் கால்குலஸ்.
தொகுத்ததை பகுத்த போதும்
பகுத்ததை தொகுத்த போதும்
வெறுமையே அங்கு விஸ்வரூபம்.
விஞ்ஞானிக்கு அது ஹிக்ஸ் போஸான்.
மெய்ஞானிக்கு அது ஹிரண்யகர்ப்பன்.
ஆத்திகத்தையும் நாத்திகத்தையும்
குவாண்டம் பிடித்து
ஒரு லிங்கம் செய்தால்
அதுவே இங்கு ஒரு
குவாண்ட லிங்கம்.
ஃபெர்மியானும் போஸானும்
கொண்டு பிசைந்த லிங்கமே அது.
[…]
ஒரு பொருள் ஒரே நேரத்தில் இரு வேறு தன்மை கொண்டு இருப்பதை இன்று அறிவியல் அறிகிறது, ஆனால் இந்தக் கருத்தை ஆன்மிகம் முன்னரே குறிப்பிட்டுள்ளது. இறைவன் ஒரே நேரத்தில் சிவனாகவும் சக்தியாகவும் இருப்பது அணுவின் தன்மையைப் போன்றது என்று மாணிக்கவாசகர் கூறிய “அணுத்தரும் தன்மையில் ஐயோன் காண்க” கருத்தை கவிஞர் ருத்ரா இக்கவிதையில் கையாண்டதை முனைவர் க. கணேசலிங்கம் பாராட்டியுள்ளார்.
சங்கநடைக் கவிதைகள்:
பிற கவிஞர்களிலும் இருந்து ருத்ராவை வேறுபடுத்திக் காட்டுவது அவரது சங்கஇலக்கியச் சாயல் கொண்ட கவிதைகள். கீழே ஒரு எடுத்துக்காட்டு…
பசலை பூத்தே…
=============
கதழ்பரி கலிமா அலரிதூஉய்
ஆறுபடுத்தாங்கு வேங்கை புரையும்
முன்னிய வெஞ்சுரம் இலஞ்சி வீழ்த்தும்
இன்னிய பலவின் முள்பசுங்காய்
மூசும் தும்பி அதிர்வினம் யாழ்க்கும்.
நெடுந்தேர் மணிநா நடுங்கி இமிழும்
ஓதையுண்பினும் ஓவா உறுபசி
உழல்படு வண்டினம் வெள்வெளி ஆர்க்கும்.
நீள்மலைப்பாம்பின் அன்ன நெடுவேர்
தடுக்கும் மறிக்கும் எவன் கொல் செயினே.
பெரும்பணைத் தோளின் கடுப்ப விரையும்
துப்புநிலை அறியும் அதிர்கலிப் பொறிமா.
துவள்படும் நெஞ்சின் என் பொங்குதிரை ஈண்டு
அடு கிளர் அகலத்து அவன் உள் உள் தைக்கும்
அகவும் மஞ்ஞை என்னுள் அகவி
உருவும் என்னுயிர் மின்னல் மயிரிய
நார்ப்பூ தொடுக்கும் பசலை பூத்தே!
============
பொழிப்புரை:-
============
குளம்புகள் பதிய குதித்துச்செல்லும் குதிரையை அதன் அலரிப்பூக்குஞ்சம் அசைய அதனால் அப்பூக்கள் எங்கும் உதிர குதிரை (பூட்டிய தேரில்) செல்லும் காதலன் வழியெல்லாம் வேங்கை மரங்கள் அடர்ந்திருக்கும் அந்த வெங்காட்டு வழியில் செல்கிறான்.நெருக்கமான வழி அது.இடையிடையே உள்ள இலஞ்சி எனும் சுனைகள் செறிந்த ஊரில் இனிய தன்மை கொண்ட பலாமரங்கள் தரை தொடும்படி பலாக்கனிகளை (வேர்ப்பலா)வீழ்த்திக்கிடக்கும்.பலாவின் மேல் புறம் முள் அடர்ந்தது போல் உள்ள தோற்றத்தைக்கண்டு அவையும் சிறு சிறு வண்டுகள் என நினைத்து அந்த பசுங்காய்கள் மீது வண்டுகள் மொய்க்கும்.
அவை யாழ் போல சிறகுகளை அதிரச்செய்து இசைக்கும்.காதலனின் நெடிய தேரின் மணியின் நாக்கும் நடுங்கலுற்று அதிலிருந்து மெல்லொலி கேட்கும்.
அந்த இன்னொலியை உண்டபோதும் தன் தீராத பசியால் அலைவுற்று அவை அந்த வெட்டவெளியில் மொய்த்துப்பறக்கும்.வழியில் குறுக்கு நெடுக்காக கிடக்கும் மரத்தின் வேர்கள் நீண்ட மலைப்பாம்புகள் போல் காதலன் செல்லும் வேகத்தை தடுத்து மறிக்கும்.இதை என்ன செய்வது?என் பிரிவுத்துயரத்தை இது இன்னும் அதிகப்படுத்துகிறதே என்று காதலி துன்பம் கொள்கிறாள்.மனக்கண்ணில் காதலன் விரைந்து வரும் காட்சிகள் விரிகின்றன.
அவன் திரண்ட தோளின் வலிமைமிக்க செயலினால் விரையும் குதிரைகள் அவன் வலிய தன்மையை அறியும்.உடம்பில் அழகிய புள்ளிகள் நிறைந்த அரிய அந்த அழகிய குதிரை அதிர்வோடு துள்ளி துள்ளி ஓடும்.இங்கு துவண்டு போன உள்ளத்தோடு வேதனை அடையும் என் நெஞ்சில் பொங்கும் அலைகள்
அவன் அகன்ற நெஞ்சத்தில் சூடேற்றி கிளரச்செய்து அவன் நெஞ்சக்கூட்டிலும் உள்ளே உள்ளே தைத்து வருத்தும்.எங்கோ கூவும் மயில் அதன் அகவல் ஒலியை என்னுள் பாய்ச்சும்.அது என்னுயிர் ஊடுருருவி மயிரிழை போன்ற மின்னல் உணர்வை நுழைத்து அதை நார் ஆக்கி பூ தொடுக்கும்.அந்த மலர் மாலை பசலை நோயாய் (பிரிவு துன்பத்தின் வலி)என் மீது மலர்ந்து படரும்.
இவை காதலியின் மனவெழுச்சி மிக்க காதலின் சொற்கள்.
“கவிதை என்ற பெயரில் அயற் சொற்களைக் கலந்து உரை நடையைத் தருவோர் இடையே மரபுப் பாடல்கள் புனையும் தங்கள் ஆர்வமும் ஆற்றலும் பாராட்டிற்குரியது,” என்று முனைவர். இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள் இவர் முயற்சியைப் பாராட்டி உள்ளார்கள். காப்பியாற்றுப்படை, மாவின் அளிகுரல், நெடுநல் மாயன், இன்னுரை தடவினும் என்னுயிர் மாயும், காய்நெல் அறுத்த வெண்புலம், கல்பெயர்த்து இழிதரும், வேழ விரிபூ! என்று பல தலைப்புகளில் சங்க இலக்கிய நடைக் கவிதைகளை கவிஞர் ருத்ரா வழங்கியுள்ளார். இக்கவிதையை எழுதியவரும் முன்னர் குறிப்பிட்ட அறிவியல் கவிதையை எழுதியவரும் ஒரே கவிஞரா என வியக்காமல் இருக்க இயலாது.
குறும்பாக்கள்:
குறும்பாக்கள் குறைந்த வரிகளில் முக்கியமானக் கருத்தை சொல்வதாகவும் இருக்க வேண்டும், அதே சமயம் சொல்லப்பட்ட கருத்தும் மனதில் தக்க வேண்டும். கவிஞர் ருத்ராவின் மற்றொரு சிறப்பு, குறும்பாக்களிலும் முத்திரை பதிப்பது. குறும்பாக்கள் பற்றி அவர் சொல்லும் குறும்பா….
குறும்பாக்களைப்பற்றி குறும்பா…
===============================
ஆயிரம் பக்க
எழுத்துக்களின்
”போன்சாய்” மரம்
கீழே அவருடைய இருவேறு குறும்பாத் தொகுப்புகளில் இருந்து சில பாடல்கள். எழுத்தாளர்கள் பற்றிய விமர்சனத்தை மூன்று நான்கு வரிகளில் மிகக் கச்சிதமாக முடித்து விடுக்கிறார். தெரிவு செய்யப்பட்ட எழுத்தாளர்கள் சிலரில் அவர் தன்னைப்பற்றிக் கூறுவதும் இடம் பெறுகிறது.
சுஜாதா
======
எழுத்துகளுக்கு எலக்ட்ரானிக்ஸை
ஊற்றியவர்….ஆயிரம்
“எந்திரன்”களின் அடிப்படை “சிப்”
கல்கி
=====
எத்தனை தலையணைகள்.
அத்தனையிலும்
சரித்திரம் விழித்துக்கொண்டிருந்தது.
ருத்ரா
======
ருத்ராவா? யார் அது?
பத்திரிகை ஆஃபீஸ்களின்
குப்பைத்தொட்டியில் தேடுங்கள்.
(மற்ற ருத்ராக்கள் மன்னிக்க)
*****
எழுதிச்செல்லும்
விதியின் கை
எழுதி எழுதி மேற்செல்லும்.
எங்கே முடியும் விதி?
“பத்திரிகை அலுவலகத்தின் குப்பைக்கூடை”
======
பேனாவுக்கு
மட்டுமே புரிந்தது.
காகிதம் மட்டுமே
ரசித்தது.
“கவிதை”
======
எழுதி முடிக்கவில்லை.
பேனாவில் எல்லாம்
எறும்புகள்.
“
தமிழுக்கும் அமுதென்று பேர்”
======
இங்கு சுட்டப்பட்ட எழுத்தாளர்கள் தவிர்த்து, தமிழ் எழுத்தாளர்களில் மேலும் பலரை விமர்சித்து நான்கு தனிப் பாடல் திரட்டாகக் கொடுத்துள்ளார். அவை கீழ்காணும் சுட்டிகளின் வழி படிக்கக் கிடைக்கும்.
எழுத்தாளர்களின் ஊர்வலம்- பாகம் 1, பாகம் 2 , பாகம் 3, பாகம் 4 .
விமர்சனக் கவிதைகள்:
அறிவியல் ஆன்மிகக் கவிதைகளுக்கும், சங்க நடைக் கவிதைகளுக்கும், குறும்பாக்களுக்கும் முற்றிலும் மாறுபட்ட வகையில் முற்றிலும் வேறுபட்ட பாடுபொருளைக் கருத்தாக வைத்தும் கவிஞர் ருத்ராவால் கவிதை எழுத முடியும். யாரும் பொதுவாகக் கையாளும் கவிதைக் கருவுக்கு மாறுபட்டு விளையாட்டு விமர்சனம் என்பதைக் கூடக் கவிதையாக வடிப்பவர் ருத்ரா. சென்ற உலகக் கால்பந்து போட்டியில் நெதர்லாந்தும் மெக்ஸிகோவும் மோதியதையும் விமர்சனக் கவிதையாகவே வழங்கியிருந்தார்…அக்கவிதை கீழே.
உலக கோப்பை கால்பந்து
நெதர்லாந்தும் மெக்ஸிகோவும்
=============================
நியூயார்க் டைம்ஸ் கொப்பளிக்கிறது
பி.பி.ஸி ஸ்போர்ட்ஸ்
நரம்பு புடைக்கிறது.
டிவி திரை பூராவும்
உணர்ச்சிக்கம்பளிப்பூச்சிகளின்
அடைசல்கள்.துள்ளு முள்ளுகள்.
கழுத்துப்பிடியாய்
கடையில் ஒரு அமுக்கு.
அப்புறம்
பெனால்டியில்
மெக்ஸிகோ தோல்விக்குப்பெட்டிக்கு
கடைசி ஆணி.
தொண்ணூத்து நாலாவது நிமிடத்தில்
“க்ளாஸ் ஜான் ஹண்டெலார்”
அடித்த கோல்..
வானத்தின்
உச்சிமண்டை பிளந்து கொண்டது.
அந்த உற்சாகக்குரல்
உலகத்தின்
செவிட்டுக்காதுகளின்
பாறாங்கல்லையெல்லாம்
கூட
உருட்டித்தள்ளியிருக்கும்.
நாக் அவுட் வந்த பிறகும்
இனியும்
ஒரு நாக்கை
தொங்கப்போட்டுக்கொண்டிருக்க முடியுமா?
சிலிக்கு
இப்படித்தானே பிரேஸில்
ஒரு பச்சை மிளகாயை
கடிக்க கொடுத்தது.
அவர்களுக்கு
பச்சை மிளகாய் எல்லாம்
இனிப்புக்காய்கள் என்றாலும்
இந்த நாக் அவுட்டின்
அந்த “ஆலப்பினோ அல்லது ஜாலப்பினோ”
செம காரம் தான்.
மூக்கில் காதில் கண்ணில்
எல்லாம் காரம் தான்.
பிஃபாவின்
வண்ண வண்ண ரத்தப்புடைப்புகளை
இந்த கால்பந்தில் பார்த்து
நரம்புக்குள்
நல்லபாம்புகளை கொத்தவிட்டு
நுரை தள்ளி
பார்த்து ரசிக்கும் விளையாட்டு
எந்த சொர்க்கத்திலும்
கிடைக்காது.
கிரிக்கெட் கூட
அகராதிப்படி
வெறும் பூச்சி விளையாட்டு தான்.
மாறுகோணச் சிந்தனையின் மறுஉருவமாக பலகோணங்களில் கவிதைகள் படைத்து வரும் கவிஞர் ருத்ராவை இவ்வார வல்லமையாளராக தேர்வு செய்து வல்லமைக் குழுவினர் பாராட்டி மகிழ்கிறோம். தொடர்ந்து கவிதை இலக்கியத்தில் புதுமைகள் புகுத்த அவருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
***
கவிஞர் ருத்ராவின் வலைப்பூக்கள்:
http://ruthraavinkavithaikal.blogspot.com/
http://ruthraasivan.blogspot.com/
http://ruthraa.wordpress.com/
http://nunpaa.blogspot.com/
http://nunbaa.blogspot.com/
http://oosiyilaikkaadukal.blogspot.com/
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –
http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம்
http://www.vallamai.com/?p=43179 ]