தொ.பரமசிவனார்
________________________________ருத்ரா
தமிழ் ஆய்வாளர் என்று
இரண்டு சொல்லில்
இவரை அடக்கிவிடுவது
ஒரு கடைந்தெடுத்த பாமரத்தனம்.
தமிழ் ஏதோ ஒரு சிற்றெரும்பு
கால் கட்டை விரலால் நசுக்கி விடலாம்
என்று கோயில் வழியே ஒரு ஆதிக்கம்
தலை காட்டும் இந்த
கால கட்டத்தில்
கோயில்கள் வெறும்
கற்களின் கூட்டம் அல்ல
அது நம் தமிழ் தொன்மையின்
எலும்புக்கூட்டு மிச்சங்கள்.
பக்தி ரசம் வழிதோடும் அந்த
காட்டாறு காட்டும் மரபுகளும் வழக்குகளும்
தமிழின் உயிர்த்துடிப்புகள் என்று
காட்டிய பெருந்தகை தொ.ப அவர்கள்.
கடவுள் மறுப்பு என்பதும் கூட
கடவுளுக்கு மிகவும் விருப்பமான
ஒரு பூசனை தான்
என்ற அடிக்கருத்து தான்
இவரது ஆய்வு மரத்தின் அடிக்குருத்து.
மண்ணோடு இயைந்த தமிழர்களின்
வாழ்வு முறைகளில்
வர்ண முறைத் தூசிகளும் புழுதிகளும்
படிந்திருக்கவே இல்லை என்பதே
இவரது நுட்ப நோக்கு.
தமிழ் மொழி
சடங்கு சம்பிரதாயங்களின்
நீரோட்டத்து அடிமடியில்
சிந்துவெளியையும் கீழடியையும் தான்
கூழாங்கற்களாய் கிடத்தியிருக்கிறது
என்று கண்டு உணர்ந்து
பல நூல்கள் படைத்து
வெளிச்சம் காட்டியவர் தொ.ப அவர்கள்.
மார்க்சியம் பெரியாரியம் திராவிடம்
என்பதெல்லாம்
மேட்டிமை அறிவு ஜீவிகளால்
தீண்டப்படத்தகாதவையாக
கருதப்படும் சூழலில்
தமிழின் அரிச்சுவடிகளும் அடிச்சுவடுகளும்
அந்த சமதர்ம ஏக்கத்தையும் கனவுகளையும்
ஏந்தியிருந்தாக கண்டுபிடித்தார்.
அவர் படைத்த நூல்களில்
தமிழியல் ஒரு சமுதாய மானிடவியலுக்கு
சாளரங்கள் திறந்து வைத்திருப்பதை
கண்டு புல்லரித்தார்.
"அறியப்படாத தமிழகம்"
"அழகர் கோயில்"
"பண்பாட்டு அசைவுகள்"
போன்று எத்தனையோ படைப்புகளில்
தமிழ் சிந்தும் ஒளியில்
தமிழ் சிந்து வெளியின்
இசிஜி வரிகளைக்காணலாம்.
தமிழின் இதயத்துடிப்புகளுடன்
தன் இதயத்துடிப்புகளையும்
இழைவித்துக்கொண்ட தமிழ் ஆய்வாளர்
நம் தொ.ப அவர்கள்.
அவர் மறைவு ஒரு பேரிழப்பு
என்று மாமூலாக இரங்கலை
தெரிவித்துக்கொள்வதில்
அர்த்தம் ஏதுமில்லை.
அகர முதல என்று ஒலிக்கும்
வள்ளுவம் உள்ளிட்டு
நம் பத்துப்பாட்டு எட்டுத்தொகைகளின்
எல்லா வரிகளும் இங்கே
உலா வரவேண்டும்.
தமிழ்ப்பகை நம்மீது
ஆதிக்க விரல் நீட்டி
அழிக்கப்பார்க்கும் தந்திரங்கள் யாவும்
தவிடு பொடி ஆகவேண்டும்.
அந்த ஒரு எழுத்து மட்டும்
"ஆயுத" எழுத்தல்ல!
தமிழ் என்று ஒலிக்கும்
நம் எழுத்து வெள்ளம் அத்தனையுமே
ஆயுத எழுத்துக்கள் தான்.
அவற்றில் நம்மிடம் எப்போதுமே
கூர்மையுடன் ஓர்மையுடன்
ஒலித்துக்கொண்டிருப்பது தான்
"தொ.ப" எனும் நம்
உயிரெழுத்துக்கள்.
_____________________________________________ருத்ரா