புதன், 8 பிப்ரவரி, 2017

புதிய‌ வழி காட்டுங்கள்

புதிய‌ வழி காட்டுங்கள்
================================================ருத்ரா இ பரமசிவன்.

நம் சிந்தனை வட்டத்தில்
சினிமா போனது.
சின்னமா வந்தது.
அரசியல் வெறுமைக்குள்
இன்னும்
எத்தனை நாள் தான்
நாம்
கூவத்தை
இட்டு நிரப்பிக்கொண்டிருப்பது?
"ஒவ்வொருக்காகவும் எல்லோரும்
எல்லோருக்காகவும் ஒவ்வொருவரும்"
என்ற உயரிய சித்தாந்தாம்
எப்போது
இங்கே உதயம் ஆவது?
ஓட்டு
என்பது
நம் ஒட்டு மொத்த முகம்.
அதில்
"காசு துட்டு மணி"
எனும் கானாப்பாட்டைக்கொண்டு
கோரமாக்கியது போதும்!
மேலிருப்பவன் கீழிருப்பன்
என்ற இரட்டைச்சமுதாயத்தை
எப்போது மாற்றி அமைக்கப்போகிறோம்?
மனிதனுக்கு மனிதன் மனிதனே
என்ற நேர்கோடு தான்
அழகானது அன்பானது உன்னதமானது.
தோழமை என்ற
உயிரிழையில்
இந்த உலகம்
கட்டித்தொங்க விடப்பட்டிருக்கிறது
என்பது அறியாமல்
ஏன் சாதி மத வக்கிரங்களால்
செய்த கோடரியைக்கொண்டு
உங்களையே துண்டித்துக்கொள்கிறீர்கள்.
"கர்மத்தை செய் பலனை எதிபார்க்காதே"
என்று
நீ வியர்க்க விறு விறுக்க உழைத்தபின்
உனக்கு போதிக்கப்பட்டால்
இந்த ஏமாற்று மொழிகளை
உடைத்து நொறுக்குவதே தான் உன்
அடுத்த கர்மம் அல்லது கடமை.
"அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே
செல்வத்தை தேய்க்கும் படை"
என்ற வள்ளுவனின் "சீற்றமே"
இந்த மண்ணின் அடியில்
அக்கினி ஆறாய் ஓடிக்கொண்டிருக்கிறது.
அந்த "லாவா"விட்டு விட்டு
சினிமாக்கதாநாயகிகளின்
முந்தானை அலைகளையா
உங்கள் கனவுகளில் உலவ விடுவது?
"டிஜிட்டல்"அறிவியல் தொட   வேண்டிய
உயரத்துக்கு  எல்லைகளே இல்லை.
திண்ணைப்பேச்சு  எனும்
கொட்டாங்கசிக்குள் நீச்சல் அடிப்பதா
உங்கள் வேலை?
இல்லை !இல்லை!
இன்னும் எத்தனையோ "மெரீனாக்கள்"
அலை அடித்து வரலாம்.!
எழுதிய வரிகள் எல்லாம்
வெறும் நண்டு வரிகள் அல்ல
அலைநீரால் அழிக்கப்படுவதற்கு.!
அன்பான இளைஞர்களே
சிந்தியுங்கள்.
வரும் மைல்கல்களை
நட வேண்டிய பொறுப்பு
உங்கள் தோள் மீது தான்.
புதிய வழி ஒன்றைக் காட்டுங்கள்.
அடைத்த விழிகளை திறந்து வையுங்கள்!

===============================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக