வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

சொற்பொழிவு



சொற்பொழிவு
===================================ருத்ரா இ.பரமசிவன்

கடவுள் என்று சொல்லடா!
கல்லும் வந்து நிமிர்ந்து கொள்ளும்
மண்ணும் கூட‌ மலர்கள் ஆகும்
புரிந்து கொள்ளடா நீயும் 
புரிந்து கொள்ளடா.

சொல்லுக்குள்ளே சொல்லை ஊற்றும் மன
நெய்யின் தீபம் இதுவடா!
பொய்யின் பொருளை மெய்களாக‌
மயங்குவதும் ஏனடா?

சாத்திரங்களும் சடங்குகளும்
சண்டை போட வந்தன.
சாதி சமய வெறித்தனங்கள்
சால்வை போர்த்தி வந்தன.

கடவுள் பற்றி சொற்பொழிவு
மழைகள் பெய்யுது..தினம்
மழைகள் பெய்யுது..

அதில் நனைந்து கேட்டு
களித்து உவகை கொள்வது  
ஒன்று தானடா அது
கடவுள் தானடா.

கடவுளே தான் கேட்கின்றான்
தெரிந்து கொள்ளடா அதை
தெரிந்து கொள்ளடா.

கடவுளைப் படைத்த மனிதன்
மனிதனை படைத்த கடவுள்.
யார் பேச்சை
யார் கேட்பது
குழப்பம் தானடா இது
குழப்பம் தானடா.

லட்சம் ஸ்லோகம்
கோடி அர்ச்சனை
குளிப்பாட்டி மகிழ்ந்ததில்
மகிழ்ந்ததெல்லாம் தெய்வம் தான்
மற்றவர்கள் யாருமில்லை
தெரிந்து கொள்ளடா இதை
தெரிந்து கொள்ளடா.

கடவுள் தந்த வேதம் என்று
கண்களில் ஒற்றி ஒலிக்கின்றோம்.
தன்னைப்பற்றி
புல்லரித்து
புளகாங்கிதம் கொள்ளவா
கடவுள் வேதம் தந்தது?இங்கு
கடவுள் வேதம் தந்தது.

உன்னைப்பற்றி தெரிந்துகொள்ள‌
இந்த கல் எதற்கு? 
வெறும் சொல் எதற்கு?
உன்னை நீயே சுற்றி வந்து
ஞானப்பழம் தின்றிடு
ஞானப்பழம் தின்றிடு.

உன்னையே நீ எண்ணிப்பார்
உன்னையே நீ எண்ணிப்பார்.
தத்வம் அஸி என்றாலும்
தகிடு தத்தம் செய்தாலும்
உன்னையே நீ எண்ணிப்பார்
உன்னையே நீ எண்ணிப்பார்.

தெரிந்தால் சொல்
அறிந்தால் சொல்
யாரென்று
ஏதென்று
கடவுள் என்றால்
என்ன வென்று?
தெரிந்தால் சொல்
கேட்கின்றேன்
என்கின்றான் கடவுள்.

கேட்பவன் அவனே தான்.
கேப்பையில் 
நெய் வடியும்
அதிசயமே இது.

என்னைப்பற்றி பாடு.
அந்த "தேவாரக்கள்" அருந்தி
அன்றாடத் தேர் உருட்ட வந்தேன்.
என்னைப்பற்றி பாடு.
என்னைப்பற்றி
எனக்குத்தெரியாது.
நீ சொல்லும் வரை
நான் அங்கு இல்லை.
நான் அங்கு இருந்தது
நாத்திகனாய்...
உன் "நா"த்திறமாய்
நீ நவில்தொறும் நவில் தோறும்
நான் அங்கு ஊறுவேன்.
என்னை அறியாத் தா!


மனத்துக்குள் நெளிகின்ற‌
ஆயிரம் நிழலுண்டு.
அறிவுக்குள் தெரிகின்ற
ஆயிரம் சுழியுண்டு
அதனுள்ளே அகப்படாமல்
அகப்பொருள் நீ கூறு.
பரம்பொருளும் அதுவே தான்
வெறும்பொருளும் அதுவே தான்.

பொய்மையும் அதுவே தான்.
வாய்மையும் அதுவே தான்.
தன்னையே தான் மறுக்கும்
கடவுளே நாத்திகன் தான்.
தன்னை இந்த மனிதனுக்குள்
தேடுவதும் அவனே தான்.

இருவரும் சந்தித்ததால்
மானுடம் மலர்ந்துவிடும்.
சந்திக்க மறுக்கும் வரை
சாத்திரங்களும் சரித்திரமும்
தெருக் குப்பை கூளம்தான்.

நமச்சிவாயன் தாள் வாழ்க.
நமைச்சல்கள் இனி எதற்கு?
உமைச்சிவாயன் தாள் போற்று.
ஆட்சேபணை ஏதும் இல்லை.

தாள் போற்றுல்ல ஆம் தாள் போற்று.
அறிவே எழுத்தானால்
அதுவே தாள் ஆனால் 
ஆதவனும் கை கட்டி
வாய் பொத்தி நின்றிடுவான்.
அறிவியல் தாள் போற்று.
தாள் சேர்த்து நூல் ஆக்கு...இந்த‌
நூலேணி ஏறிட்டால்
நூலாம்படை தட்டி விட்ட... புது
பிரபஞ்சம் பார்த்திடுவாய்!
புது வெளிச்சம் தோன்றட்டும்
.
கடவுள் என்றால்
கடந்து உள் நிற்பவன்
என்று பொருள் அல்ல.

கல்வி கரையில.
கற்பவை நாள் சில.
கற்றதையும் 
கடந்து
"உள்".."உள்ளு"
அதாவது நினை.
உள்ளுவதெல்லாம்
உயர உயர உள்ளுவதே
உயர்ந்த விஞ்ஞானம்.

அறிவு என்ற சொல்
சொல்ல சொல்ல புதிது.
அறிய அறிய புதிது.
புதிதாக வாசி.
புதிதாக யோசி.

=================================================================
 ஜூலை 13  2014 ல் எழுதியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக