சனி, 4 ஆகஸ்ட், 2018

சன்னலைத்திறந்து வை....

சன்னலைத்திறந்து வை....
==========================================ருத்ரா



சன்னலைத்திறந்து  வை
காற்று வரட்டும்.
பளாரென்று கன்னத்தில் அறையும்
அந்த சூரியனுக்கு
நம் அஞ்சறை ப்பெட்டிக்கவலை
என்ன தெரியும்?
நம் இதய அறைகளுக்குள்
நுழைந்து பார்க்கட்டுமே!
என்றோ நான்
அந்த வாய்க்காலில்
குளித்துக்கொண்டிருக்கையில்
குடம் கவிழ்த்து
நீர் மொண்டு
என்னையும் அள்ளிக்கொண்டு
போனாளே !
அவளிடமிருந்து ஒரு செய்தி சொல்ல
இந்த சூரியனுக்கு
துப்பு இருக்கிறதா ?
அது போகட்டும்
அதற்குள்
ஒரு பெருங்காய டப்பாவுக்குள்
அடைத்து வைத்தது  போல்
குடும்ப அறைக்குள்
வந்தாகி விட்டது.
புத்தகங்களை லபக் லபக் என்று
முழுங்கி
பரீடசை  எழுதி
வேலை அது இது என்று
கெட்டிமேளமும்
என் செவிப்பறையை கிழித்து
இன்ப இல்லறம் ஆழ்ந்து
குஞ்சு குளுவான்கள் புடை சூழ...
ஆம்..இந்த அறைக்குள்
எவ்வளவு நெடி..எவ்வளவு புழுக்கம்.
பிள்ளையாரும்
சிவனும் பார்வதியும்
கூட கூட வந்தார்கள்.
அந்த டவுன்ஹாலில்
ஒருவர் தத்துவம் தத்துவம் என்று
சமஸ்கிருதமும் தமிழுமாய்
துவை துவை என்று
கசக்கி கந்தல் ஆக்கி விட்டார்.
ஏதோ பிருகதாரண்யம் என்கிறார்.
ஈசாவாஸ்யம் என்கிறார்.
வாழ்க்கை
சல்லடை சல்லடையான
கந்தல் சன்னலுக்குள்
அதே சூரியனை கண்ணாடிக்க வைத்தது.
சன்னலைத்திறந்து வை.
காற்று வரட்டும்.
காட்ச்சிகள் விரியட்டும்.
குடம் கவிழ்த்து அங்கு
தண்ணீர்க்குமிழிகள் ...
சிரித்தன.
அஞ்சறைப்பெட்டிக்குள் இது
எந்த அறை ?

========================================================





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக