வியாழன், 2 பிப்ரவரி, 2017

நீநீ
=========================================ருத்ரா

கையில் காலணா கூட இல்லாமல்
தன் உள்ளங்கையை விரித்து
அந்த ரேகைகளை
நம்பிக்கையின் மலை மடிப்புகளாக்கி
பயணம் செய்தவர்களின்
வெற்றிக்கதைகளை
நிறைய படித்திருப்பீர்கள்!
அதற்காக உங்கள் உள்ளங்கையை விரித்து
பாய் விரித்து
பதஞ்சலி சூத்திரங்களை
திருக்கு முறுக்காய் உங்கள் உடம்புகளில்
யோகப்பயிற்சி செய்து பார்க்கலாம்.
யாருக்கும் இங்கு கவலையிலை.
அந்த தாடி மனிதரின்
பாசிடிவ் குட்டிக்கதைகளுக்குள்
ஒளிந்திருக்கும்
நெகடிவ் மதச்சாயம்
உங்கள் ஓர்மைக்குள் அகப்படாமல்
தப்பித்து போயிருக்கலாம்
அதைப்பற்றி இங்கே
யாரும் பாஷ்யங்கள் எழுதப்பொவதில்லை.
இமயமலையை கை காட்டலாம்.
ருத்ரப் பிரயாகைக்குள்
குளித்து
ஜபம் செய்யச் சொல்லி
நீங்கள் போதிக்கப்படலாம்.
இதனால்
இங்கே எந்த துரும்பும் அசையப்போவதில்லை

நீங்கள்
எனும் அந்த ஈசல் கூட்டத்திலிருந்து
ஒற்றை ஈசலாய் உன்னைப்பார்.
ரெக்கைகள் உன்னை
உதிர்த்துவிடும் முன்
நீ உதிர்ந்து விடு.
உன் இச்சைப்படி
இந்த ஆகாயத்தை
கைக்குட்டையாக்கி
உன் முகம் துடைத்துக்கொள்.
நீ
உன் பிம்பத்தை
கண்ணாடியில் பார்.
அந்தக்கடலில் குதி.
ஆழம் தெரியாத அந்த மாயக்கடலில்
முக்குளித்து
சிப்பிகளை அள்ளி வா.
அதில் முத்துக்கள் இல்லாமல் இருக்கலாம்.
அனால்
உன் மனதுக்குள்
ஆயிரம் கொலம்பஸ்கள்
ஆயிரம் ஆயிரம் அமெரிக்காக்களை
கண்டுபிடிக்க விரைந்து கொண்டிருப்பார்கள்
புயல்களை எதிர்கொள்ளும்போது
சாதாரண வீட்டுப்பல்லியாய் இருந்த
நீ
டி ரெக்ஸ் எனும்
பிரம்மாண்ட டினோசார்
ஆகிவிடுவாய் !


=================================================
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக