வியாழன், 19 நவம்பர், 2020

பூங்காவின் ஓரத்து பெஞ்சில்

  

பூங்காவின் ஓரத்து பெஞ்சில்

_____________________________________ருத்ரா 


பூங்காவின் ஓரத்து பெஞ்சில்

உட்கார்ந்து இருந்தேன்.

தூங்குமூஞ்சி மரத்தின்

இளஞ்சிவப்புக் கவரிபூக்கள்

பஞ்சு மிட்டாய்ப்பூக்களாய்

தனிமையின் இனிமையை

எனக்குத் தூவுவதாய் ஒரு உணர்வு.


பூங்கா என்றால்

ஓய்வு ஊதியக்காரர்களும்

ஊதியம் இல்லாத ஓய்வுக்காரர்களும்

கூடுகின்ற இடம் தான்.

சிலரது

பொருளாதாரக்கவலைகளும்

அல்லது சில‌

மலட்டுத்தனமான‌

அத்வைத விசிஷ்டாத்வைத 

சித்தாந்த உள்முனைப்புத்தேடல்களும்

அடித்துதுவைத்து

அலசிப்பிழியும் இடம் தான்

அந்த பூங்கா.


ஏதோ ஒரு குறுக்குத்துறைப்படியில்

தண்ணீர்த்திவலைகளில்

சிந்துபூந்துறையின் எதிர்ப்பாய்ச்சல்

தாமிரபரணியின்

பளிங்கு சிந்தனைகளில் 

புதுமைப்பித்தனை

தோய்த்து தன் நெஞ்சுக்குள் ஊட்டுவதாய்

ஒரு திருநெல்வேலிக்காரர்

தன் சட்டையின் பின்னால்

காக்கா எச்சம் இட்ட ஓர்மையே இன்றி

மேலே இலைப்பின்னல்களில்

நெசவு செய்து கொண்டிர்ந்தார்.


இன்னொரு பெஞ்சில்

ஒருவர் நெடுங்கிடையாய் 

படுத்துக்கிடந்தார்.

அவர் உடலின் பெரும்பகுதி

மறைக்கப்படாமல் ஒரு வித

 நிர்வாணத்தை

காட்டிக்கிடந்தது.

அவர் கந்தலில் 

கந்தாலாகிக் கிழிந்து கிடந்தார்.

அதை கந்த சஷ்டிக்கவசமா வந்து

போர்த்தப்போகிறது?

பசி மயக்கமா? போதையா?


இன்னொரு ஓரத்தில்

சமுதாயத்தின் அவலங்கள்

மனித ஈசல்களாய் 

மொய்த்துக்கிடக்க‌

அந்த புல் திடல்

கவலைகளும் கனவுகளுமாய்

இறைந்து கிடந்தது.


அந்த பெஞ்சின் சாய்வு சிமிண்டு

வெடித்து சில கீறல்களை 

ஓவியமாய் தீட்டியிருந்தது.

ஆனால் திடீரென்று

அந்த திருநெல்வேலிக்காரருக்கு

என்ன தோன்றியதோ?

அதில் கிளைத்திருந்த அந்த‌

அரசமரத்துக்கன்றின்  வேரையே 

அடியோடு 

பறிக்க முயன்றார்.

தளிர் மட்டுமே அவர்கையில்.

வேர் பலமாய் சிமிண்டுப்பெஞ்சை

ஒட்டிக்கிடந்தது.

அவர் கையில் அந்த அரசந்தளிர்

புத்தம் சரணம் கச்சாமி

என்றது.

ஆனால் திடீரென்று

அவரைச்சுற்றி ஒரு செங்கடல்

சுநாமியாய் தாக்கியது போல்

இருந்தது.

அது என்ன பிணக்கடல்?

மிதந்துக்கிடப்பது தமிழர்களா?

"கல் தோன்றி மண் தோன்றி" 

எல்லாம் இல்லை...

பூமியின் அடிவயிற்று

லாவா மணிவயிற்றில்

அது செந்தமிழாய்

வெளிப்படும்போதே

தமிழன் உரு பிண்டம் பிடித்துக்கொண்டது

இந்த சடலங்களிலா

அவன் சரித்திரம் மூழ்கிப் போய் விடும்?

இல்லை!

இல்லவே இல்லை!

ஏதோ ஒரு ரத்த  வாய்க்கால் 

நியாயங்களையெல்லாம் 

அடித்துக்கொண்டு போய்விடுவதா?

அவர் இறுக்கத்துடன்

பூங்காவை விட்டு வெளியேறினார்.


____________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக