ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

"ப்ரஸ்கிரிப்ஷன்"

"ப்ரஸ்கிரிப்ஷன்"
===========================================ருத்ரா

யார் இப்படி
என் பிடரியை முன் தள்ளுவது?
யார் குரல்
என் செவிக்குள் அலறும்
எஃப் எம் அதிர்வுகளில்
பூகம்பம் ஏற்படுத்தி
அந்த செவிக்குள் இருக்கும்
சில்லறை நகரத்தையும்
சில்லு சில்லு ஆக்குவது?
என் வயிறு மடக்கென்று கலங்கி
என் குடல் இத்யாதிகளில்
யார் இந்த வங்காளக்குடாகடல்
காற்றழுத்த தாழ்வு மண்டலங்களை
அமுக்கிக்கொண்டிருப்பது?
சாதாரண சன்னல் திரைச்சீலைகள் கூட‌
ஐந்து தலை நாகங்களின்
சுருள் நாவுகளாய்
இந்த காற்றுக்கடலில்
தடவி தடவி
யார் அந்த அறுந்த வீணையின்
காம்போதியை மீட்டுவது?

...............

"சரிப்பா..என்ன படிக்கிறே
காலேஜா?

ப்ரஸ்க்ரைப் பண்ண டாக்டர்
பேப்பரும் பேனாவுமாய்
ரெடியானார்.

அப்புறம் திரும்பி அப்பாவிடம் கேட்டார்.

"என்ன பையன் சினிமாக்கள் எல்லாம்
பார்க்கிறதில்லையா?"

"படம் பார்ப்பதே அரிது."

"அப்படீன்னா...சிட்டிலே இப்ப நடக்கிற‌
படங்களையெல்லாம் பார்க்கச்சொல்லுங்க"

"என்ன டாக்டர்? எல்லாம் ஒரே பேய்ப்படங்களால்ல இருக்கு"

"பரவாயில்ல..அந்த பேய்ங்களப்பார்த்தா இந்தப்பேய் ஓடிடும்."

"சரி..போகச்சொல்றேன்"

"ஆமா..உங்க வீட்ல காத்தோட்ட வசதி எல்லாம் எப்படி?"

"பரவாயில்ல ஸார்.
நடுக்கூடத்தில் ஒரு சன்னல் தான் இருக்கு.
வாஸ்து இஞ்சீனியர் சொல்லிட்டார்.
அது அடைத்தே இருக்கவேண்டும் என்று."

"எதிர்வீட்டுலேயும்
இதே மாதிரி சன்னல் இருக்குமே.
அது வழியா "துர்க்காந்தம்" உங்க வீட்டுக்கு வந்துடும்னு
அவர் "ஜீவ காந்த சாஸ்திரம்" சொல்லியிருப்பாரே."

"ஆமா..டாக்டர்.."

"சரியாப்போச்சு....
காத்தோட்டம் இல்லேன்னா
எல்லா வியாதியும் வந்து விடும்....
மொதல்ல அத தொறந்து வையுங்க"

சரி என்று
டாக்டர் கிறுக்கி கொடுத்த பேப்பரை வாங்கிக்கொண்டு
அப்பாவும் மகனும் சென்று விட்டார்கள்.

டாக்டர் நமுட்டுச்சிரிப்பு சிரித்தார்.

இந்தப் பசங்களுக்கு
சன்னல் அடிக்கிற மின்னல்கள் தானே டானிக்.
அந்த வாஸ்து சாஸ்திரத்தை
இந்த "சன்னல் சாஸ்திரம்"
அடித்துக்கொண்டு போய்விடும்.

================================================================









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக