திங்கள், 20 ஆகஸ்ட், 2018

தர்மயுத்தங்களின் அதர்மங்கள்.

தர்மயுத்தங்களின் அதர்மங்கள்.
=================================================ருத்ரா


கீதையிலிருந்து
கிருஷ்ணன் தொடங்கி வைத்த‌
தப்புத்தாளங்கள் இவை.
நேற்றைய
மெரீனா சமாதி வரைக்கும்
இந்த தாளங்களின்
அபஸ்வரங்கள் தாங்க முடியவில்லை.
என் பதவி உன் பதவி
என்பதே
இவர்களின் குருட்சேத்திரம்.
இந்த ரத்தச்சேற்றில்
நாற்று நாட்ட முயல்வதே
இவர்களின் ஜனநாயகம்.

பாண்டவர்களுக்கு
சேர வேண்டிய பூமி
மறுக்கப்படுவது அதர்மம் தான்.
அதற்கு லட்சக்கணக்கானவர்கள்
யுத்தத்தில் மடிவது
தர்மம் ஆகுமா?

மனிதகுலம் பூண்டற்றுப்போகவா
வேதங்களும் பாஷ்யங்களும்
ஸ்லோகங்களை அடுக்கி அடுக்கி
வைத்திருக்கின்றன.
ஒரு கடவுள் அவதாரமான‌
கிருஷ்ணனால்
அந்த போர்வெறியை
பூ மனங்களின் பூங்காக்களாக‌
மாற்ற முடியாதா என்ன?
பிரபஞ்சத்தையே பிச்சு பிச்சு
விஸ்வரூபம் என்று காட்டியனுக்கு
அந்த அண்ணன் தம்பி உறவுகளிடையே
ஒரு அன்பு உலகத்தை
படைக்க முடியாமலா போயிருக்கும்?

கேட்டால்
நீங்கள்
தர்மம் என்று நினைப்பதும்
அதர்மம் என்று நினைப்பதும்
கடவுளாகிய எனக்கு
எல்லம் ஒன்று தான் என்பார்.
அப்படியென்றால்
மனிதனை ஒரே வர்ணமாக‌
படைப்பது தானே
நான்கு வர்ண மோசடிகள்
எதற்கு என்றால்
ஐந்து விரலும் ஒன்றாக இருக்கிறது
என்பார்.
அதாவது
ஆயிரம் அதர்மங்களை
சீட்டு சேர்த்துக்கொண்டு
ரம்மி ஆடி
அந்த துருப்புச்சீட்டான‌
தர்மத்தை மட்டும்
பதுக்கி வைப்பார்.
இது அஞ்ஞான தந்திரம் ஆகும்.
கடவுள் என்பது
வெறும் மனித ஏற்பாடு
எனும்
ஞானம் எப்போது துலங்குமோ
அப்போது
எல்லா கடவுள்களும் மதங்களும்
காணாமல் போய்விடும்.
இந்த புகைமூட்டத்தை வைத்தே
ஆட்சியாளர்கள்
தங்கள் கிரீடங்களுக்கு
முலாம் பூச முடியும்.

நேற்று
நடந்த அந்த தியானத்தின்
தர்மயுத்தத்தில்
மக்கள் ஜனநாயகமே
சில்லறை சில்லறையாக‌
சிதிலப்படும் அதர்மங்கள்
நடக்கின்றன.
கோடி கோடியாக‌
செல்வங்கள்
கண் முன்னே ஆவியாய் போவதே
இவர்களின்
தேர்தல் சித்திரங்கள்.
நியாயம் நிலை நாட்ட வந்திருக்கிறேன்
என்பவர்களும்
தூரத்து நாற்காலியோடு
பக்கத்து நாற்காலிகளை
முடிச்சு போட்டு
காவல் காக்கும் தர்மத்தையே
அடைகாத்துக்கொண்டிருக்கிறார்கள்.
தர்மம் ..அதர்மம்..
இதெல்லாம்
மர மண்டைகளா
உங்களுக்கு ஏன் புரியவேண்டும்?
சம்பவாமி யுகே யுகே !

==================================================






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக