வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

பேரறிஞர் அண்ணா



பேரறிஞர் அண்ணா
======================================ருத்ரா


தமிழ்
எழுத்து
பேச்சு

இந்த மூன்றின்
அருமையான கலவை நம்
அருமை அண்ணா.
அம்பது அறுபதுகளில்
தமிழ்ப்பேச்சுக்கு
டிக்கட் வாங்கி சென்ற கூட்டம்
அலை மோதும்.
அண்ணாவின் பேச்சுக்கு
ஏங்கியவர்கள் எத்தனை எத்தனை பேர்கள்?
பிரியாணி பொட்டலங்களும்
சில நூறு ரூபாய் நோட்டுகளுமே!
இன்றைய (அரசியல்) கூட்டங்களுக்கு
பந்தல்கால்.
ஆனால் அன்று
சொற்பொழிவு எனும்
தமிழ்ச்சொல் பட்டி தொட்டிகளில்
புழங்கியது அண்ணாவால்
தமிழ் வாசனையுடன்.
"பிரசங்கம்" என்பது
நமக்கு "அன்னிய பாஷை" ஆனது.
ஒவ்வொரு அன்னிய பாஷைச்சொல்லின்
பாறைகள்
தமிழ் உளியால் அல்லது ஒளியால்
தூள் தூள் ஆயின.
அரசியல் பொருளாதாரம் வரலாறு
யாவும்
இவர் "நாவின்" பல்கலைக்கழகங்களில்
எப்போதும்
நாற்காலி போட்டு உட்கார்ந்திருக்கும்.
இவர் "திராவிட இயல்"
சமூக கண்ணோட்டம் கொண்டது.
தமிழ் தொன்மையை தொட்டுக்காட்டுவது.
சாணக்கியரின் மனு தர்மம் பற்றிய
அதர்ம உள்ளடக்கங்களை
அடையாளம் காட்டியதில்
வல்லவராயிருந்த போதும்
"அரசியல் சாணக்கியம்" செய்யத்தெரியாத
மானுட நேயத்தின் மாணிக்கம்.
பிற்றை நாளில்
அண்ணாவை எம்ஜியார்
கொடியிலும் மடியிலும் தாங்கிக்கொண்டார்.
கலைஞரோ அண்ணாவை
தமிழின் மூச்சிலும் பேச்சிலும்
உயிர்த்து நின்றார்.
"ஒரு விரலை"காட்டிசென்றாயே அண்ணா
என்று கவிதை பாடியவர் இன்று
வெள்ளைத்தாளை மட்டும் காட்டுகின்றார்
தன்  கண்ணீர்த்துளிகள் அவற்றை
நனைப்பதே தான் கவிதை என
எழுதாமல் எழுதிக்கொண்டிருக்கிறார்.
தமிழ் இயக்கத்தின் இமயம்
இமைகளை மட்டும்
சிமிட்டிக்கொண்டிருக்கிறது
உதய சூரியனின் கத கதப்போடு.
ஆம்
அண்ணா எனும்
உதயசூரியனை  தமிழ் நாட்டின்
மூச்சுக்காற்று ஆக்கியது
அந்த எழுதுகோல் தான்.
வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!
வாழ்க அண்ணாவின் புகழ்!

==================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக