தலை தெறிக்க எங்கே ஓடுகிறீர்கள்?
அந்த நாமாவளிப்பாடல்களை
மூச்சிரைக்க மூச்சிரைக்க
உங்கள் நுரையீரல்களுக்குள்
நிரப்பிக்கொள்ளவா?
காலங்கள் தோறும் காலங்கள் தோறும்
செல்லரித்துப்போன அந்த
சொற்களையா குவித்துவைத்துக்
கொண்டிருக்கப்போகிறீர்கள்?
எல்லாம்
புல்லிய உயிர்களுமாய் புழுக்களுமாய்
அந்த வழிபாடுகளில்
நெளிந்து கிடக்கின்றன.
மனிதன் என்பவனே எல்லாமாய்
அவன் அறிவு மூலம்
இந்த பிரபஞ்சம் எல்லாம்
பிதுங்கி வழிகிறான்.
எல்லா
ஆற்றல்களின் இடைவெளிக்குள்ளும்
கணித சூத்திரங்களாய்
கண் சிமிட்டுகிறான்.
மனிதா! உன்னைச்சுற்றி
நஞ்சாகிப்போன வேதாந்தங்கள்
பிளவு வாதங்கள் ஆயிரம் பேசுகின்றன.
ஒன்றிழைந்த உன் தூய அன்பு வாதத்தை
பிணங்கள் மூடும் சல்லாத்துணி கொண்டு
போர்த்துகின்றன.
மந்தையிலிருந்து தனித்தெழு!
மானிட ஒளியாய் சீறு!
உன் உயரே புதிய மாற்றத்தின்
ஊற்றுச்சுழி சுழல்கிறது.
கண்ணிழந்தவனா நீ?
உன் புயலின் கண்விழி வீச்சு
சவங்களாகிப்போன சிந்தனைகளை
எங்கோ ஒரு அப்பாலுக்கு
துரத்தி அடிக்கட்டும்!
____________________________________________ருத்ரா
எனது ஆங்கிலக்கவிதையின் தமிழ்க்கவிதை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக