திங்கள், 7 டிசம்பர், 2020

வசந்தம் வரட்டும்

 வசந்தம் வரட்டும்

__________________________________ருத்ரா


என் உள்ளத்தில் கோவில் கட்டினேன்.

பளிங்கு மண்டபம் அமைத்தேன்.

கருவறை ஒன்றில்

ஒரு கீற்று வெளிச்சம் மட்டும் தெரிய‌

சிலை ஒன்றும் அமைத்தேன்.

அது என்ன சிலை?

அதன் அடையாளம் என்ன?

எதற்கு இது?

கும்பிடவா?

இல்லை இந்த‌

அடையாளமற்றதிலிருந்து

பல அடையாளங்களை பெயர்த்தெடுக்கவா?

இந்த‌ நிலம் தோன்றி

கடல் தோன்றி

வானம் எனும் திரை தோன்றி

அதில் பிரபஞ்சசித்திரங்கள்

ஆயிரம் ஆயிரம் திட்டுகளாய் தோன்றி

என்ன சொல்லிக்கொண்டிருக்கின்றன?

எதற்கோ 

என்னை பயமுறுத்துகிறது.

நடுங்கி கிடுகிடுத்து

நான் நா உளறுகின்றேன்.

ஓங்கரிக்கும் ஓசைச்சிதிலங்களில்

உருவமற்ற‌

வாக்கியங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன.

அவை குவிகின்றன.

பிணக்குவியல்களாய்!

உயிர்ப்பிஞ்சு எதேனும்

உள்ளிருக்குமோ?

உள்ளிருந்து

நசுங்கியதாய் ஒரு ஒலிப்பிஞ்சு

காற்றில் கசிகிறது.

அது

என் அச்சத்தின் முதல் அகரம்.

இதையா

கடவுள் என்று

என் இதயப்பீய்ச்சல்களில்

இது காறும் 

அச்சடித்துக்கொண்டிருக்கிறேன்!

உடல்கள் உடல்கள் உடல்கள்

கடல்கள் போல்.

அவை மிதக்கின்றனவா?

ஒன்றையொன்று பிய்த்து தின்க‌

பரபரக்கின்றன.

குடல்களும் ரத்த நாளங்களும்

காலங்கள் தோறும்

கண்ணுக்கே தெரியாத ஒரு 

ஆலமரத்தின் விழுதுகளாய்

நிலம் தொட்டு நிலம் தொட்டு

மண்புழுதியில்

குங்குமம் சந்தனம் மற்றும்

சேறும் சகதியுமாய்

வேத வியாக்கியானங்கள்.

மனிதம் என்பதன்

வரியின் ஒளி

மொத்தமாய் ஒரு இருட்டின் பிழம்புக்குள்

அழுந்திக்கிடக்கிறது.

அங்கே இமைகள் அவிழும் வரை

இருட்டே இங்கு

புசிக்கப்படுகிறது.

பூசனை செய்யப்படுகிறது.

கைகுவிக்கும் 

விரல்களின் எலும்புக்குச்சிகளில்

இலைகள் நீட்டும் பொழுது

அந்த‌

வசந்தம் வரட்டும்!

____________________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக