வியாழன், 9 ஆகஸ்ட், 2018

கலைஞராற்றுப்படையே!

கலைஞராற்றுப்படையே!
==============================================ருத்ரா


தமிழினத்தலைவரே!
எங்கள் கலைஞரே!
வயதுகள் எனும்
வெற்று எண்கள்
வெறிச்சோடிக்கிடக்கின்றன.
அவற்றை எப்போதும்
நீ வரலாறு ஆக்கினாய்.

உன் எழுத்துக்களுக்கு
முற்றுப்புள்ளி இடும்போதெல்லாம்
அதில்
உதய சூரியனைத்தானே
கண்டாய்.
எங்கள் ஆட்சியில்
சூரியன் அஸ்தமிப்பதே இல்லை
என்றானே அந்த
பெருமைக்கார வெள்ளையன்!
உன் தமிழ்
உலகத்தின் எல்லா கிழக்குவிளிம்பிலும்
உதயசூரியனாய்த்தானே
சிரித்துக்கொண்டிருக்கிறது.
"கிழக்கிலே அஸ்தமிக்கும் சூரியனே"
என்று பாமரத்தனமாய்
இவர்கள் கூறினாலும்
அது கண்ணீர் கசியும்
"பா மரத்து" வரிகள் அல்லவா!

அந்தக்காவேரி
மில்லியன் மில்லியன்களாய்
தண்ணீரை டி எம் சி யாய் மாற்றியபோது
இந்தக்காவேரி
பில்லியன் பில்லியன் டி.எம்.சி களை
கண்ணீராக்கி
கலங்கடித்து விட்டதே
இத் தமிழ் நாட்டை.
உன் இழப்பின் சோகம்
எத்தனைக்கு எத்தனை
கொடுமையானதோ
அத்தனைக்கு அத்தனை
வீரம் செறிந்தது.

தமிழ் இனப்போராளியே!
திராவிட மானம் காக்க‌
அந்த நடுநிசியிலும்
நீதியரசர்களின் மரசுத்தியலை
மேசை தட்ட வைத்து
ஒரு சமூகநீதியை நிமிர்த்திவைத்தாயே.
விஸ்வரூபம் எடுத்த
அந்த நெத்தியடித்தீர்ப்பு தான்
உன் முரசொலியின்
கடைசி இதழில்
நீ இட்ட முற்றுப்புள்ளி.

தமிழ்க்கருவூலமே
இனி இந்த மெரீனா தான்
நம் தமிழின் "சங்கப்பலகை"
போராளிகளின் "பொருநராற்றுப்படையே!"
படைப்பாளிகளின் "கலைஞராற்றுப்படையே!"

தமிழ் வாழ்க!
கலைஞர் வாழ்க!

=========================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக