எப்போது வருவாள்?
_______________________________ருத்ரா
கனவு என்பது
போதைகளின் போர்வை.
தூக்கம் கலைக்கும்
கொசுக்களையும் கவலைகளையும்
விரட்டியடிக்கும்
ஒரு சல்லாத்துணியில்
அவனது போர்வை கலைத்தையல்
செய்யப்பட்டிருந்தது.
அழகிய பூக்கள்
அவற்றை மொய்க்கும்
பட்டாம்பூச்சிகள்
இவையெல்லாம் அச்சிடப்பட்டிருந்தன.
ஒரு பூங்காவே போர்வை ஆகி
பொன் மேகக்கூட்டங்களே
அதில்
நெசவு ஆகியிருந்தன.
ஆனாலும்
அவள் முகத்தை அங்கு
காணவே இல்லை.
கண்கள் வலிக்க மூடிக்கிடந்து
கற்பனையைக் காய்ச்சி வடிகட்டி
அந்த ஊமைப்பிழம்பில்
ஊற்றிக்கொண்ட போதும்
அவள் முகம் அங்கே
வரவே இல்லை.
இருப்பினும்
சட்டென்று போர்வையை
உதறி எறிந்து விட்டு
ஸ்கூட்டரை கிளப்பிக்கொண்டு
அவன் புறப்பட்டு விட்டான்.
எங்கே?
அவளைப்பார்க்கவா?
அவனுக்கே தெரியாது.
ஏனெனில்
அவளுக்கு இன்னும்
ஒரு காதலி கிடைக்கவில்லை!
என்ன!
இந்த மின்னணு வனத்திலா
ஒரு மின்மினி கூட கிடைக்கவில்லை?
ஆம்...
அவன் கலித்தொகையிலும்
குறுந்தொகையிலும்
மனம் தோய்த்துக்கிடந்தான்.
அந்த "முளி தயிர் பிசைந்த
மென் காந்தள் விரலை"த்தேடினான்.
"கல் பொரு சிறு நுரை"யன்ன
காதல் பிரிவோடு துடிக்கும் அந்த
தட்டாம்பூச்சியின் கண்ணாடிச்சிறகுகளோடு
கண்புதைத்து செவி தைத்துக்கிடந்தான்.
நெடுநல் வாடைக்குள்ளும்
அவன் மனம் தொடுநல் வாடை தேடி
சூடேறிக்கிடந்தான்.
எப்போது வருவாள் அவன் காதலி?
_____________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக