வியாழன், 10 டிசம்பர், 2020

இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறது!

 இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறது!

_____________________________________________ருத்ரா

பிரம்மம் என்றால் என்ன?
இந்தக் கேள்விக்கே
கிழடு தட்டி
ஆயிரம் ஆண்டுகளுக்கும்
மேல் ஆகிவிட்டன.
பிரம்மம் என்றால் தெரியாது
என்பதே
அர்த்தம் ஆகிப்போனது.
பிரம்மத்தை அறிந்து விட்டேன்
என்றால்
அது பிரம்மம் இல்லை.
ஏனென்றால்
அறிவது பிரம்மம் இல்லை.
அறிந்து கொள்ளப்படுவதும் பிரம்மம் இல்லை
என்பதே பிரம்மம்
என்று பாஷ்யங்கள் கூப்பாடு போடுகின்றன.
அறிவு என்றால் என்ன‌
என்ற‌
ஒரு அறிவு உண்டு.
அந்த "அறிவை"க்கொண்டு
கொஞ்சம் சுரண்டிப்பார்க்கலாம்
என்று
பிரம்மத்தைத் தொட்டவர்கள்
காணாமல் போய்விட்டார்கள்.
அதாவது
அந்த அறிவு எனும் செயலியை
சுமந்து கொண்டிருக்கும்
மனம் என்பது
தொலைந்தே போய்விட்டது.
கடவுளைத் தேடு.
ஆனால் கடவுளை அறிந்துவிட்டேன்
என்று சொன்னால்
நீ
காணாமல் போய்விடுவாய்.
இங்கு தானே இருந்தது.
இங்கு தானே இருக்கிறது.
என்று
சொல்லிக்கொண்டே இருந்தால்
ஒரு எதிரொலி கேட்கும்.
"நான் இல்லை.
நான் அது இல்லை."என்று

ஒரு ஒலி கிளம்பி வந்து
நம்மிடம் கேட்கிறது
கடவுள் யார் என்று?
மனிதா! உன்னிடம் தானே
அறிவு இருக்கிறது!
அறிந்து சொல் என்று கேட்கிறது.
கடவுளா? அப்படியென்றால் என்ன?
கேள்விகள் தான் கடவுளா?
அந்தக்குரல் சிரித்துக்கொண்டே
மறைந்து விட்டது.

"கடவுளே!"
என்றேன்.
என்னைக்கூப்பிடாதே.
நான் இல்லை என்று
நீ
புரிந்து கொள்ளத்தான்.
கடவுள் என்ற சொல்
உன் மீது வீசப்பட்டு இருக்கிறது.
அய்யோ!
மீண்டும் கடவுளே!
என்றேன்.
இல்லை என்ற எதிரொலி தான்
இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறது!

_____________________________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக