சனி, 25 ஆகஸ்ட், 2018

ஜெயமோகனின் சொற்கோட்டை

ஜெயமோகனின் சொற்கோட்டை
===========================================================ருத்ரா


ஜெயமோகன் என்றால்
நான் கடவுள்
எந்திரம் 2
என்றெல்லாம்
திரை எழுத்துக்கள்
நிறைய நிறைய‌
பாப்கார்ன் பொட்டலங்களாய்
தியேட்டர்கள் தோறும்
கொறிக்கப்படுகின்றன என்பதுவே
அவர் பெற்ற ஒப்பற்ற விருது.
ஏன்
அவரது வெண்முரசங்கள்
கடிகார நேரங்கள் எல்லாம்
வெளிக்கிளம்புமுன்
அவற்றையும் பிதுக்கிக்கொண்டு
வெளியேறி
வாசகர்களையெல்லாம்
அந்த சூதர்களின்
வண்ண வண்ண ஓங்கரிப்புகளில்
அமிழ்த்தி அமிழ்த்தி
மூச்சுத்திணற செய்கின்றன என்பதில்
சந்தேகமில்லை.
அவர் "எழுத்துக்களின் பிதாமர் பீஷ்மர்"
என்பதில் மட்டற்ற மகிழ்ச்சியே.
அதற்காக பிதாமகரே !
இந்த தமிழர்களை ஆரிய நச்சு தோய்ந்த
அம்பு படுக்கையில் வீழ்த்துவதற்காக
உங்கள் எழுத்துக்கள் "ஒரு தந்திரபுரியாக"
இருப்பதை நாங்கள்
எப்போதோ உணர்ந்து கொண்டு விட்டோம்.

தமிழின் மீதும்
தமிழ் எழுத்துக்களின் மீது
தமிழையே உருட்டித்திரட்டி
கூரிய ஆயுதம் செய்து
தாக்குவீர்கள் என்றால்
தமிழ் மாண்பும் தொன்மையும்
காக்கப்படவேண்டும் என்னும்
தமிழர்கள்
அதை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.
ஜெயமோகனின் "சொற்கோட்டை" எல்லாம்
தமிழர்களின் தன் மானத்தையே
எரிக்க வந்த ஒரு "அரக்கு மாளிகை"
மனுஷ்யபுத்ரன் கவிதைகள் மீது
ஒரு காழ்ப்பு மழையை
கொட்டித்தீர்த்திருக்கிறார்.

மனுஷ்யபுத்திரன் கவிதைகளில்
எழுத்துக்கள் புள் புகுந்தும்
வானம் தேடும்.
புல் பூண்டு பூக்கள் கூட
மனிதனை நோக்கியே
தன் விடியல்கள் தேடும்.
மனிதர்கள் ஏதோ
ஒரு உண்மை மற்றும்
ஒரு நியாயத்தை  உணர்த்த
கூடு விட்டு கூடு பாய்ந்திருப்பார்கள்..
ஜன்னல் திரைச் சீலையாய்
கரையில் மணல் சிற்பமாய்
அதில் கடற்காக்கைகளாக
இன்னும் என்னவெல்லாமோவாக..

மனித பாத்திரங்களிலும் வந்து
தன்  நசுங்கல் அல்லது பொசுங்கல்
மூலமாகவும்
பூமியின் அடிவயிற்று லாவாவை
ஒரு போன்சாய் மரமாக்கி
தன்  மடியில் ஏந்தியிருப்பார்கள்.
அந்தக்கவிதையை ஏந்தியிருக்கும்
தாள்கள் கூட வாள்கள் ஏந்தி
வாழ்க்கையைப்போராடும்.
உயர் தரமான கவிதைகள் அவை.

ஜெயமோகன்  எழுத்துக்களோ
அவற்றின் உயிர் மெய் தாண்டிய
ஒரு பொய்யில்
ருசிக்காக
பொரிக்கப்பட்டிருக்கும்.
மனிதனுக்கு
நாலுவர்ணசட்டை மாட்டி
சமூக அநீதிகளையே
அவனுக்கு
வரப்பு கட்டி
வாய்க்கால் வெட்டி
நாலாந்தரத்துக்கும் கீழாய்
ஒரு நாய்ச்சங்கிலியில்
அவனைக்  கட்டி வைக்கப்பார்க்கின்றன
அவர் எழுத்துக்கள்.

உசந்த வர்ணத்துக்கு
"மவுலி"கவித்து
அடிமைகள் எனும் நாலாம் வர்ணம்
அதற்கு கீழும் ஐந்தாம் வர்ணம்
என்றெல்லாம்
இந்த அடித்தட்டு மக்களை
பிய்ச்சு பிய்ச்சுத்தின்னும்
அந்த  சாதிப் "பேய் சாத்திரங்களையும்
ஒரு தங்க அரியாசனத்தில்
அமர்த்திக்கொண்டல்லவா
ஆல வட்டம் போட்டுக்கொண்டிருக்கின்றன 
அவர் எழுத்துக்கள்.


அவர் எங்கே சுற்றி
எப்படி வந்தாலும்
சமஸ்கிருதத்துக்கு
செருப்பாக 
தமிழ் கீழே கிடக்கும்
என்ற கருத்திலும்
இந்துத்வா எனும்
பெத்தடின் ஊசிமருந்து
இந்துக்கள் தோலின்
ஒவ்வொரு மயிர்க்கண்ணிலும்
செலுத்தப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும்
என்ற நோக்கத்திலும்
நங்கூரம் பாய்ச்சி நின்றுகொண்டே  இருப்பார்.

இந்து மதம்
அவர் போன்றவர்களுக்கு
பட்டா போட்டு கொடுக்கப்பட்டது
என்று யார் சொன்னார்கள்?
இந்து மக்கள்
நாத்திகம் மூலமாகவும்
கடவுளை கேள்வி கேட்டு
பாஷ்யங்கள் படைத்து இருக்கிறார்கள்.
இயற்கையிலேயே
மற்ற சித்தாந்தங்களையும்
அறிவுக்குள் ஊற வைத்து
அசை போட்டுக்கொட்டிருக்கும்
நியாய வைசேஷிகங்களும்
மற்றும் சாங்க்ய தத்துவங்களும்
கடவுளைத்தேடி தேடி
ஓய்ந்து அலுத்து இன்னும்
நாத்திகத்தின் அந்த
முட்டுச்சந்துக்குள் தான்
முடங்கிக்கிடக்கின்றன.

கடவுள் என்ற ஒரு பொதுச்சுவர் மீது
எல்லா காக்கைகளும் குருவிகளும்
மைனாக்களும்
வந்து அலகு தீட்டி ஒலித்துக்கொண்டுதான்
இருக்கும்.
உங்கள் மதம் எங்கள் மதம்
என்று
அடிப்படைவாத நோயினால்
அவதியுறுபவர்களுக்கு
சமுதாயம் கொடுக்கும்
அதிர்ச்சி மருத்துவமே இப்போதைய தேவை.

அந்த நோயாளிகள்
கையில் துப்பாக்கி இருக்கலாம்
முரட்டுத்தனமான சம்பிரதாயங்கள் இருக்கலாம்.
ஏன் மெல்லிய அருவி போல் எழுதப்படும்
எழுத்துக்களோடு எழுத்துக்களாக
அவற்றில் மனித நீதிக்கு
மரண அருவி தூவும் நுரைப்படலங்களும்
இருக்கலாம்.
அவர்கள்
ஒரு வேலிக்குள் வைக்கப்பட வேண்டியவர்கள்.

============================================================








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக