வியாழன், 9 ஆகஸ்ட், 2018

கலைஞர்- ஆறு

கலைஞர்- ஆறு
=============================================ருத்ரா

கலைஞர்- 4
கலைஞர்- 5
என்ற வரிசையில் உன்னை
கலைஞர் 6 என எழுதுவதற்குள்
செந்தமிழின்
"பஃறுளி ஆறாய்"
அந்த வங்காளக்குடாக்கடலையே
சுருட்டிக்கொண்டு
அந்த சந்தனப்பேழைக்குள்
அடைந்து கொண்டாயே!

சந்தனப்பேழை கூட‌
உன் பேனாவுக்கு ஒரு பிழை!
அது உன்
செந்தமிழ்ப்பேழை அல்லவா.
அதனுள் நீ
ஆயிரம் ஆயிரம் விதைகள் ஆகினாய்.
செம்மொழித்தமிழின்
அந்த பிரம்மாண்ட விதைகள்
உலகத்தமிழின் பூங்கா ஆகிறது.
உன் அன்பு உள்ளங்கள்
"எழுந்து வா தலைவா!
நடந்து வா தலைவா"
என்றன.
ஆனால் அது
உன் இதயபேரொலியின்
எதிரொலியாய்
எழுந்து வா தமிழா!
கிளர்ந்து வா தமிழா!
என்று தான் கிடு கிடுத்தது.

"இழுத்து மூச்சு விடுங்கள்"
என்ற டாக்டரிடம்
"என் மூச்சை விடுவதற்கா
இங்கு வந்தேன்?"
என்று அவர் ஸ்டதெஸ்கோப்புக்குள்
இருக்கும் எமனுக்கும்
கேட்கவேண்டும் என்று தானே
அப்படி "ஜோக்" அடித்தாய்.

உன் மூச்சுக்காற்றே எங்கள் தமிழ்ப்புயல்.
இந்த ஆண்டு வரும் புயலை
கலைஞர் என்று அழைப்போம்.
அது சமூக அநீதிகளை அழிக்கும்.
தமிழின் எதிரிகளை வேரோடு சாய்க்கும்.

அந்த எமன் கூட‌
உன்னிடம் விளையாடிக்கொண்டே இருந்தான்.
எப்படியாவது
உன் பேனாவையும் எழுத்தையும்
பிடுங்கிக்கொண்டு விடலாம் என்று.
பாவம்
அவனுக்கு மிஞ்சியது
பழுதடைந்த உன் கல்லீரலும்
சில உறுப்புகளும் தான்.
"தமிழுக்கும் நம் உயிர் என்று பேர்"
என்று முழங்கிய
உன் உயிர் மூச்சு இதோ
நிரந்தரமான ஒரு ஆக்சிஜன் சிலிண்டராய்
எங்களிடையே
"ஒங்கி உலகளந்த ஒரு தமிழாய்" 
  நிலை கொண்டிருக்கிறது.

அன்புத்தம்பியே !
இரவல் வாங்கிய இதயத்தை
ஒப்படைப்பதாக
வேகமாக ஓடிய
உனக்கு ஒரு ஏமாற்றம்.
அந்த இதயத்தை அங்கு வைக்க
வெற்றிடம் ஏதும் இல்லையே!

அந்த அண்ணாவுக்குள்
ஏற்கனவே இருப்பது
உன் தமிழின் இதயம் அல்லவா!

அண்ணாவாய்
கருணாநிதியாய்
இந்த தமிழ்நாட்டின்
தூசு துரும்புகளில் எல்லாம் கூட
அந்த "தமிழே"
இதயமாய் துடித்துக்கொண்டிருக்கிறது.

அதோ ஒலிப்பிரளயம்
ஒரு புதிய யுகப்பிரளயமாய்
கேட்கின்றது!

தமிழ் வாழ்க!
அண்ணா வாழ்க!
கலைஞர் வாழ்க!

======================================================















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக