வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

வெள்ளம் என்றொரு மிருகம்

வெள்ளம் என்றொரு மிருகம்
=========================================ருத்ரா

எவ்வளவு அழகிய சொல்!
எவ்வளவு இனிமையாய் ஒலிக்கும்!
வெள்ளம் என்று மலையாளம்
தண்ணீரைச் சுட்டும்.
அந்த தண்ணீரா இந்த‌
கேரளத்துக்குள் ஒரு மிருகம் ஆனது?
கவிதைகள் ஊறும்
கேரளத்து மண்ணே
என்று அழைப்பதற்குள்
ஒரு கருக்கலைவு ஏற்பட்டது போல்
மண் சரிவு.
ஒரு கட்டிடம் அப்படியே
கவிழ்ந்தது.
இந்தக்காட்சியைக்காட்டும்
டிவியே திகிலில் உறைந்து போய்
இருக்கலாம்.
விமான தளம் ஏரிப்பரப்பு போல் ஆகி
விமானங்களையே
விழுங்கிவிடுவது போல்
தள தளக்கிறது.

பலியானவர்களை
எண்ணிக்கை எனும் புள்ளிவிவரத்தில்
அடைத்தாலும்
அது நம்மை மிகவும் கலங்கடிக்கிறது.
நம் கண்ணீரும் சேர்ந்தால்
எங்கே அந்த "இடுக்கி"அணை
விளிம்பு மீறுமோ என்று கவலை கொண்டு
அந்த சோகம் அமுங்கி நின்று
நம்மை அழ வைக்கிறது.

நெஞ்சம் பதறும் அண்டை மாநிலத்தவர்கள்
நிதி உதவியைக்கொண்டு
அந்த வெள்ளங்களுக்கு அணை போட‌
வருகின்றார்கள்.

இந்தியத் தாயின் தவப்புதல்வர்களே
தாராளமாய் உங்கள் நெஞ்சத்தை திறந்து
நிவாரண வெள்ளங்களை பெருகவிட்டு
இந்த வெள்ளங்களை தடுத்து நிறுத்துங்கள்.
யானைகள் நிறைந்த கேரளம் என்பதால்
"யானைப்பசிக்கு சோளப்பொரி"போல்
மத்திய அரசு
உடனடியாய் நூறு கோடி கொடுத்திருப்பதற்கு
நன்றி தான்..நன்றி தான்..
ஆனாலும் வெள்ளவிவர கணக்குக்கு
காத்திருக்கத்தேவையில்லை.
ஆயிரம் ஆயிரம் கோடிகள்
தேவைப்படுவது போல்
கேரள மானிலம்
ஒரு "கேரளக்கடல்"ஆகிவிட்டதே.
இன்னுமா தயக்கம் காட்டுவது?
மத்திய அரசின் நிதி உதவிகள்
உடனடியாய் மிக மிக அதிகமாய்
அளிக்கப்படவேண்டும்.
இன்னும் மழை அபாயம்
மிரட்டிக்கொண்டு தான் இருக்கிறது.
வானமே "பொத்துக்கொண்ட"நிலையில்
வானிலை அறிக்கைகளோ
அபாய அறிவிப்புகளை மழை போலவே
கொட்டிக்கொண்டு தான் இருக்கிறது.

அன்பார்ந்த "ஈர"நெஞ்சங்களே
வாருங்கள்.
கேரளமக்களுக்கு கை கொடுப்போம்
வாருங்கள்.

===========================================================





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக