திங்கள், 23 நவம்பர், 2020

தரிசனம்

 தரிசனம்

________________________________ருத்ரா


கடவுள் இருக்கிறாரா?

இல்லையா?

இது கேள்வி அல்ல.

நம்பிக்கையின் விளிம்பிலிருந்து

விழும் ஓர் அருவி.

அதன் ஓசைக்குள்

அறிவுப்பரல்கள் சிதறுகின்றன.

அந்த சலங்கைக்குள் 

எட்டிப்பார்.

அவர்கள் பிரம்ம நர்த்தனம் 

என்பார்கள்.

இவர்கள் ப்ளாங்க்ஸ் கான்ஸ்டன்ட என்று

நுண்கணக்கு சொல்வார்கள்.

மனிதனின் உணர்ச்சியற்ற கல்லில்

கடவுள் இல்லை இல்லவே இல்லை

என்று

கல்வெட்டு செதுக்கப்படுகிறது.

மனிதன் அடிமனத்துள்

அச்சம் திகில் என்று 

தீக்கொளுந்துகள்

பற்றிக்கொள்ளும்போது

கல்வெட்டே அழிந்து போகிறது.

கடவுள் 

ஒரு மனிதனாய்

நம்மிடையே காலாற நடக்கும்போது

மேலும் மேலும்

புதிய பரிமாணங்களில்

பரிணாமம் கொள்ளுகிறான்.

அறிவின் வெளிச்சத்தோடு

கடக்கும் மைல்கற்களே இங்கு

ரத்னக்கற்கள் ஆகும்.

அப்போது அந்தக்கடவுள்

ஒரு பெரியாரின் கையின் கைத்தடியாய்

ஊன்றி ஊன்றி 

ஓசைப்புயல் எழுப்பி

அறியாமைத்தூக்கத்தைக்

கலைத்து கெடுக்கும்போது

கடவுளே கடவுளற்றவனாய்

காட்சி அளிக்கின்றான்.

இது கடவுளுக்கு கடவுளற்றவன் 

தரும் ஒரு தரிசனம்.

______________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக