சிந்தனை செய் மனமே!
_______________________________________________ருத்ரா
காற்றைப்போல
நமக்கு கடவுள்.
காற்று தான் கடவுள்.
காற்று அற்றுப்போன இடத்தில்
உயிரும் அற்றுப்போகிறது.
அப்படியென்றால்
வாருங்கள்
காற்றை உரித்து
கடவுள் தரிசனம் செய்வோம்.
ஆமாம்
அதற்கு ஆயிரத்தெட்டு
"யோகா" இருக்கிறது.
மூச்சின் நூலேணி ஏறி
பிரம்மதரிசனம் செய் என்றார்கள்.
அந்த நுரையீரல் வனத்துள்
திளைத்துப்பார்த்தோம்.
உயிர் வளியும்
கரி வளியும் தான்
அங்கே மாலை மாற்றிக்கொண்டன.
வர்ணங்கள் அற்ற அந்த வனத்தில்
மூளிப்பிரம்மம் மட்டுமே
மூண்டு கிடக்கிறது.
இதற்குள் ஏது
உங்கள் முப்புரி நூலும்
மிலேச்சத்தனமான
சிந்தனை மலங்களும்?
சாதிகளின் சதிவலைகளும்
ஆதிக்க அசிங்கங்களும் அங்கே இல்லை.
வாயு புத்திரனுக்கு
உத்தரீயம் போட்டு
பிரம்மோபதேசம் செய்வதாயினும்
காற்று தான்
ஊற்று.
இதில் ஏன் பொய்களை
ஊதி பூதம் காட்டுகிறீர்கள்.
ஒரு மனிதனின் குடலைப்பிடுங்கி
மாலையாகப்போட்டு
மனமகிழும் கடவுள்களின்
மனம் எனும் மலக்குடலில்
என்னத்தை
நாம் யோசித்துப்பார்க்கவேண்டியுள்ளது?
பிரம்மத்தையா?
நீ சொல்லும் பிரம்மம்.
நான் சொல்லும் பிரம்மம்
என்று
"ப்ராண்டு"கள்
எதற்கு உருவாயின?
இந்த மனிதனின் கீழ் தான்
மற்ற எல்லா மனிதன்களும்
கரப்பான் பூச்சிகள் போல
நசுங்கிக்கிடக்க வேண்டும்
என்ற தர்மங்கள் எதற்கு உருவாயின?
தர்மங்கள் அதர்மங்கள்
என்று தராசுத்தட்டுகளை
ஏந்தியிருக்கும்
கைகள்
அதர்மங்களில் முளைத்தவையா?
என்ற ஐயங்கள் எப்படி
இங்கே புகை மூட்டம் போட்டன?
யுகங்கள் எல்லாம்
உடல் பிளந்து
உயிர் இழந்து
ரத்தச்சேற்றில் அவை
புதைந்து போவதற்கு
இந்த கேள்விகளே
முதலில் முளை விடுகின்றன.
இவற்றை மூர்க்கமாய் கிள்ளிஎறியும்
சிந்தனை வடிவங்களுக்குள்
மதங்கள் கண்ணாமூச்சி ஆடும்
நிகழ்வுகளைத்தான்
தினந்தோறும் காண்கிறோம்.
மானிடனே!
நீ மந்தையில்லை.
உன் அறிவின் கூர்மை ஒன்றே
உன் ஆயுதம்.
நீ கிழிந்து கந்தலாய்ப்போகுமுன்
உன் கூர்மை காட்டு.
கூர்ம அவதாரங்கள் எல்லாம் இருக்கட்டும்.
உன் கூர்மையின் அவதாரமே
நீ மழுங்கல் அடைந்து மக்கிப்போவதை
தடுக்கும்.
சிந்தனை செய் மனமே!
அவர்களின் தீ வினைகள் அழிந்துபோக
சிந்தனை செய் மனமே!
சிந்தனை செய்!
______________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக