சனி, 4 ஆகஸ்ட், 2018

போய்க்கொண்டிருந்தது.


போய்க்கொண்டிருந்தது.
===================================ருத்ரா இ பரமசிவன்


வாழ்க்கையின்
நீண்ட மலைப்பாம்பு
விழுங்கியபின்
எலும்புகளை நொறுக்கி
கூழாக்குவது போல்
எனது வாழ்ந்த ஆண்டுகளை
நொறுக்கித்தள்ளியது.
அந்த மிச்ச சொச்சங்களையும்
நான் அதன் நீண்ட குகைச்சவ்வுகளில்
குடியிருந்து
மீண்டும் நினைப்பேன்.
நினைப்பதை எழுதுவேன்.
எப்படி
அந்த குடல்வழியே
பயணம் செய்து கொண்டே.
ஒரு நாள்
நான்
அந்த மலைப்பாம்புக்குள்
கரைந்து விட்டேன்.
அந்த பாம்புக்குள்
மீண்டும் மீண்டும்
நானே தான் விழுங்கப்பட்டேன்.
நான் அதற்கு சலித்துவிட்டேன்.
பாதி விழுங்கிய பின்
என்னை வெளியே துப்பி விட்டது.
இப்போது
நான் இன்னும்
ஒரு நீண்ட குகைக்குள் தான்
போய்க்கொண்டிருக்கிறேன்.
அந்த பாம்பின் வெளிப்புற‌
தோல் டிசைன்களின் அழகில்
நான் மயங்கினேன்.
அதோடு நான் வாதிட்டேன்.
என்னை விழுங்கிக்கொள்!
அல்லது
உன்னை விழுங்க விடு.
வேண்டாம்
என் தீனி நீயில்லை.
உன் தீனி நான் இல்லை.
உனக்குத் தீனி வேண்டுமா?
என் பின்னே வா..
நான் தொடர்ந்தேன்.
திடீரென்று அது மறைந்தது.
க்ளுக் என்று ஒரு ஒலி.
அது மயக்கும் சிரிப்பின் ஒலி.
அந்த க்ளுக் எனும்  ஒலிக்கு
உரிய முக பிம்பம் எங்கே?
நான் தேடினேன்.
தேடும் வெறி மிகவும் அதிகரித்தது.
அந்த சிரிப்பின் பல்வரிசையில்
என்னை மூழ்கடிக்கும்
ஒரு நயாகரா
நீர்ப்படலம் விரித்தது.
அந்த சல்லாத்துணி நெளியலில்
அந்த அழகு சொட்டு முகம்
கரைந்து கரைந்து
கோடுகள் காட்டியது.
என் தேடலின் பூ நுரைகளில்
என் உயிர்ப்பிழம்பு
சவ்வுமிட்டாய்க்காரன் கையில்
உருட்டி உருட்டி பிதுக்கித்தரும்
கிளி மயில் கைக்கடிகாரம்
ஆனது.
நான் அந்த நீர்த்துளிக் கோளத்தில்
கண்ணாமூச்சி ஆடினேன்.
வர்ண வர்ணமாய் அவள் கண்ணீர்?
எப்படி அங்கே கண்ணீர் வந்தது?
வெறுப்பு உற்றேன்.
எதிரே மீண்டும் அந்த மலைப்பாம்பு.
விழுங்கிக்கொள் என்றேன்.
"வேண்டாம்."
"விளங்கிக்கொள்" என்றது.
"எதை?"
"உன் வாழ்க்கையை..."
மலைப்பாம்பு
சருகுகளிடையே சலசலத்து ஊர்ந்து
மரக்கிளைகளை
முறுக்கிக்கொண்டு முறித்துக்கொண்டு
போய்க்கொண்டிருந்தது.

===============================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக