திங்கள், 20 பிப்ரவரி, 2017

எந்திர மிருகம்

எந்திர மிருகம்
=============================================ருத்ரா இ பரமசிவன்

அது தட தடவென்று ஓடுகிறது,
என் முகத்தை நெஞ்சையெல்லாம் அது
மிதித்துக்கொண்டு ஓடுகிறது.
என்னில் உண்டானது அது,
என் சிந்தனைகளில் மிடையப்பட்டது தான் அது,


கனவு வடிவங்களாய் வார்த்துக்கொடுத்த‌
என் உள்ளத்தையெல்லாம்
பொடி பொடியாக்கிக்கொண்டு ஓடுகின்றது.
அது எந்திரமா?
அது கொடும் மிருகமா?


அன்று
அந்த "முகூ ர்த்த தேதியை"
குறித்து விட்ட போது...
காக்காய்க்கும் நரிக்கும் கல்யாணம் என்பார்களே
அது போல் தான்
ஊரெல்லாம் தாரை தப்பட்டை முழக்கங்கள் தான்.
பூதாகாரமாய் ஒரு சிரிப்பை
கட்  அவுட் வைத்தது போல்
அது இந்த ஊரின்
தெருக்களில்
சாக்கடை ஓரங்களில்
இன்னும் தூசி துரும்புகளிலும்
ஒட்டிக்கொண்டு கிடந்தது.
உயர்த்தி உயர்த்தி கும்பிடும் கைகள்!
அது எப்படி
இன்று "கில்லட்டின்" ஆனது?

வாக்குகள் எனும்
தலைகளை மட்டும்
வெட்டிக்கொண்டு விட்டு
முண்டங்களை குவிய விட்டு
எறிந்து போனது அது.
அந்த எந்திர மிருகம்
தின்னாதது விழுங்காதது
எதுவும் இல்லை.
மலை ஆறு மணல்
எல்லாம்
ஏப்பம் விடப்பட்டு
மூளியான தேசம் மட்டும் மிச்சம் !
அதுவும்
சுதந்திரக்கொடியேற்றத்துக்கு
விழா நடத்தி
சல்யூட் போட்டுக்கொள்ள!

அன்றைக்கு  எல்லாம்
என் தோளிலும் நெஞ்சிலும்
அணிற்பிள்ளையாக
அண்டை மானிட சுவாசங்களாக
அணி வகுத்து அணி வகுத்து வந்தது அது!
என் பிள்ளைகளுக்கு
புத்தகப்பைகளை சுமப்பேன் என்றது.
என் வீட்டில் நிம்மதியாய்
அடுப்பு எரிந்து
அறுசுவை உணவு படைக்க‌
எல்லாம் நானாச்சு என்றது.
ஆகாசத்தில் எங்கோ கங்கை ஓடுகிறதாமே
அதிலிருந்தே குடி தண்ணீர் குழாய் வழியாய்
வீட்டுக்குள் வரச்செய்து தாகம் தணிக்கிறேன் என்று
இன்னும் என்னவெல்லாமோ
நிறைவேற்றித்தருகிறேன் என்று
வண்ண வண்ணமாய் அச்சடித்துத்தந்தது
அடியில் சில கரன்சிகளின் கற்றையோடு !
இலவசங்கள் இலவசங்கள் .....
எல்லாம் இலவங்காடுகள் ஆனது!
அந்த காய்கள் பழுக்குமென்று
சொப்பனங்களில் படுத்துக்கிடந்தவர்கள்
பதை பதைத்து எழுந்தார்கள்
எரியும் சொக்கப்பனைகளில்
தூக்கி வீசப்படுவதற்கா
அந்த "மின்னணுப்பொறிக்குள்"வீழ்ந்தார்கள்?


எல்லாம் வீழ்ந்தது.
எல்லாம் சரிந்தது.
எல்லாருமாய் அடியற்றுக்கிடக்கின்றோம்.
அன்று "கைபேசிகளில் "
ஒரு உரிமைப்புயல்
சுநாமி பிஞ்சுகளை  உயர்த்திக்காட்டின!
சில காளைகளின் கொம்பும் சிலிர்ப்பும்
ஊர் தோறும் விழா நடத்தின.
"ஓட்டு"கசாப்பில்
அடி மாடுகளாய்  வரிசையில் நின்று
வதை படும் மாட்டு ஜனங்களுக்கு
கிழக்குச்சூரியன் கண்ணில் தெரிவதெப்போ?
அந்த எந்திர மிருகத்தின்
இருட்டுப்பற் சக்கரங்களில்
நம் சிந்தனை வானத்தின் சதை வெளிச்சங்கள்
காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன.

நம் ஆட்சி மன்றம் ஜனநாயக உயிர் பூசிய
அந்த கட்டிடம் என்று தானே
நினைத்திருந்தோம்
அது எப்படி ஒரு கூவத்துச் சதுப்பு நிலக்காட்டின்
"பேய்"பங்களா ஆனது?
ஊழல் நாறும் சாக்கடையிலா
நம் ஜனநாயக "கங்கோத்ரி"யின் ஊற்றுக்கண்
அவிந்து போனது?

பொது வளங்களின் ரத்தம் உறிஞ்சிய
டிராகுலாக்களாய்
"அனிமேட்டட்" பயங்கரத்தை
கடைவாய்களில் வழிய விட்டு
எங்கள் குரல்களை
எங்கள் ஏக்கங்களை
எங்கள் வாழ்க்கையின் வார்ப்புகளை
அதன் உயிர் நாளங்களை
மிதித்துக்கூழாக்கி  கொக்கரித்துக்கொண்டு
ஓடுகிறது..
அந்த எந்திர மிருகம்...

======================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக