வெள்ளி, 11 டிசம்பர், 2020

நெஞ்சு பொறுக்குதில்லையே


நெஞ்சு பொறுக்குதில்லையே

‍‍‍‍‍______________________________________ருத்ரா


கவிப்புயல் பாரதியே!

உன் நினைவு எங்களுக்கு

இன்னும் தோட்டாக்கள் தான்.

துப்பாக்கிக்குள் போட விரும்பாத‌

தோட்டாக்கள் தான்.

அந்த மதவெறியர்கள் 

நம் மகாத்மாவின் மார்புப்பிரதேசத்தை

தோட்டாக்களால் துளைத்தபோதும்

எங்களுக்கு அந்த துப்பாக்கிகள்

காலியாகத்தான் இருக்கிறது.

அன்பு அறம் மானிடநேயம் சமுதாய நீதி

இவற்றால் 

அந்த துப்பாக்கிகளைத்துடைத்து

ஆயுத பூசை மட்டுமே

கொண்டாடி கொண்டிருக்கிறோம்.

ஆயினும் வெறி பிடித்த‌

சாதி மதப்பிசாசுகள்

அடித்தட்டு மக்களையே அடித்துப்போட்டு

உரமாக்கி அதில் அவற்றின்

உன்மத்தக்கொடிகளை

பறக்க விட்டுக்கொண்டிருக்கின்றன.

ஓ!பாரதி இந்த வேடிக்கையைப்பார்த்தாயா?

நீ எங்கள் தமிழ்க்கவிஞன் தான்.

எங்கள் எரிமலைக்கவிஞன் அல்லவா நீ!

ஆனால் 

உன் கவிதை நூல்களைக் கவனியாத

இவர்கள்

இன்று உன் வேறு ஏதோ 

ஒரு நூலைப்பார்த்து

உனக்கு பல்லக்குத்தூக்கி

பளபளப்பாய் விழா எடுகிறார்களே!

அந்த வேடிக்கைக்குள்

நம் நெஞ்சுகள் வெடிக்கும் வேதனைகளே

நிரம்பிக்கிடக்கின்றன.

"செந்தமிழ் நாடெனும் போதிலே..."

என்று எங்களை

கிளர்ச்சி கொள்ள வைத்தாயே

அந்த வெளிச்சமே எங்களுக்குள்

ஆயிரம் சூரியன்களை 

பிரசவிக்கச்செய்கின்றன.

அதன் மீது இந்தி எனும் 

பஞ்சுமூட்டைகள் கொண்டு 

போர்த்திக்கொண்டிருக்கிறார்கள். 

"நெஞ்சு பொறுக்குதில்லையே..

இந்த நிலைகெட்ட மனிதர்களை

நினைந்து விட்டால்...."

எங்கள் யுகங்களின் இமையுயர்த்த வந்த‌

கவி இமயமே!

உன் வரிகள் எங்கள்

விடியலின் விழிகள்.

தமிழ் வாழ்க!

பாரதியின் விடுதலை மூச்சும்

எங்களுக்குள்

சக்தி பாய்ச்சட்டும்!


____________________________________________________




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக