புதிய ஊற்று
________________________________ருத்ரா
ஜெருசெலேம் பெத்தலஹேமின்
ஒரு மாட்டுக்கொட்டிலில்
அன்று பனிப்பூ மழையில்
மானிட வாசத்தின்
ஒரு புதிய பதிப்பு
அச்சிடப்பட்டது.
மனிதனின் தலைக்குமேல்
எப்போதும்
தண்டனை எனும்
மரண மேகமே
கவிந்து கொண்டிருப்பது மட்டுமே
கடவுளின் முகம் ஆக
இருந்தது.
அந்த அச்சத்தில்
கடவுள் உதிர்த்த வசனங்கள் எல்லாம்
மனிதன் மீது
நடுக்கங்களாய்
அடர் மழையை அமில மழையாய்
கொட்டிக்கொண்டே இருந்தது.
அன்று
அந்த மனிதக்குஞ்சு பிறப்பிலேயே
மானிடத்தோற்றத்தின்
உட்குறிப்பு
ஒரு வெளிச்சமான உலகத்தை
உள்ளடக்கிக் காட்டிவிட்டது.
மனிதா
ஏன் உனக்குள்
பகை வளர்த்து
தீயாக்கி பொசுக்கிக்கொள்கிறாய்.
"பாவம்" எனும்
அசுத்தம் கொண்டா
உன்னை சுத்தப்படுத்த முடியும்?
பாவம் என்பது
ஒரு எண்ணம் தானே.
அதற்கு நீ பலியாக்கப்பட்டு
தண்டிக்கப்படவும்
தேவையில்லையே
நீ மனம் திருந்திவிட்டால்.
அது அகராதியில்
மன்னிப்பு என்ற சொல்லாய்
துளிர்த்து நிற்பதே
கடவுள் என்று இங்கே
மொழி பெயர்க்கப்பட்டு விட்டது.
அன்பு
என்ற பிரவாகம்
எல்லாவற்றையும்
உடைத்துக்கொண்டு பெருகும்
ஒரு சொல் அல்லவா!
அதனுள்
எல்லா மதங்களும்
எல்லா கடவுளும்
அவர்கள் ஆலயங்களும்
அந்த மணியோசைகளும்
அடைக்கப்பட்டிருக்கின்றன.
கடவுள் வெறும் தண்டனை அச்சம் அல்ல.
கடவுள் தான் மானிட ஊற்று.
மானிடம் தான் கடவுள் ஊற்று.
புரிந்து கொண்டாயா?
இப்போது
இருள் புரிந்து கொண்டது ஒளியை!
ஒளி அணைத்துக்கொண்டது இருளை!
_____________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக