சனி, 5 டிசம்பர், 2020

தேடிப்பார்க்கிறேன்

 தேடிப்பார்க்கிறேன்

___________________________________ருத்ரா



எத்தனை தடவை தான்

என் கற்பனைச்சிறகுகளை

உன் சிறகுகளில் ஏற்றிக்கொள்வது?

என் எண்ணத்தின் 

வண்ணங்களையெல்லாம்

உன் மீது கொட்டிக்கவிழ்ப்பது?

என் மனதை 

படபடக்கும் உன் மெல்லுடலில்

ஊஞ்சல் கட்டி ஆடுவது?

நான் சும்மா இருக்கும் போது கூட‌

என் மூளை வனத்தில்

உன்னை பல மில்லியன்களாய்

மொய்க்க விடுவது?

இன்று 

இக்கணம் 

பார்த்த நீ

அடுத்த கணமே

இறகுக்குவியலாய்

மறைந்து சிதறலாம்.

ஆனாலும் நீ

என்னுள் 

சிறகடித்துக்கொண்டிருக்கிறாய்.

இந்த சிறகுப்புயல்களெல்லாம்

ஒரு நாள் 

ஓய்ந்தே போய்விட்டது.

அவளைக்கண்டு காதல் கொண்டு

கல்யாணம் எனும்

கூடு கட்டிக்கொண்ட பிறகு

இந்த 

வானம் எல்லாம் எங்கே போயிற்று?

உன் சிறகுக்கூட்டம்

அவிழ்க்கும் வண்ண மழையெல்லாம்

எங்கே? எங்கே?

பட்டாம்பூச்சியே! 

காலே இல்லாமல் நீ பதித்த‌

கால் தடங்கள் யாவும்

எந்த கல்லறையில் கிடக்கின்றன?

வாழ்க்கைப்பாறாங்கல்

நசுக்கி கூழாக்கும்

அந்த வைரநிழற்சுவடுகளில்

நான் தேடிப்பார்க்கிறேன்

என் கவிதைகளின் 

உயிரெழுத்துக்களையும் 

மெய்யெழுத்துக்களையும்.


___________________________________________





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக