வியாழன், 24 டிசம்பர், 2020

ஆயிரம் பிரகாசமாய்...

 ஆயிரம் பிரகாசமாய்...

_________________________________ருத்ரா.


அது என்ன?

காதலிக்கிறேன்

என்று 

சொல்லிவிட உனக்கு

ஆயிரம் யுகங்களா வேண்டும்?


மின்னல் பிரச‌விக்கும் முன்னமேயே

கன்னம் குழித்து சிரித்து

என்னைப்பார்த்தாயே

அதற்குப்பின்னருமா

இந்த வானங்களையெல்லாம் 

சுருட்டி கைக்குட்டையாக்கி நான்

வியர்த்து வியர்த்து வடியும் 

என் முகத்தைத்

துடைத்துக்கொண்டிருப்பது?


உன் இமையின் மெல்லிய 

தூரிகையில்

படபடத்து

கண்கள் வழியே காதலை

ஓவியமாக்கி விட்டாயே

அதன் பின்னருமா

நான்

கை வேறு கால் வேறாய்

முறுக்கி

முகம் திருகி முதுகில் நிற்க‌

ஒற்றைக்கண் கொண்டு

உருண்டையான என் விழிவெண்படலத்தை

ஆம்லெட் போட்டது போல்

ஒரு பிக்காஸோ ஓவியமாய்

அந்த அலங்காரச்சுவரில் 

ஒரு அலங்கோலமாய் நான்

தொங்கிக்கொண்டிருக்க வேண்டும்?


மீன் கொத்தி ஒன்று

தண்ணீரை படக்கென்று குத்தி

வைரச்சிதறல்களை

நீரில் தெறித்தது போல்

"க்ளுக்"என்று

ஒரு சிரிப்பால் 

என்னைக்குத்தி விட்டுப்போனாயே !

அது 

என் இதய ஆழத்துள்

இன்ப நங்கூரம் ஒன்றை

பாய்ச்சி விட்டதே

அதன் பின்னும் நான்

கோடி கோடி மைல்கள் கணக்கில்

நீளமாய் ஒரு தூண்டில் போட்டு

கடலே இல்லாத ஒரு

சூன்யவெளிக்கடலில்

மீன் பிடிப்பதாய் உன் காதலுக்கு

இந்த கரையில் 

நின்று கொண்டிருக்க வேண்டுமா?

அதுவும் 

இது விளிம்பற்ற ஒரு தொடுவானச்சிகரமாய்

என் கனவின் கூர் ஊசியில்

நின்று கொண்டிருக்கவேண்டுமா?

கண்ணே!

உன் சொல் என்று பூக்கும் என்று

இந்த மொட்டை வெளியின் 

மௌன மொழிக்குள்

நெளிந்து கொண்டிருக்கிறேன்.

இதோ இதோ ..என்று

அந்த நட்சத்திரங்கள் போல்

என் மூக்கின் மேல்

முட்டி மோதிக்கொண்டு

உன் ஒளியின் வாசனையை காட்டிக்கொண்டு

நிற்கிறாய்!

என் இருளுக்குள்ளும்

எப்போதும் உன் 

இனிப்பின் பூபாளம் தான்.

உன் விடியல் விரியும் வரை

இந்த அண்டத்தையே பூட்டிக்கொண்டு

வர்ண மண்டலங்களின் நினைப்புகளின்

ஒரு புழுக்கூட்டு ஊஞ்சலில்

ஆடிக்கொண்டிருப்பேன்.

உன் சொல்லின் சிறகு விரிக்கும்

காதலின் அந்த‌

பட்டாம்பூச்சி பட்டென்று வெளிப்படும்

தருணம் 

இந்த கொடுங்காலத்தின்

கன்னிக்குடம் உடைத்துப் பிறக்கும்

என்ற ஒரு மெல்லிய நம்பிக்கையில்

நான் இந்தக்கூட்டில்

அடைந்து கிடப்பேன் கண்ணே!

ஆம்.அடைந்துகிடப்பேன்.

வரும்போது வா!

என் ஆயிரம் பிரகாசமாய்!


_____________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக