திங்கள், 31 அக்டோபர், 2016

அங்கே ஓர் இடம் வேண்டும்.




அங்கே ஓர் இடம் வேண்டும்.
===========================================கல்லிடைப்பரணன்.
(26 செப்டம்பர் 2015 ல் எழுதியது.)


தமிழை ஒலித்தால்
காதுகளில் கம்பளிப்பூச்சிகள்.
தமிழ் பேசினால்
கசப்பு தான்.
தமிழ் எண்ணினால்
சோறில்லை.
தமிழ் எழுதினால்
இடமில்லை.
தமிழில் கவிதை
கொலவெரி தான்.
தமிழை மொழியென்றால்
நாடு கடத்து.
தமிழ் இனமென்றால்
தமிழனே
தமிழனுக்கு கல்லறை.
அது ஏன்?
தமிழ் வரலாறு
புழுக்களின் வரலாறு.
தமிழ் ஆத்திகம்
தமிழும் நாத்திகம்.
தமிழில் ஆங்கிலம்
தமிழே ஆங்கிலம்.
இனிக்கிறது என்று
தமிழில் தான்
இவன் பெயர் சொன்னான்
வடமொழியில்.

கல் தோன்றி மண் தோன்றுமுன்
வந்தவன் என்று
நைந்து கிடக்கிறான்
கல் குவாரியிலும்
மண் குவாரியிலும்.

உலகம் தமிழில்
ஒரு நாள்
இமை உயர்த்தும் என்று
நம்புவோம்.

அந்த‌
"ஞாயிறு" தோன்றும் வரை
திங்கள் முதல்
சனி வரை
இந்த
பஞ்சாங்கத்தில்
படுத்துக்கிடப்போம்.

உறுமுவது மட்டுமே
உரிமைகள் ஆகும்
என்று ஒரு மாயப்போதையில்
உருண்டு கிடப்போம்.

தமிழை
உருவாக்கும் முன்னே
தமிழை
கருவறுக்கவோ
இங்கு
இத்தனைக்கூச்சல்?
உலகம் எல்லாம்
கப்பல் விட்டவன்
ஒரு தீவில்
பிணங்களாய் குவிந்தான்.

அது ஒரு தாகம் என‌
கவிதைகள் சொன்னான்.
தமிழில் கூட
குண்டுகள் உமிழ்ந்து
தமிழ் உயிர்களை யே
குடித்திடும் கொடுமை
எப்படி வந்தது?
மூவேந்தர் என்று
வில்லும் அம்பும்
ரத்தம் தின்றபின்...தமிழ்ச்
சத்தம் மட்டுமே
இங்கு மிச்சம்.
இலங்கையின்
அரசஇலை நிழல் கூட‌
சொல்லும்
தமிழர் பிணங்கள்
மண்ணுக்குள்
மக்கிப்போனதை.
அன்பின் சத்தம்
சரணம் கச்சாமி
என்ற குரலில்
கசாப்புகள் மட்டும்
எதிரொலித்த‌
மர்மம் என்ன?
திகில் தான் என்ன?

ஐ.நா என்றார்கள்
ஆயிரம் ஈக்கள் மொய்த்த தென்ன?
ஈழத்தமிழ் உயிர்கள்
கொத்தோடு குலையோடு
கொல்லப்பட்டதை
செவி மடுக்க‌
டாலர் வியாபாரங்கள்
தயார் இல்லை.
போர் நெறிமீறி
மனிதம் கொன்று
தமிழைப்புதைத்த‌
அநீதிக்கு அங்கு
தராசுகள் இல்லை.
தமிழக சட்டமன்றம்
குரல் கொடுத்த போதும்
அசோகச் சக்கரத்து தூண்
நெடுங்கல்லாய் விறைத்து நின்று
இலங்கையின் இன்னா நெறிக்கே
கவரிகள் வீசுவது
என்ன நியாயம்?
என்ன நீதி?
இறையாண்மை போற்றுவோம் என்ற
போர்வையில்
தமிழைப்பிய்த்து தின்னும்
இலங்கை இனப்பசிக்கு
இரையாண்மை காப்பதையா
இந்திய ஜனநாயம் என்பது?

"தண் தமிழ் வேலி தமிழ் நாட்டக மெல்லாம்
நின்று நிலைஇப் புகழ்பூத்தல் அல்லது
குன்றுதல் உண்டோ....."

பரிபாடலில் எட்டாம் பாட்டு இது.
புலவனின் முகம் தெரியவில்லை.
முகவரியும் இல்லை.
பாடலும் முழுமையில்லை.

இடிந்த கோட்டையின்
உருவகமாய்
தமிழின் புலம்பல் வரிகள்
கேளா இடமில்லை.

எங்கே தமிழ்? எது தான் தமிழ்?
அங்கே எனக்கு
ஓர் இடம் வேண்டும்!

=======================================
கல்லிடைப்பரணன்.




பாலச்சந்தர் படங்கள் பற்றிய குறும்பாக்கள்  (3)



பாலச்சந்தர் படங்கள் பற்றிய குறும்பாக்கள்  (3)
================================================ருத்ரா இ.பரமசிவன்


22
இன்று வரை இன்னமும் புதிர் தான்.
காதலும் "ராமானுஜமும்"
நூற்றுக்கு நூறு.

23
பின்னே வரவேண்டிய நிழல்
முன்னே வந்து மிரட்டுகின்றது.
ஞானஒளி

24
"கல்யாண மாலை"பாட்டுக்குள்
ஏழு சமுத்திரங்களும் தோற்றுப்போயின.
புதுப்புது அர்த்தங்கள்.

25
வரவு எட்டணா செலவு பத்தணா!
பாலையா துந்தணாவில் இந்திய பட்ஜெட்.
பாமாவிஜயம்.

26
அண்ணனுக்குள் தம்பி.தம்பிக்குள் அண்ணன்.
கதிரி கோபால் நாத் உருக்கி விட்டார்.
டூயட்.

27
மனிதனின் எண்  சாண் உடம்புக்கும்
ஒன்பது கோணல்கள்.
நவகிரகம்.

29
இப்படியே விட்டிருந்தால்
இந்த நாட்டில் நரகாசுரனே சூபர்ஸ்டார்.
தப்புத்தாளங்கள்.

30
சாக்கடையில் ஆப்பிள்.
சாக்கடையே இங்கு கருப்புப்பணம்!
வறுமையின் நிறம் சிவப்பு.

31
அந்த காமிராவைத் திறந்து பாருங்கள்
இன்னும் அதில் மிச்சம் இருக்கும் ..
பாலச்சந்தரின் ஆத்மா!
=======================================ருத்ரா இ.பரமசிவன்

ஜெயமோகன் என்றொரு ஷைலக்

ஜெயமோகன் என்றொரு ஷைலக்
=======================================ருத்ரா இ பரமசிவன்.

(நம் தமிழ் இலக்கிய வாதி திரு.ஜெயமோகன் அவர்கள் அவரது வலைப்பூவில் தன் நண்பர் "சுந்தர ராமசாமியுடன்" உரையாடி வரும்போது அந்த பஸ் நிலத்தில் மாலைமுரசு கட்டுகளில் தூங்கிக்கொண்டிருந்த ஒரு சிறுவனைப் பார்த்து "அதோ பார் ஒரு  "மோசிகீரன்" என்று சுந்தர ராமசாமி ஜோக்  அடித்தார். இருவரும் சிரித்துக்கொண்ட்டார்கள். புண்படுதல் பற்றி தன் பழைய கட்டுரையை மீள்பதிவு செய்ததில் இதையும் குறிப்பிட்டு இருக்கிறார். "ஜோக்"எப்படியிருக்கிறது என்று பாருங்கள்.அதைக்குறித்தே எனது இக்கவிதை)


"புண்படுதல்" பற்றி
ஒரு ஆற்றொழுக்காய்
பஃறுளி ஆறு பாய்ந்தாற்போல்
எழுதியிருக்கிறீகள்.
அருமை.அருமை.
ஆனால் உங்கள் எடுத்துக்காட்டல்களில்
அதிகம் இருப்பது
தமிழ் மொழி..
தமிழ் மொழி இலக்கிய வாதிககள் தான்.
என்பதை நன்கு உணர முடிகிறது.
இதற்குள்ளும்
ஒரு ஃப்ராடிஸப் பிறாண்டல்
இருக்கிறது என்று சொல்லலாம்.
தமிழ் எனும் சிந்தனைக்களம்
அதிகம் ஆரிய சிந்தனைகளை
தகர்த்து எறிவதாகத்தான் இருக்கிறது.
அதைப் பொறுத்துக்கொள்ளமுடியாத‌
ஒரு "சப்கான்ஷியஸ் காம்ப்ளெக்ஸ்"
உங்களுக்கு இருக்கிறதே!
உங்களுடன் பஸ்ஸில் வந்து இறங்கிய‌
சுந்தர ராமசாமி அவர்கள்
அந்த "மாலை முரசு"க்கட்டுகள் மீது
படுத்திருக்கும்
சிறுவனைக்கண்டதும்
மோசிகீரனை நினவுபடுத்தும்
அந்த நுட்ப தமிழ் இலக்கிய சிந்தனை
மிகவும் பாராட்டுக்குரியது.
அது ஒரு அருமையான உவமையுடன் கூடிய‌
நகைச்சுவை என்பதில்
எந்த ஐயமும் இல்லை.
ஆனால் அந்த அரசன் ஒரு "சேரளத்து" தமிழன்
பெருஞ்சேரல் இரும்பொறை.
இன்று போல் ஒரு இந்து முன்னணிக்காரனாயிருந்தால்
வாளை அல்லவா அவன் மீது வீசியிருப்பான்.
அவருக்கு தமிழை விட‌
அந்த "பூஜை போட்டு மரியாதையுடன் வைக்கப்பட்ட"
முரசுக்கட்டில் தானே முக்கியம்.
ஆனாலும் பெருஞ்சேரல் இரும்பொறையின் தமிழ் உணர்வு அது.
நகைச்சுவை சொல்லும்போதும் தேடிப்பார்த்து
தமிழ் உணர்வை கொச்சைப்படுத்துவது போல்
ஜோக் அடிப்பது தான் "ஆரியக்கூத்து" என்பது.
அந்த பத்திரிகைக்கட்டுகள் எல்லாம்
புத்தகம் மாதிரி.
அதன் மீது சோம்பேறி போல்
படுத்து தூங்குவதைப் பார்த்து
அந்தப்பயல் படுத்திருப்பதை பார்த்தால்
"சரஸ்வதி இவனுக்கு மெத்தையா?
பாவம் சரஸ்வதி தேவி" என்று தானே
அவர் ஜோக் அடித்திருக்க வேண்டும்.
ஆனாலும்
மோசிகீரனையும்
பெருஞ்சேரல் இரும்பொறையின்
தமிழ் உணர்வையும் சேர்த்து
ஒரு வாரு வாரியிருக்கிறார்.
"முரசு" என்ற பெயர் அப்படி
ஜோக் அடிக்க வைத்திருப்பதில்
ஆச்சரியமில்லை.
"போங்கடா போக்கத்த பசங்களா
உங்களுக்கெல்லாம்
சங்கத்தமிழ் ஒரு கேடா "என்றும்
அவர் பொங்கியிருக்கலாம்.
இருப்பினும்
ஜெயமோகன் அவர்களே
கட்டுரையின் எல்லா பகுதியிலும்
தமிழ் மொழி பற்றிய ஒரு பெருமித உணர்வை
தாழ்வு மனப்பான்மை என்றே
சாடுகிறீர்கள்.
தமிழன் உணர்வை மழுங்கடித்து
மொட்டை போட்டு
சந்தனம் பூசும்
இந்துத்துவா நோயை
உடன் பிறந்தே கொல்லும் இந்த‌
புற்று நோயை
மர்மப்புன்னகையோடு
புகழ்ந்து வருகிறீர்கள்.
அதன் வெளிப்பாடு தான்
திராவிட சிந்தனையின் மீது
உங்கள் திராவக வீச்சு.

=========================================================
இதோ அந்த புறநானூற்றுப்பாடல்.
============================================================
50. கவரி வீசிய காவலன்!
பாடியவர்: மோசிகீரனார்.
பாடப்பட்டோன்: சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை.
திணை:பாடாண். துறை: இயன் மொழி.
குறிப்பு: அறியாது முரசுகட்டிலில் ஏறியவரைத் தண்டம் செய்யாது
துயில் எழுந் துணையும் கவரிகொண்டு வீசினன்
சேரமான்; அது குறித்துப் புலவர் பாடிய செய்யுள் இது.


மாசற விசித்த வார்புஉறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய, மஞ்ஞை
ஒலிநெடும் பீலி ஒண்பொறி, மணித்தார்,
பொலங்குழை உழிஞையடு, பொலியச் சூட்டிக்,
குருதி வேட்கை உருகெழு முரசம்
மண்ணி வாரா அளவை, எண்ணெய்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
அறியாது ஏறிய என்னைத் தெறுவர,
இருபாற் படுக்குநின் வாள்வாய் ஒழித்ததை
அதூஉம் சாலும், நற் றமிழ்முழுது அறிதல்;
அதனொடும் அமையாது, அணுக வந்து, நின்
மதனுடை முழவுத்தோள் ஓச்சித், தண்ணென
வீசி யோயே; வியலிடம் கமழ,
இவன்இசை உடையோர்க்கு அல்லது, அவணது
உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்:
வலம்படு குருசில்! நீ ஈங்குஇது செயலே?
====================================================

இப்படி மணித் தமிழ் ஒலியெல்லாம்
வெறும்
கோவில் மணிஒலியாகி
தமிழை வெளியே துரத்திய‌
ஆரிய ஒலிப்புகள் பற்றி
தவித்து தகித்து எழுதுவோரே
உங்கள் நையாண்டிக்குள் வருகின்றார்கள்.
புண்படுகிறதே தமிழ் என்று
மடல்கள் இட்டால் பழிகள் தூற்றி
அந்தத் தமிழையும்
மொய்த்து தின்று
அழிக்காமல் விடமாட்டோம் என‌
ஈக்களாய் மொய்த்து
சொற்கள் குவிக்கின்றீர்.
மோசிகீரன் பாடிய அந்த தமிழ் முரசு
உங்களுக்கு அத்தனை கேவலமா?
அந்த புலவர் போல நீங்களும்
தமிழில் ஒரு நுட்பமான இலக்கியம் படைக்கின்றீர்
என்று தான் இந்த தமிழன்களும்
உங்களுக்கு வாள் நீட்டாமல்
உங்கள் எழுத்துக்களுக்கு
கவரி வீசுகிறார்கள்.
அந்த நயத்தக்க நாகரிகம் துளியும் இன்றி
எப்போதும் தமிழையே..தமிழ்க்கலைஞர்களையே
தாக்குகின்றீர்.
"ஒரு பவுண்டு உன் மார்புச்சதையை"
கடன் தொகைக்குப்பதிலாக கேட்டானே
அந்த "ஷைலக்"
அது போல உங்கள் சிறந்த இலக்கியங்களுக்கு
மாறாக "தமிழ் இதயத்தைக்"க் கூறு போடத்
துடிக்கிறீர்கள் .
தமிழைக்கொண்டு தமிழின் மார்புக்கே
குறிபார்க்கும்
உங்கள் "மராமர" தந்திரங்களைத் தான்
உங்கள் சொற்களின் மூட்டையில்
பொதி சுமந்து கொண்டிருக்கிறீர்கள்!

============================================ருத்ரா இ.பரமசிவன்

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

கிச்சு கிச்சு மூட்டும் கத்தி (ச்சண்டை)

கிச்சு கிச்சு மூட்டும் கத்தி (ச்சண்டை)
===============================================ருத்ரா

(தீபாவளி ரிலீஸ்  "கத்திச்சண்டை")


மற்ற‌ வசூல் ராஜாக்களின்
இடையே
நசுங்கிபோவது போவது போல்
தெரிந்தாலும்
கத்திச்சண்டை படக் காமெடி
தியேட்டர்களையே குலுங்க வைக்கிறது.
வடிவேலு
விஷாலின் "நினைவு இழப்பு"நோய்க்கு
குதிரையைக்கொண்டு
வைத்தியம் செய்கிறார்.
குதிரை ஒட்டத்தில்
அவர் அதிர அதிர ஓடினால்
நோயும் ஓடிப்போகும் என்று
சிகிச்சையை ஆரம்பிக்கிறார்.
வடிவேலு குதிரை ஆயிற்றே.
அதுவும் கமெடி செய்கிறது.
அதற்கும் "மெமரி லாஸ்" தானாம்.
ஓடிக்கொண்டே இருக்கும்
திரும்பி வராது.
வடிவேலு அதை துரத்திக்கொண்டு
பிடித்து தான் வரவேண்டும்.
குதிரைக்கும் விஷாலுக்கும்
சேர்த்து சிகிச்சை கொடுக்க்கும்படி
ஆன சோகக்காமெடியை
அவருக்கே உரிய பாணியில்
அசத்துகிறார்.
ஒரு படத்தில் வடிவேலுவுடன்
"என்னத்த " கன்னையா
அந்த லாரி காமிக்கஸ் ல்
"வரும் ..ஆனா வராது"ம்பாரே
அது மாதிரி வடிவேலு
இந்த குதிரை
திரும்பி வரும்... ஆனா வராது...ங்கிறதைப்போல
லூட்டி  அடிக்கிறார்.
அந்த நீண்ட சடை பின்னலும்
உருட்டி உருட்டி மிரண்டு விழிக்கும்
பார்வையும்
விலா வலிக்க சிரிக்க வைக்கிறது.
இவர் இப்படி!
சூரியின் நகைச்சுவை படு பிரகாசம்.

அவர் கரகாட்டக்காரன்படத்தில் வரும்
"கனகா" கெட் -அப்புடன்
பெண் வேடத்தில் வந்து
தியேட்டரையே கலகலக்க விடுகிறார்.
குச்சிக்கையும் ஒல்லி உடம்புமாய்
ஒரு அழகிய சாரைப்பாம்பு கணக்காய்
நெளிந்து நெளிந்து ஆடுகிறார்.
அதிலும்
"மாங்குயிலே பூங்குயிலே" பாட்டு வேறு.
தூள் கிளப்புகிறார்.
ஒரு அசல் கரக்காட்டக்காரி பாத்திரம்
ஒன்றை வைத்து
இவரையே கதாநாயகி ஆக்கி
கரகாட்டக்காரி என்று பேர்வைத்து
ராமராஜன் ரோலில் சந்தானத்தைப்போட்டு
படம் எடுத்தால்
படம் பிச்சுக்கிட்டுப்போகும்.
அவ்வை சண்முகி ரெமோ வரிசையில்
இந்த கரக்காட்டக்காரியும் கலக்குவாள்.
விஷால் நடிப்பு ஒரு புதுக்காம்பினேஷனில்
ரசிக்கும் படி இருக்கிறது.
காமெடி கலக்கலில்
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப்போகும்
என்ற பழமொழி இங்கு செல்லாது.
இந்த சிரிப்பில் நோயே அருகில் வர அஞ்சுமே
அப்புறம்
"விட்டுப்போகத் தேவையில்லையே."

================================================
(ஸாரி ...கொஞ்சம் ஓவர்.
தீபாவளி விடியல்  தூக்கத்தில்  "செய்திகளை முந்தித்தரும்" ஒரு கனவு வாகனம் மீது வந்த போது எழுதியக்கற்பனை இது.)




பாலச்சந்தர் படங்கள் பற்றிய குறும்பாக்கள்  (2)


பாலச்சந்தர் படங்கள் பற்றிய குறும்பாக்கள்  (2)
======================================================================
ருத்ரா இ.பரமசிவன்



11
கம்பியில் குத்தி குத்தி சேகரித்த‌
கடிதங்களில் "காதலுக்கு"வடைமாலை.
வெள்ளிவிழா.

12
நீதியின் நிழல் துரத்தும் ஒளியே
இங்கு என்றும் உருகாத மெழுகுவர்த்தி.
ஞான ஒளி.


13
கண்கள் இல்லை..இருப்பினும் அந்த‌
மிடுக்கும் கணக்கும் குறி தப்பவில்லை.
மேஜர் சந்திர காந்த்.

14
தூக்கமாத்திரைகளில் இன்னும்
விழித்துக்கொண்டிருக்கிறது..அந்தக்காதல்!
தாமரை நெஞ்சம்.

15
தன் குழந்தையைக் காக்க அந்த தாய்க்கு
வந்தது தொப்பூள்கொடியோடு ஒரு துப்பாக்கி.
காவியத்தலைவி.

16
ராகங்கள் கலந்து கொண்டபோது
காதலின் முகவரி தொலைந்து போனது
சிந்து பைரவி.

17
"நிலா "பாட்டில்
கவிதையும் இசையும் காக்டெய்ல் ஆனது.
பட்டினப் பிரவேசம்.

18
அந்த தேர்தலின் அர்த்தமே
ஒரு டம்ளர் தண்ணீர் தான்.
தண்ணீர் தண்ணீர்.

19
குற்றாலத்தின் வெள்ளியருவியில்
சிவப்புக்கண்ணீர்.
அச்சமில்லை அச்சமில்லை.

20
ரஜனிமீசைக்குள் இப்படியொரு லொள்ளா?
வயிறு புடைக்கும் சிரிப்பு விருந்து.
தில்லு முல்லு.

21
தாலிக் கயிற்றில் ஒரு
"கயிற்று இழுப்பு" போட்டி.
இரு கோடுகள்.

=================================================================

HAPPY HALLOWEEN !





அச்சம் தவிர்
=======================================ருத்ரா இ பரமசிவன்.


"அஞ்சுவது அஞ்சாமை பேதமை"
அஞ்சாமையை அஞ்சுவதும்
அச்சம் தரும் பேதமை.
அஞ்சி அஞ்சி சாகவேண்டாம்  
அச்சம் கண்டு நகைத்திட வேண்டும்.
அமெரிக்கர்கள்
இங்கே நான் இருக்கும்
 "லாஸ் ஏஞ்சஸலஸ் " பெருநகரில்
பூசணிக்காயை குடைந்து
பேய்ச்சிரிப்போடு உருவம் காட்டும்
விளக்குகள் நுழைத்து
அஞ்சாதே என்றொரு வினோத‌
"கார்த்திகை தீபம்" கொண்டாடுகிறார்கள்.
நமக்கு கடவுள் மீதும் பயம்.
பன்னிரெண்டு கையிலும்
விதம் விதமாய் பயமுறுத்தும் ஆயுதங்கள்.
அசுரர்களைக் கண்டாலும் பயம்.
முண்டைக்கண்ணும் கோரைப்பற்களும்!
போதாது என்று
கும்பி பாகம்
கிருமி போஜனம்
என்று கருடபுராண அச்சங்கள்.
இப்படி மதம் பதித்தது பயத்தை தான்
"பயமின்மையை" அல்ல.
அதனால் தமிழனின்
வேப்பமரத்தின் மீதும் புளியமரத்தின் மீது
பேய் பிசாசுகள் "கோவில்" கொண்டன.
காலம் மாறிக்கொண்டு தான் இருக்கின்றன.
அந்த மரங்களின் அடியில் நின்று கொண்டு
அந்த பேய் பிசாசுகளை விரட்டி அடிக்க‌
ஒரே ஒரு தாயத்து தான்
நம்மிடம் உண்டு!
அது என்ன?
மெல்ல கிசு கிசுத்தாலும் போதும்
"ஊழல்" என்று.
பயந்து வெருவி ஓடிப்போகும் அத்தனையும்.

===============================================================

ஒரு தரிசனம்.




ஒரு தரிசனம்.
=========================================ருத்ரா.
(03 ஜனவரி 2007 ல் எழுதியது.)


அந்த சொரிநாய்
லாரியில் அடிபட்டு
செத்து விழுந்தது.
யாருக்கும் கவலை இல்லை.
அதைச்சுற்றி
போலீஸ்காரர் சாக்பீஸால்
வட்டம் போடவில்லை.
போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு
வாகனங்கள்
சந்து பொந்துகளுக்கு
திருப்பிவிடப்படவில்லை.
அந்த நாயின் சடலம்
காலபைரவரின்
கசங்கிப்போன
வாகனம் அல்லவா?
ஆனாலும் அது
கண்டு கொள்ளப்படவில்லை.
பக்கத்து கோயிலில்
எண்ணெய் பிசுக்கில்
பள பளப்பாய்
கால மூர்த்தியின்
உற்ற தோழனாய்
இருக்கும்
அந்த சிலை
இங்கே ரோட்டின் ஓரத்தில்
ரத்த குங்குமத்தில்
சத்தமின்றிக் கிடந்தது.
திருச்சங்குகள் முழங்காத
உடுக்கைகள் ஒலிக்காத
திருவாதிரைக்காட்சி அது.
சாவதற்கு முன் அது
எந்த காலை தூக்கியிருக்கும்?
இடது காலோ
வலது காலோ...
காலைத்தூக்கிய
ஊர்த்துவ தாண்டவங்களின்
ஊளைக்குரல்கள் அங்கே
மௌனத்தில்
திருப்பள்ளியெழுச்சி பாடின.
அந்த சிவன் "சிவனே" என்று
அங்கு கிடந்தது.
ஐந்து சபையில்
அது என்ன சபை ?
எலும்பும் சதையுமாய் கிடக்கும்
அந்த சபையில்
சில காக்கைகள் வந்து
பதஞ்சலிகளாயும் வியாக்கிர பாதர்களாயும்
சூத்திரங்கள் கத்தின.
கோவிலைச்சுற்றி மக்களின்
ஈசல்கள்.
ஈசன் விளையாட்டின்
"ஈக்குவேஷன்களை" புரிந்து கொள்ளாத
ஈக்களின் கூட்டங்கள்.
இறப்பெல்லாம் பிறப்பு.
பிறப்பெல்லாம் இறப்பு.
நாய் பிடிக்கும் வண்டியோடு
சுறுக்கு கம்பிகளுடன்
சிவனின் பூதகணங்கள் போல
வந்த சிறு கும்பல்
அந்த நாய்க்குப்பையை
துப்புரவு செய்ய்யும் முன் கொஞ்சம்
துப்பறியத் துவங்கியது.
"எந்த லாரிடா இப்டி அடிச்சு போட்டது"
"தெரியலை"
"சாதி நாயான்னு பாருடா"
"சாதியா?
இந்த சாதிகளுக்கெல்லாம்
எந்த லாரிடா வரப்போகுது?"
"அது இருக்கட்டும்டா
உடம்புலே டிசைன் டிசைனா
அந்த கலரப் பாரு"
நெத்தியிலெ பாரு
நாமம் போட்ட மாதிரியாவும் இருக்கு
விபூதிப்பட்டை மாதிரியும் இருக்கு"
அதன் வர்ணத்தைப்பற்றிய
நேரடி வர்ணனை அது.
எந்த பேட்டை நாயோ.
அதன் கோத்திரம் என்ன?
நைத்ரூபமா?
நசிகேதமா?
"அடேய் ஆணா பொட்டையா பாருடா."
"ஆண்தாண்டா"
"ஆனா கழுத்தில் பட்டை இருக்குடா.
வீட்டு நாய் தான்"
அடையாளம் கண்டுகொண்ட குஷியில்
இந்த கரிசனம் மட்டுமே
அங்கு இருந்தது.
அது என்ன ஆருத்ரா தரிசனமா? என்ன
ஓதுவார்கள்
முப்பது திருவெம்பாவை பாட்டுகள் பாட.
அத்துடன்
குப்பையும் காலி.
கும்பலும் காலி.

===========================================ருத்ரா

சனி, 29 அக்டோபர், 2016

ஓலைத்துடிப்புகள் (8)









ஓலைத்துடிப்புகள் (8)
============================================ருத்ரா இ பரமசிவன்

"வெண்பூப் பகரும்"

இச்சொற்றோடர் ஓரம்போகியார் எனும் சங்கத்தமிழ்ப் புலவர் ஐங்குறுநூறு பாடல் எண் 13 ல் எழுதியது.வெள்ளைக்குஞ்சம் போல்
காற்றில் அழகாய் ஆடும் அந்த "பொங்குளை அலரி" பூக்கள் பற்றி பாடுகிறார்.மருதத்திணைப்பாடல் அது.அதை பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்று உள்ளம் பொங்கும்.மேலும் அப்பூக்கள் தலைவியோடும் தலைவனோடும் ஏதாவது பேசிக்கொண்டே இருப்பது போல் தோன்றும்.அல்லது இவர்கள் அப்பூக்களோடு பேசிக் கொண்டிருப்பது போல் தோன்றும்.அப்படி ஒரு நுண்மையான உணர்வை அச்சொற்களில் ஓரம்போகியார் காட்டுகிறார்.அந்த பூக்கள்  ஒரு நுண்செய்தியை தலைவிக்கு எப்படி உணர்த்துகிறது தெரியுமா? அவன் வரும் குதிரையின் தலைப்பூ அத்தகைய குஞ்சம் போல்ஆட்டி ஆட்டி சொல்வதைப்போல்  இந்த ஆற்றங்கரையின் "வெண்பூக்களும்" அவளுக்கு அவன் வருவதைச் சொல்கின்றனவாம்.என்ன ஆழமான அழகான கற்பனை!

"பரியுடை நன்மான் பொங்குளை அன்ன‌
அடைகரை வேழம் வெண்பூப் பகரும்.."

அந்த கரும்புப்பூக்கள் ஒரு இனிய காட்சியை அல்லவா நமக்கு சொல்கின்றன."வெண்பூப் பகரும்" என்ற சொற்றொடர்களையே தலைப்பாக்கி  இச்செய்யுளை செய்துள்ளேன்.
கல்+இடை=கல்லிடை.குறிஞ்சி மருவி குறிச்சி ஆனது.பொதிகை மலையிடை அமைந்த ஒரு குறிஞ்சி ஊர் தான் எங்கள் ஊர் கல்லிடைக்குறிச்சி.அங்கே தாமிரபரணி எனும் ஆறு சங்கத்தமிழின் பெயரான "பொருனை" என்ற பெயரில் அமைதியான அழகுடன் ஓடிக்கொண்டிருக்கும் அந்த ஆற்று எழிலில் மனம் கரைந்து சுழித்து நுரை பூத்து நாணல்கள் பச்சைத்தூரிகைகள் போல் படர்ந்திருக்க அந்த தலைக்குஞ்ச பூக்கள் தூரிகைகளாய் நீல வானத்திரையின் பின் புலத்தில் சங்கத்தமிழ் காட்சிகளை தீட்டிக்காட்டியதே இந்த சொல்லோவியம்.
ஐங்குறுநூற்றுப்பாடல் எண் 23 ல் ஓரம்போகியார்

"தாய்சாப் பிறக்கும் புள்ளிக்கள்வனொடு
பிள்ளை தின்னும் முதலைத்து அவனூர்"


என்ற வரிகளில் இன்னும் நம் நெஞ்சம் பிழிகிற காட்சியை காட்டுகிறார்.
புள்ளிகள் நிறைந்த அந்த நண்டு எனும் தாய் சாகும்படி அதன் குஞ்சுகள் பிறக்கும்.ஆனால் முதலை ஈன்றதனால் பசியுடன் கூடிய  ஈன்ற வலியைப்போக்க தன் குட்டிகளையே தின்னும்.இந்த இரு வேறு துன்பியல் காட்சிகளும் தலைவன் தனக்கு ஏற்படுத்தும் பிரிவுத்துன்பத்தை நன்கு புலப்படுத்துவதாக தலைவியின் துன்பம் மிக்க உரையாக‌ ஓரம்போகியார் குறிப்பிடுகிறார்.இக்காட்சியும் என் செய்யுளில் பதிந்து உறைந்து வருகின்றன.
நாங்கள் சிறுவயது நண்பர்களாய் "கல்லிடைக்குறிச்சியின்" தாமிரவருணிக் கீழாற்றில் நுரை சிதற பாறைகளிடையே பரவி ஓடும் நீரில் குடைந்து குளித்து மகிழும்போது "முதலையின்" அமைப்பு போல் இருக்கும்  ஒரு குத்துப்பாறையில் நாங்கள் விளையாடும்  அந்த "பிள்ளைப்பருவ" படலங்களின் தூரிகையாகவே இந்த வரிகள் காட்சிகள் தீட்டுகின்றன.
அந்த புள்ளி நண்டுகள் முதலைப்பாறைகள் "சிறிய அந்த வெண்பூக்கள்" எல்லாம் இனிமை குழைத்து பளிங்கு உருக்கி பால் நுரை பொருது இழையும் பொருநை எனும் எங்கள் தாமிரபரணியே இந்த "வெண்பூப் பகரும் "சங்கநடைக்கவிதையாய் சல சலத்து ஓடுகிறது.

==================================================


வெண்பூப் பகரும்
====================================ருத்ரா இ பரமசிவன்

பொருநை யாற்று பொறியறை தோறும்
பொருது இனிது வழியும் பொங்குளைப்புனலில்
கால் அளை போழ்தின் நுண்வெளி நுடங்கி
அவன் வரும் யாறு அகந்தனில் பெருகி
ஓங்குதிரை வாங்கும் ஒள்வெண் தண்மதி
கடற் கண்டாங்கு ஆர்த்தொலி கலிமான்
அலரி வேழப் பூஒலி எதிர்க்கும்.
தும்பி நுண்குழல் ஊச்சும் நறவில்
சிறைப்படுதலால் "சிறை"யெனப்பட்டாய்
ஆம்பல் பிணித்த அஞ்சிறைதும்பி.
பகர்ந்தது அறிந்து கடல்நிறை களிக்கும்.
பகராமை அஃதொன்றும் உளம் பறி செய்யும்.
பகன்றை ஆயினும் இன்மை ஆயினும்
பரி இமிழ் அரற்றும் குருகின் அன்ன‌
புரி இதழ் அவிழ்தரும் புன்கண் பெருக்கும்
புல்லிய அவிநீர் ஆவி உகுக்கும்.
அவன்குரல் தீங்குரல் ஆகும் தீதும் ஆகும்.
சேக்கை கண்ணும் முள்ளின் அடர்கான்
அமிழ்பு துயில் மறுத்த அனல் படு இரவு.
இனிதே பிறக்கும் பிறந்தே கொல்லும்
"தாய்சாப் பிறக்கும் புள்ளிக்கள்வன்"
புதையுறு வேழக் கழியின் மருங்கில்
புன்குரல் "பகன்றனை"வாராது மறைந்து.
ஈர்ங்கண் விழிப்ப இருங்கண் கொண்டு
ஈன்ற தன்னையே தின்னுதல் ஒக்கும்,
தன் பார்ப்பு புசிக்கும் பரும்பல் முதலை
பாய்தரு துறையன் ஊர்பட்டாங்கு
பனிநலம் அழிய பனிக்கும் என் மைக்கண்.
வெண்கவரி வேழம் குழைக்கும் காற்றில்
என் அடுதுயர் யாவும் அவ் வெண்பூப் பகரும்.

==================================================

பொழிப்புரை
===================================================
பொருநை யாற்று பொறியறை தோறும்
பொருது இனிது வழியும் பொங்குளைப்புனலில்
கால் அளை போழ்தின் நுண்வெளி நுடங்கி
அவன் வரும் யாறு அகந்தனில் பெருகி
ஓங்குதிரை வாங்கும் ஒள்வெண் தண்மதி
கடற் கண்டாங்கு ஆர்த்தொலி கலிமான்
அலரி வேழப் பூஒலி எதிர்க்கும்.

பொருநை எனும் தாமிரபரணி ஆற்றங்கரைக் காட்சி இது.புள்ளிகள் படர்ந்த பாறைகள் தோறும் மோதி மோதி இனிமையாய் தண்ணீர் பாயும்.அந்த துள்ளல் நிறைந்த நீரில் தலைவி கால் நனைத்து மகிழ்கிறாள்.அந்த நுண்ணிய பொழுதுகளின் இடைவெளிக்குள்ளும் அவனைப்பற்றிய கனவே அவளுக்கு.அவன் வரும் வழி தன் மனக்கண்ணில் ஆறுபோல் பெருக அதன் ஓங்கிய அலைகள் ஒளிசிந்தும் பால் நிலவை எதிரொளி செய்கின்றன.(ஓங்கு திரை வாங்கும்).அந்த நிலவை கடல் கண்டு பொங்கி எழுவதைப் போல் ஆர்ப்பரிக்கும் தலைவனின் குதிரைத் தலையில் சூடிய அலரிப்பூ (வேழப்பூ எனும் ஒரு வித பேய்க்கரும்புப் பூ)ஆடி அசைவது (தலைவியை நோக்கி) ஒரு ஒலியை ஏற்படுத்தும்.

தும்பி நுண்குழல் ஊச்சும் நறவில்
சிறைப்படுதலால் "சிறை"யெனப்பட்டாய்
ஆம்பல் பிணித்த அஞ்சிறைதும்பி.
பகர்ந்தது அறிந்து கடல்நிறை களிக்கும்.
பகராமை அஃதொன்றும் உளம் பறி செய்யும்.
பகன்றை ஆயினும் இன்மை ஆயினும்
பரி இமிழ் அரற்றும் குருகின் அன்ன‌
புரி இதழ் அவிழ்தரும் புன்கண் பெருக்கும்
புல்லிய அவிநீர் ஆவி உகுக்கும்.

அங்கு உலவும் வண்டு தன் வாய் ஒட்டிய ஒரு நுண்ணிய உறிஞ்சுகுழலில் (ப்ரோபோசிஸ்) அங்கு உலவும் வண்டு ஒன்றை அவள் காண்கிறாள். தன் வாய் ஒட்டிய ஒரு நுண்ணிய உறிஞ்சுகுழலில் (ப்ரோபோசிஸ்) அந்த வண்டு உறிஞ்சிய தேனில் அமிழ்ந்ததால் சிறைப்பட்டு போனதால் தான் அஞ்சிறைத்தும்பியாய் ஆனாயோ ஓ வண்டே என்கிறாள் தலைவி.சிறகை அது குறித்த போதும் தான் ஒரு சிறைப்பட்ட நிலையில் இருந்ததால் அப்படி அழைக்கிறாள்.அதன் உள்ளிருந்து தலைவனின் குரல் கேட்கிறது.உண்மையில் அவன் தான் சிறைப்பட்டிருக்கிறான் போலும்.அவன் குரல் அவளுக்கு களிப்பின் கடல் நிறைந்து வழிந்தாற்போல் இருக்கிறது.அவன் சொன்னதும் கேட்டது.அவன் சொல்லாததும் அவளுக்கு கேட்டது.அது அவள் உள்ளத்தில் துன்பம் ஏற்படுத்தி அவளை பறித்துக்கொண்டது.மீண்டும் அவன் குரல் பகன்றது அவளுக்கு "பகன்றை" மலர் போல் மெல்லிய உணர்வுகளை எழுப்புகிறது. இருப்பினும் அத்தகைய மலர் போல் அல்லாமலும் துன்பம் செய்கிறது.துன்பம் தரும் குரல் என்னவாக இருக்கும்? "நான் இப்போது உடனே வருவதற்கில்லை" என்ற இன்னொரு குரலும் தலைவனிடமிருந்து அவள் கேட்டாள் போலிருக்கிறது. அந்த ஆற்றங்கரையின் குருகுகள் மிக்க உணர்ச்சிமிக்க ஒலிளை எழுப்பும்.அதைப்போல மெலிதாய் முறுக்கேறிய பூவின் மொட்டு  இதழ்கள் திறக்கும். அதைப்போன்றே நலிவுற்ற என் கண்கள்  பெருக்கும் கண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாய் கீழ் இறங்கி சூடு ஏறி என்னுயிரையே உலுக்கிவிடும்.

அவன்குரல் தீங்குரல் ஆகும் தீதும் ஆகும்.
சேக்கை கண்ணும் முள்ளின் அடர்கான்
அமிழ்பு துயில் மறுத்த அனல் படு இரவு.
இனிதே பிறக்கும் பிறந்தே கொல்லும்
"தாய்சாப் பிறக்கும் புள்ளிக்கள்வன்"
புதையுறு வேழக் கழியின் மருங்கில்
புன்குரல் "பகன்றனை"வாராது மறைந்து.

அவன் எந்தக்குரலும் எங்கிருந்தும் எழுப்பவில்லை.இருப்பினும் அந்த வேழப்பூக்கள் அவளுக்கு ஒலியை கதிர்ப்பது போல் உணர்கிறாள்.அந்த மெய் விதிர்ப்பில் ஒருபக்கம் அவன் குரல் இனிக்கிறது.இன்னொரு பக்கம் தீய செய்தியை தாங்கி வருகிறது.படுக்கையில் தூக்கம் வரவில்லை.அடர்ந்த முள் காட்டில் கிடந்தவளாய் துன்புறுகிறாள்.இரவே நெருப்பு பற்றிக் கொண்டாற்போல் துடிக்கிறாள்.இப்போதும் தலைவனின் அந்த ஆற்றங்கரை தான் நினைவுக்கு வருகிறது.அவன் காதல் இனிதாய்
பிறக்கும்.ஆனால் பிறந்தவுடனேயே கொன்றுவிடும் தன்மையும் அதற்கு இருக்கிறது போலும்.அவன் இருக்கும் அந்த துறையில் புள்ளிகள் நிறைந்த ஒருவகை நண்டு உள்ளது.அது ஈனும் குஞ்சுகள் அதனையே கொன்று தான் பிறக்கும்.("தாய்சா(க)ப்பிறக்கும் புள்ளிக்கள்வன்)அவன் காதலும் அப்படியே தான்.அது பிறக்கும் நானே கொல்லப்படும் விந்தை வேதனை அல்லவா?அந்த வேழப்பூந் தட்டைகள் மண்டிய அந்த சேற்று நிலமும் நீரும் நிறைந்த கரையிலிருந்து அவன் குரல் கேட்கிறது."நீ என்ன சொல்கிறாய்? எதையோ சொல்லிவிட்டு வாராது மறைந்து கொண்டாயே!"என்று தலைவி புலம்புகிறாள்.

ஈர்ங்கண் விழிப்ப இருங்கண் கொண்டு
ஈன்ற தன்னையே தின்னுதல் ஒக்கும்,
தன் பார்ப்பு புசிக்கும் பரும்பல் முதலை
பாய்தரு துறையன் ஊர்பட்டாங்கு
பனிநலம் அழிய பனிக்கும் என் மைக்கண்.
வெண்கவரி வேழம் குழைக்கும் காற்றில்
என் அடுதுயர் யாவும் அவ் வெண்பூப் பகரும்.

அடுத்ததாய் முதலை ஒன்றின் உருவம் அவளுக்கு தோன்றுகிறது.அதுவும் அந்த ஆற்றில் தான் இருக்கிறது.அதற்கு இரண்டு விழிப்படலங்கள் உண்டு.நீலிக்கண்ணீருக்கு ஒன்று.சாதாரணமாய் இன்னொன்று.அகன்ற கண்களில் தோன்றும்.(ஈர்ங்கண் விழிப்ப இருங்கண் கொண்டு...) பெரிய பற்களையுடைய முதலையோ தான் முட்டையிட்டு ஈன்ற குஞ்சுகளையே தின்னும். முதலைகள் பாய்ந்து வரும் ஆறும் அவன் ஊரில் தான் இருக்கிறது. நண்டு முதலை ஆகிய இரு விலங்குகளைப்போன்று அல்லவா அவன்
இக்கொடிய‌ காதல் நோய் மூலம் என் உயிர் தின்னுகின்றான். குளிர்ச்சி பொருந்திய கனவு மிதக்கும் என் மையுண்ட கண்கள் கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கின.அதோ அந்த கரையில் ஆடும் அந்த சிறிய வெண்பூக்கள் இன்னும் என்ன சொல்லிக்கொண்டிருக்கின்றன? குழைவோடு வெண்சாமரம் போல் வீசுகின்ற அந்த மலர்க்குஞ்சங்கள என் துன்பத்தை தான் குழைய குழைய சொல்லிக் கொண்டிருக்கின்றன.

============================================================

ஒரு காமிரா லென்ஸின் வழியே.....




ஒரு காமிரா லென்ஸின் வழியே.....(பாலச்சந்தர்)
=================================================ருத்ரா


ஒற்றை வரியை
சுருட்டி மடக்கி நீட்டி நெளித்து
பஞ்ச் டைலாக்கில்
பல சேட்டைகளுடன்
திரையை ரொப்பி
பெட்டியை ரொப்புவதே
சினிமானின் பாணி.
ஆனால்
நறுக்கென்று
சுறுக்கென்று
உள்ளம் தைத்து
காமிராவில் எழுதிய‌
பாலச்சந்தர் படங்களைப்பற்றிய
இந்த குறும்பாக்களை
மாலை தொடுத்தாலே
கிடைப்பது
ஒரு திரைப்படக்கல்லூரி.


பாலசந்தர் படங்கள் பற்றிய குறும்பாக்கள்
================================================ருத்ரா இ பரமசிவன்


1
காப்பியாற்றிய சர்க்கஸில்
ஒரு காதல் காப்பியம்
சர்வர் சுந்தரம்.
2
ஆரஞ்சு பழத்தோல் கூடு
சுளைகள் களவு போனது.
நீர்க்குமிழி.
3
கடிகார வினாடி முள் முனையில்
திக் திக் திக்..கத்திகள்.
நாணல்.
4
அந்த "ரூம்" இன்னமும்
"லொக் லொக்"கில் தான்.
எதிர்நீச்சல்.
5
அண்ணா சாலையில்
நெல்லு காயப்போட்டால்...
அனுபவி ராஜா அனுபவி.
6
அன்றைய "புன்னகை" இன்னும்
"நோட்டில்"  செய்கிறது கேலி!
புன்னகை.
7
தூர்தர்ஷனின் "ஷெனாய்" மீட்டியது
மம்முட்டி பானுப்பிரியா நரம்புகளை.
அழகன்.
8
ராமன் தோளில் ஒரு ராவணன்.
வென்றது சீதையின் சாணக்கியம்.
மூன்று முடிச்சு.
9
மனைவியின் மீது தினமும்
கத்திவீசும் கயவக்கணவன்.
அவர்கள்.
10
வயதுகள் தள்ளிநின்று
வேடிக்கை பார்த்த காதல் தினவுகள்
அபூர்வ ராகங்கள்.

(குறும்பாக்கள் தொடரும் )





வெள்ளி, 28 அக்டோபர், 2016

தனிக்கொடியுடன் தனுஷ்


தனிக்கொடியுடன் தனுஷ்
====================================ருத்ரா
உள்ளே ஒரு கொடி
ஓடிக்கொண்டிருக்க‌
வெளியே
ஒரு தனிக்கொடி பிடித்து
பவனி வரும்
தனுஷ் அவர்களே
நீக்கள்
மக்களை
அவர்கள் மண்வாசனையோடு
சந்திப்பது எல்லாம்
மகிழ்ச்சிக்கு உரியது தான்.
ஆனால்
"குழல்" ஊதி எலிகளை மயக்கி
அவற்றையெல்லாம்
ஒரு வாய்க்காலில் தள்ளும் கதை
படித்திருப்பீர்கள்.
அதைப் போல பிள்ளைகளையும்
தள்ளிக்கொண்டு போக முயலுவதையும்
படித்திருப்பீர்கள்.
அப்படித்தான்
இங்குள்ள தமிழன்கள்.
இந்த எலிகளுக்கு மசால்வடை போதும்.
மண்ணாங்கட்டி ஜனநாயகம்
எல்லாம் தேவையில்லை.
பொறிக்குள் அவையே
மகிழ்ச்சியாய் மாட்டிக்கொள்ளும்.
தமிழன்
அப்படியொரு க‌ற்காலத்தில் விழுந்து
அவன் மீளவே இல்லை.
நான் ஆணயிட்டால் என்று
ஒருவர் சவுக்கு சுழட்டியதில்
சுருண்டு விழுந்தவர்கள்
இன்னும் எழுந்திருக்கவே இல்லை.
இந்த "தொடரி"இன்னும் தொடர்ந்து
ஓடிக்கொண்டே தான் இருக்கிறது
தமிழன் தலைகளே தண்டவாளம்.
தமிழன் வரலாறு
சிந்தனை வறண்ட ஆறாய்
ஆனது தான் மிச்சம்!
உங்கள் தனிக்கொடி
திக் விஜயம் எங்களுக்கு
திக் திக் என்று இருக்கிறது.
இந்த தமிழனையும்
தமிழ் நாட்டையும்
காப்பாற்றப்போவது யார்
என்று தெரியவில்லை.
"அவர்" சொன்னதைத்தான்
நாங்களும் சொல்கிறோம்.
ஆண்டவன் இருந்தாலும் சரி!
இல்லாவிட்டாலும் சரி!
"அந்த ஆண்டவன் தான்
காப்பாற்ற வேண்டும்!"

==================================



விடியட்டும் பார்ப்போம்.









Inline image 1




விடியட்டும் பார்ப்போம்.
====================================ருத்ரா
விடியல் தேடும்
விளிம்பு வானம்
வியர்த்ததோ?
ஓலையின்
விசிறிக்கீற்றால்
விசிறிக்கொண்டதோ?
வெள்ளி உருக்கிய‌
வெளிச்சம் கொண்டு
கொலுசுமணிகள்
கோர்த்துக் கொண்டதோ?
விண்மீன் துடிப்புகள்
விண்டு காட்டியும்
விளங்க வில்லையே.
இருட்டு பூசிய‌
வெளிச்ச முகமா?
வெளிச்சம் கரைந்த‌
இருளின் முகமா?
முகமே இல்லா ஒரு
மூளிச்சிரிப்பு
மூலையில் கேட்குது!
மூண்டு எரியும் தாகம் தன்னை
கிழக்கில் முடக்கிய‌
தடம் தெரிந்த போதும்
ஒரு குரல் கேட்டேன்.
தேடல் எனும் தீப்பொறி தேடி
ஆடல் ஓடல் நாடல் எல்லாம்
ஆயிரம் செய்கிறாய்?
மானிடம் என்ற சொல்லை
ஒரே ஒரு முறை
இதயங்களால் உரசி ஒலித்துப்பார்.
அப்போது
இதயத்துக்கு இதயம்
"இஞ்ச்" தூரம் கூட
இல்லையே மனிதா!
கோடி மைல் தூரம் கொண்டு
கூடுகள் கொண்டாய்.
தீவுகள் கொண்டாய்.
பக்கத்திலேயே லட்சங்களாய்
படுகொலைசெய்யப்பட்ட‌
மனிதப் பிணங்கள் குவிந்த போதும்
உலக மானிடப் பார்வை
அவிந்து போனதேன்?
மொத்த உலகமும் இப்படி
மரித்துப்போகும் முன்
விழித்துக்கொள் மானிடமே!
முதல் மனிதன் தமிழன்
என்று
ஆராய்ந்தவர்கள்
ஆச்சரியப்பட்டுப் போனார்கள்!
ஆனாலும்
ஏதோ ஒரு மாயப்பொருளாதார‌
அரசியல் பகை மூட்டம்
இங்கே கனத்த மரணங்களின்
இருட்டுப்போர்வையாய்
அழுத்திக்கொண்டிருக்கிறது.
உலகத்தமிழனே!
உள்ளூர் குடுமிகளின் பஞ்சாங்கத்தில்
நீ "ராகு கேது" கட்டங்களுக்கு
சோழி உருட்டிக்கிடந்தது போதும்.
உலக சாணக்கியம் புரிந்து கொள்.
அந்த சுரண்டல் மிருகங்களின்
ஊளையொலிகளில்
நீயும் சுருதி சேர்ந்து
விஷ்ணுசகஸ்ரநாமம் பாடிக்கொண்டிராதே.
மனிதர்கள் கொண்டு கட்டிய கோபுரம்
கண்ணுக்கு தெரியலையே.
வெறுங்கற்களும்
பொய்ச்சொற்களும் கொண்டு
பிளவு பட்ட உள்ளத்திலா
விடியலை நீ தேடுகின்றாய்?
விடிவது கூட மீண்டும்
இருட்டத்தான்.
பிறப்பது கூட‌
இறப்பதற்குத்தான்.
இருக்கும்
இண்டு இடைவெளிக்குள்
கண்டு தெளிவது
எந்நாளோ?
கேள்விகள் தான்
வெளிச்சம் என்றால்
விடைக்கும் வரை
கேள்..கேள்..கேள்.
கேள்விக்கு கூட இங்கு
கேள்வியே
விடையாகும்.
கடவுளுக்கு மனிதன் இங்கு
கேள்வியா?விடையா?
விடியட்டும் பார்ப்போம்.
========================================ருத்ரா








தீபாவளிக்குறும்பாக்கள்
































தீபாவளிக்குறும்பாக்கள்
===========================================================ருத்ரா

சிவகாசி

கருமருந்துக்குள்
உடல்சிதறி
ஒரு கவளம் கிடைத்தது.
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍__________________________________

வதம்

தீமையைப் படைப்பானேன்
அப்புறம்
விஷ்ணு சக்கரம் கொளுத்துவானேன்.

____________________________________


அகலக்கரை ஜரிகை

பொம்மைக்கும் தீபாவளிதான்
அகலக்கரை ஜரிகையுடன்.
கடையில்.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_________________________________________


அரை கிராம் தங்க நாணயம்.

தூண்டிலில் சொருகினார்கள்
தங்கத்தில் புழு செய்து.
விற்பனை அள்ள.

___________________________________________


பட்சணங்கள்.

அந்த கந்தக பூமியின்
குழந்தைகளுக்கு மட்டும்
பொட்டாசியமும் பாஸ்வரமும் தான்.

______________________________________________


ரங்கநாதன் தெரு

பொட்டும் வளையலுமே
இந்த சந்தின்
தேசப்பொருளாதாரம்.

_________________________________________________


ஸ்பெஷல் ட்ரெய்ன்.

விடிஞ்சால் தீபாவளி.
கக்கூசில் தான்
சீட் கிடைத்தது.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍____________________________________________________


தலைவர்கள் அறிக்கை

வாக்குப்பெட்டிக்குள் எல்லாம்
மத்தாப்பூ வெளிச்சங்கள்
மலரட்டும்.வாழ்த்துக்கள்.

______________________________________________________

ரசிகர்கள் அறிக்கை

அண்ணன் படம் இல்லை.
அதனால் இந்த ஆண்டு
தீபாவளி இல்லை.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_______________________________________________________

HAPPY DEEPAVALI !!!!!


வியாழன், 27 அக்டோபர், 2016

ஹேப்பி தீபாவளி





with thanks:-
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMMNwUwoBrk6e_kTUdcvDmM3_LGss6vNYIm2IDMvDAcg4_0goE1UKKaPeHuMmPiPrQwSH1fl34md-f-F_crFuUSR_qF0FpBjF5oaV7ecIlblkSQl56lqlzZkFhGC6ctp5K6BjLdeu_PUg/s1600/diwali+cracker+pictures+%25282%2529.jpg


ஹேப்பி தீபாவளி
=====================================================ருத்ரா

வருடாவருடம்
வருகின்ற‌
பெயர் வைக்கப்படாத புயல் தான்.
ஆனாலும் பெயர் உண்டு.
அதன் பெயர் "தள்ளுபடி தள்ளுபடி..."
தள்ளுபடி தவிர வேறில்லை.
உப்பியிருக்கும் விலைக்குள்
உட்கார்ந்திருக்கும்
அந்த நரகாசுரனை
எப்போது உணர்ந்து கொள்ளுகிறோமோ
அப்போது தான் நம் இன்பத்தீபாவளி.
விளம்பர அரக்கர்களும்
ஆசை அரக்கர்களும்
கை கோத்துக்கொண்டு
சுட்டு வீழ்த்த‌ த‌யாராய் இருக்கும்
அந்த‌ நிழ‌ல் அர‌க்க‌ன்
அவ‌ர்க‌ளுக்குள்ளேயே தான்
கூடு வைத்துக்கொண்டிருக்கிறான்.
அடிமை வில‌ங்குக‌ள்
பொடிப்பொடியாய்
போன‌து கூட‌
இவ‌ர்க‌ளுக்கு விழா இல்லை.
வைய‌ம் வாழ‌
வ‌ழிகாட்டிய‌வ‌ர்க‌ள் கூட‌
இவ‌ர்க‌ள் விழிக‌ளுக்குள்
விழ‌வில்லை.
வானம் வருடிநிற்கும்
வள்ளுவத்தின் வைர வரிகளுக்கு கூட‌
இவர்கள் கவரி வீசியதில்லை.
அந்த‌ அர‌க்க‌னைக்கொன்ற‌
இறைவ‌ன் கூறிய‌
கீதை வ‌ரிக‌ளுக்குள் கூட‌
இவ‌ர்க‌ள் நுழைந்து பார்த்து
அத‌ன் ம‌த்தாப்பு வெளிச்ச‌த்துக்குள்
ம‌ன‌ம் ம‌கிழ்ந்த‌தில்லை.
அந்த‌ அர‌க்க‌னின் "அனாட‌மியே"
இவ‌ர்க‌ள் த‌ரிசிக்கும்
அன்றாட‌ விஸ்வ‌ரூப‌ங்க‌ள்.
அர‌க்க‌னுக்கு வெடித்த‌
அந்த‌ ப‌ட்டாசு துணுக்குக‌ளில்
ச‌ட‌ல‌ங்க‌ளாய்
அந்த‌ இறைவ‌னின் கூள‌ங்க‌ள்.
ப‌ண்டிகையும் கூட‌
பொருளாதார‌ தாராள‌ ம‌ய‌த்தின்
வேதாள‌ங்க‌ள் ஆகி விட்ட‌ன.
பெட்ரோல் க‌ங்கைக‌ள்
தெருவெல்லாம்
செழிப்பாக‌ ஓடும் நாளும்
மின்சார‌ ஒளிவெள்ள‌ம்
மூலை முடுக்கெல்லாம்
வ‌ள‌ப்ப‌டுத்தும் ந‌ன்னாளுமே
ந‌ம‌க்கு எல்லாம் தீபாவ‌ளி.
அது வ‌ரைக்கும்
இந்த‌ "இருட்டு"க்கிருஷ்ண‌னுக்கும்
கொண்டாடுவோம் தீபாவ‌ளி.
குருட்டு ந‌ம்பிக்கைக‌ள்
பிடிக்கும் க‌ம்பி ம‌த்தாப்புக‌ளில்
அந்த பொறிகளில் வெளிச்சம் இல்லை.
க‌ம்பிகளில் மட்டுமே வெளிச்சம்.
சிறைக்கம்பிகளில்
சிதைந்து போனவர்கள் தந்த‌
வெளிச்சமே
இந்த சுதந்திரம்.
அந்த "ஸ்வீட் பாக்கெட்டில்"
ஒரு புதிய‌ விடிய‌லின் இனிப்பும்
இருப்ப‌தாக‌ தெரிந்தால்
அந்த‌ நிழ‌ல் கூட‌ இனிப்பான‌து தான்.
ஆனது ஆகட்டும்
போனது போகட்டும்
கிட‌ப்ப‌து கிட‌க்கட்டும்.
"ஹேப்பி தீபாவ‌ளி"
====================================================ருத்ரா


உச்சி


உச்சி
===================================ருத்ரா
கோபுர உச்சியில்
இருந்து பாருங்கள் உங்களை!
நீங்கள் சுறு சுறுப்பின்
எறும்புகள்.
அந்த ஆண்டவர்கள் கூட‌
அங்கே பொம்மைகள்.
இரண்டு பொம்மைகள்
நாலு கை ஆறு தலைகளுடன்
பேசிக்கொண்டிருந்தன.
நமக்கு இத்தனை
கை கால்கள் தலைகள் இருந்தும்
சொர்க்க லோகத்தில்
சரியாக ஆள முடியவில்லையே.
இந்த மனிதனைப்பார்.
ஒரு தலை தான்.
இரண்டு கை இரண்டு கால்கள்
ஆனால் அவன்
நம் புராணங்களையெல்லாம்
சேர்த்து அல்லவா ஆளுகிறான்?
அப்போது
கீழே இருந்தே மனிதன் சொன்னான்.
நாங்கள் வாழ்வது நிஜ வாழ்க்கை.
நீங்கள் வாழ்வதோ
நாங்கள் செய்து கொடுத்த‌
கற்பனை வாழ்க்கை

=============================================


"பைரவா" டீசர்

"பைரவா" டீசர்
======================================ருத்ரா

காய்ச்சப்பாட்டில் இருந்த‌
விஜய் ரசிகர்களுக்கு
பைரவர் டீசர் எனும்
தீபாவளி "ஸ்வீட்" பாக்கெட்
சூடாக பரிமாறப்பட்டிருக்கிறது.
விஜய் படங்களோடு
மற்றப்படங்கள் எல்லாம்
"யானை படுத்தால் குதிரை மட்டம்"
என்பது போல் தான்.
எனவே "இந்த அல்வாத்துண்டே" போதும்.
முழுநீளப்படம் அளவுக்கு
இனிப்பு விழா கொண்டாடலாம்.
கத்தி துப்பாக்கி வரிசையில்
மீண்டும்
"பெரிய அருவா" தூக்கி நிற்கும்
விஜையைப்பார்த்தால் படத்துக்கு
பைரவா என்ற‌
"திருப்பாச்சேத்தி..2"
என்று பெயர் வைத்துவிடலாம்
போலிருக்கிறது.
டீசரே ஆயிரம் வாலாக்கள் போல‌
அள்ளும்போது
தீபாவளிக்கு என்று தனியாய்
ஒரு படம் தேஎவையில்லையே.
மேலும்
விஜய் வரிசையாக‌
ஹிட் கொடுத்துக்கொண்டே இருக்கும்
வசூல்களின் அடை மழை!
அவர் படம் என்றைக்கு வந்தாலும்
அன்றைக்கே தான்
எல்லா தீபாவளியும்.
"அப்பா பைரவா! நீ யார் பெத்த பிள்ளையோ?
நீ வாழ்க நானும் வாழ்க!"
என்று "கல்யாணபரிசில்"
நம் நகைச்சுவை மன்னர் கே.ஏ.தங்கவேலு அவர்கள்
குரல் இன்றும் எதிரொலிக்கிறது.
இந்த "பைரவா" வோ
கோடம்பாக்கத்துப்பிள்ளை!
விஜய் வாழ்க!
விஜய் ரசிகர்கள் வாழ்க!
தமிழ்நாடு வாழ்க!

=========================================



இதோ ஒரு கொடி




இதோ ஒரு கொடி
======================================ருத்ரா இ.பரமசிவன்
ஒரு கொடியில்
முப்பட்டையாய் மூணு வர்ணம்.
ஒரு கொடியில்
நெடுக்கில் பட்டைகள்.
வேறெரு கொடியில்
நடுவில் வட்டம்.
இன்னொன்றில்
நீளப்பட்டைகள்
நட்சத்திரங்களுடன்.
ஒன்றில்
சூரியன்.
மீண்டும் ஒன்றில்
அரிவாள்.
சில‌
முக்கோணத்தொகுப்புகளுடன்.
அடுத்ததாய்
பிறைநிலாவுடன்.
ஒன்றில்
காலில் கட்டிய வாளுடன்
சிங்கம்.
பல்லெல்லாம் மனித ரத்தம்.
எத்தனை எத்தனை கொடிகள்..
கொடியை
உயர்த்தினால்
விடுதலை என்று அர்த்தம்.
எல்லை கொண்டு வேலியிட்டு
வேற்றுமையின் வர்ணங்கள் தீட்டி...
மரணங்களை மொத்தமாய் உமிழ‌
பீரங்கி குண்டுகள்
எப்போதுமே
வாயில் அடக்கி...
கொத்து கொத்தாய்
லட்சக்கணக்கில்
உயிர்த்தீனிகள் தின்னும்
ஒரு விஞ்ஞான மிருகத்தை
அணுகுண்டு எனும்
செல்ல புசு புசு பொம்ரேனியன்களாய்
மடியில் வைத்துக்கொண்டுமிரட்டி...
ஆலமரம் சமுக்காளம் சொம்புகள் இல்லாமல்
ஒரு அட்டை நாட்டாமையை
ஐ.நா. என்று
பொம்மையாய் முண்டைக்கண் துருத்த‌
அய்யனார் சிலை போல் நிறுத்தி
"தமாஷ்"பண்ணிக்கொண்டு...
ஒரு மொழியின் அடையாளத்தை
லட்சக்கணக்கான பிணங்களாக்கி
புதைப்பதை கூட‌
ஏதோ "போதி மரங்களுக்கு"
உரமாய் இடுவதாய்
படம் காட்டுவதையும் ஜீரணித்துக்கொண்டு
கண்ணை மூடிக்கொண்டிருக்கும்
கொடிகள் என்ற பெயரில்
காற்றில் அசையும் சில துணிப்பிஞ்சுகள்
ஒரு பக்கம்...

இந்த கொடிகள் வரிசையாய்
நூற்றுக்கும் மேல்
படபடத்தும்
ஒரு முழு மனிதன் பிறக்கவில்லை.
இதோ ஒரு தேசம்
வேற்றுமைகள் நிறைந்த கொடியை
இங்கு உயர்த்துவதில்லை.
கொடியை அறுத்தால் மட்டுமே
இங்கு விடுதலை.
ஒரு ஒளி நிறைந்த
அர்த்தத்தின் அர்த்தம் இங்கே கிடைக்கிறது.
மானிட சுவாசத்தை
சமாதானப் பிரம்மாண்டமாய்
விண்ணோக்கிப்பாய்ச்சும்
அன்பின் மானுடக்கொடி.
உலகம் கை கோர்த்து நடக்க‌
ஒரு அகல வழிப்பாதை.
டாக்டர் "ரிப்பன் வெட்டி" திறக்கிறார்.
தாயின் மணிக்கொடி தந்த‌
தொப்பூள் கொடி அது!

=========================================






புதன், 26 அக்டோபர், 2016

இதோ ஒரு வார்த்தை


"ஒரு மீள் பதிவு"
================================================ருத்ரா  இ பரமசிவன்


இது நான் முதன் முதல் "இணைய இதழில்" ("திண்ணை")எழுதிய கவிதை.விசைப்பலகை வழியே பயணம் தொடங்கி  (கொஞ்சம் காகிதம்  பேனாக்களின் தடம்இழந்து ) "பதினாறு ஆண்டுகள் உருண்டுவிட்டன.இது மீண்டும் திரும்ப முடியாத வனவாசம்.இன்றைய கணினியுகத்தில் இந்த "ஆப்"ஸ்களின் ஆரண்யத்தில் பொன்மான்களாய் ஓடுவது கணித நுட்பங்களின் குவாண்டம் மெகானிக்ஸும் பூலியன் அல்ஜீப்ராவும் தான்.தொழில் நுட்பம் உரித்த கோழிகள் ஆக்கிவிட்டன.அந்த ஓடைக்கரையில் அசையும் "ஒரு சேவற்கொண்டை "நாணல் பூ கூட" கிராஃபிக்ஸில் மலட்டுச்சித்திரங்களாய் நமுட்டுச்சிரிப்புகளை உதிர்க்கின்றன.
இந்த "கவிதையின்" மீள்பதிவை உங்களிடையே பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

===============================================================
26  அக்டோபர்  2016 .. 7.21 PM





Sunday May 14, 2000
இதோ ஒரு வார்த்தை

- ருத்ரா.இ பரமசிவன்
==============================

இளைஞனே!
உணர்ச்சியின் 'பஃறுளியாறே '
காதல் எனும்
'குமாிக்கண்டத்துள் '
நீ மூழ்கிப்போகுமுன்
ஒரு வார்த்தை.
காதல் பற்றி
புது புது வர்ணங்கள்
பூசுவதற்கு
புருசு தேடுவதே
கவிஞர்களின் தொழில்.
ஃப்ராய்டிசத் தினவுகளின்
அந்த விளிம்பு
உடையும் வரை
இவர்கள்
வார்த்தைகளை
இரத்த சதைகளின்
பிருந்தாவனம்
ஆக்கிக்கொண்டே
இருப்பார்கள்.
சூாியனை
பட்டாம்பூச்சி ஆக்குவார்கள்.
அதனால்
மனிதவாடையே இல்லாத
'ஜு 'ராசிக் ' உறுமல்களின்
யுகத்திலிருந்து கூட
உன் கலித்தொகையையும்
அகநானூற்றையும்
தூசி தட்டிக்கொண்டிருப்பார்கள்.
பாறாங்கற்களுக்கிடையே
'ஃபாசில் 'களாய்ப்
படுத்திருக்கும்
அந்த படிமங்களிலிருந்து கூட
கற்காலத்து
'லைலா மஜ்னுக்களை '
தோண்டியெடுத்து
சினிமாப்பாட்டு
தயார் செய்துவிடுவார்கள்.
இண்டெர்னெட் எனும்
ஆகாய
நரம்பு முடிச்சுப்
பின்னல்களின்
சன்னல்கள் வழியே
அந்த
மின்னலின்
'கலர் 'க்கனவுகளை
'கச்சாஃபிலிமில் '
கர்ப்பம் தாிக்க வைப்பார்கள்.
கணிப்பொறி கூட
காதலுக்கு
கண்ணி வெடிகளைப்
புதைத்து வைத்திருக்கும்
'எலிப்பொறி ' தான்.
இளமையின் புயலே!
உன்
மத்தாப்புப் பிரபஞ்சத்தில்
இந்த 'பாப் கார்ன் ' பொாிகளா
சூாியன்கள் ?
கிறங்கிய விழிகளில்
புதுக்கவிதைகள்.
ஊற்றுத்தீயில்
உற்சாகவிளையாட்டின்
சோப்புக்குமிழிகள்.
ஹார்மோன்கள் ஓட்டுகின்ற
இந்த
குதிரைப்பந்தயத்தில்
வேகம்
மைல்களைத் தின்று விடுகிறது.
பயணம்
பாதையை விழுங்கி விடுகிறது.
பிள்ளைக்குட்டிகளை
பெருக்கிக்கொள்ளும்
இந்த பொம்மை விளையாட்டில்
காதல் எனும்
நெருப்பின் தேனாற்றை
உன்மீது
ஊற்றிக்கொள்கிறாய்.
முட்டையா ?
கோழியா ?
எது முதல் ?
இது
வெறும் பண்டாரங்களின்
பாட்டு அல்ல.
அந்த வினாக்களைத் தின்ற
விடைகளும்
அந்த விடைகளை
எச்சமிட்ட வினாக்களும்
இன்னும்
பல்கலைக்கழகங்களின்
தாழ்வாரங்களில்
இறைந்துதான் கிடக்கின்றன.
ஆனால்
உனக்கு
முட்டைக்குள்ளும் காதல்
கோழிக்குள்ளும் காதல்.
நீ
அவிழ்க்கவேண்டிய
புதிர்கள்
இன்னும்
புதர்களாய்
மண்டிக்கிடக்கின்றன.
வெளிச்சம் சுவைக்கும்
ஈசல் பூச்சிகளின்
இருட்டு இறக்கைகளில்
ஈர்ப்பும் துடிப்பும்
ஐன்ஸ்டீன் சூத்திரங்களாய்
அவிந்து கிடக்கின்றன.
உன்
மில்லினியக்கொண்டாட்டங்கள்
வெறும்
பூவாணங்களின்
தோட்டம் அல்ல.
இந்த மில்லினியம்
கரையாத கல்தூணும் அல்ல.
நிகழ்ச்சிகளில்
உருகியோடும்
மெழுகுவர்த்தி இது.
தீக்குச்சியை
இப்போது தான்
கிழித்திருக்கிறாய்.
காதல் எனும்
குச்சியோடு
எாிந்து முடிவது மட்டும்
வாழ்க்கை அல்ல.
நூற்றாண்டுகள்
முடியும்போது
அது
உன் தோரணங்களை
கேட்கவில்லை.
பனிக்கட்டித்துண்டுகள்
மிதக்கும்
ஸ்காட்ச் விஸ்கி கேட்கவில்லை
விடிய விடிய
உட்கார்ந்து கொண்டு
வானம் எனும்
கன்னிக்குடம்
உடைத்துக்கொண்டு வரும்
அந்த கற்பனைக் குழந்தைக்கு
போதை நர்த்தனங்களில்
உன்னை
பிரசவம் பார்க்கச்சொல்லவில்லை.
காதலைக்கொண்டாடுவதற்கு
மட்டும்
இந்த மில்லினியம்
உன் கையில் விழவில்லை.
மூக்குதுடைக்கும்
கைக்குட்டை கூட
உனக்கு
காதலியின் முகம்
ஆகிப்பொனதால்
அவள்
சுவாசப்பிரளயத்தில்
நீ
மூழ்கிப்போகும் முன்
இதோ ஒரு வார்த்தை.
உன் பங்குக்கு
என்ன தரப்போகிறாய் ?
இருட்டையா ?
வெளிச்சத்தையா ?
இந்த
நுரைப்படுகையில்
நீ
அமிழ்ந்தது போதும்.
பருக்கைக்கற்களில்
பளிங்குத் தாஜ்மகால் என்று
நீ
படுத்துக்கிடந்தது போதும்.
இளமைச்சூறாவளியே!
வெறும்
தெருப்புழுதியை
நீ
கிளப்பிக்கொண்டிருந்தது போதும்.
சமுதாயப்
பிணிகளையெல்லம்
சுட்டொிக்கும்
உன் எாிமலையின்
இமைகள் விாியட்டும்.
விழுச்சி கொள்!
எழுச்சிகொள்!

- ருத்ரா (இ.பரமசிவன்)
=====================================


Thinnai 2000 May 14
திண்ணை

சில "பல்ஸ்களே" பாக்கி. 



சில "பல்ஸ்களே" பாக்கி.
=======================================ருத்ரா
மயிலிறகில்
மனம் தொட்டு
ஒரு கவிதை
உனக்கு இதோ.
கடல் நுரையில்
சொல்லெடுத்து
ஒரு கவிதை இதோ.

பட்டாம்பூச்சி சிறகில்
பட்டா போட்ட கனவுகளோடு
இதோ கவிதை.

தமிழுக்கும் அமுது என்று பேர்
என்று இனித்த உதடுகள்
வருடிய சொற்களில்
கவிதை இனிப்பாய் இதோ..

"போதும் டா மொக்கை.
ஐ லவ் யூ சொல்லுடா
சீக்கிரம்.
டாப் அப் போட
சில பல்ஸ்களே பாக்கி..."
================================================
(கை பேசிக்கவிதைகள்)



செவ்வாய், 25 அக்டோபர், 2016

அந்த வயதில் ஒருநாள்















பேப்லோ நெருதா 

அந்த வயதில் ஒருநாள் .............பேப்லோ நெருதா  

( "கவிதை "(Poetry) என்ற தலைப்பில் பாப்லோ நெருதா எழுதியது)
====================================================================

அந்த வயதில் ஒருநாள்
வயதுக்கு வந்ததுபோல்
அது வந்தது.
ஆம் "கவிதை" வந்தது.
என்னைத்தேடி..துருவி  அது வந்தது.
எனக்குத்தெரியாது
அது எங்கிருந்து வந்தது என்று.
பனி இறங்கும் விழுதுகளிலிருந்தா ?
ஆறுகளின் கீற்றுகளிலிருந்தா ?
எனக்குத்தெரியாது.
எப்படி
எப்போது
அந்த பூனை
பையைவிட்டு
வெளியே வந்தது
என்று எனக்குத்தெரியாது.
மை துப்பிய
எழுத்து எச்சிலுக்கும்
பிரசவ வலி வந்தபோது
 பேனா முதுகுக்குள்
சுருண்டு நிமிர்ந்தது
ஒரு
எரிமலையின் தண்டுவடம்.
அந்த
கன்னிக்குடம் உடைந்த போது
அது
கருப்பா சிவப்பா
என்று எனக்குத்தெரியாது.
அது
ஒலிக்கூட்டங்கள் இல்லை.
அது
வார்த்தைச்சடலங்கள் இல்லை.
அது
மெளனத்தின் இடுகாடு இல்லை..
ஒரு தெருக்கோடியில்
அது
என் பிடறி பிடித்து உந்தி
அழைத்தது.
அங்கும் இங்குமாய்
கிளைவிட்டுக்கொண்டிருந்த
இரவு விருட்சத்திலிருந்து...
தொப்பூள் கொடி
அறுத்துவிட்டது போல்
முன் பின் தெரியாத
அந்த அவர்களிடமிருந்து...
வெறிபடர்ந்து
மரணப்பூக்களைத்தூவும்
துப்பாக்கிகளின்
அந்த காட்டுத்தீயிலிருந்து...
அல்லது
ஒற்றைப்பனைமரம்
உலா போனது போல
தனி ஆளாய்
நான் திரும்பிக்கொண்டிருந்த
அந்த தடத்திலிருந்து...
நான்
பரிணாமம் பெற்றுவிட்டேன்.
ஆனால்
மூளியாய்
முகம் இல்லாமல்
நின்றிருந்தேன்.
அது என்னை
தொட்டு உயிர்த்தது.
அதைப்பற்றி சொல்ல
என் வாய் குளறுகின்றது.
அதை
தரிசிப்பதற்கு
எனக்கு கண்கள் இல்லை.
என் உள்ளுக்குள்ளே
ஏதோ ஒரு தொடக்கம் உறுமியது.
காய்ச்சல் கண்டு நடுங்கியவனாய்
ஒட்டிப்பிறந்த சிறகுகள்
உதிர்ந்து
அவற்றின்
ஓர்மை அற்ற பறவையாய்
கீழ் நோக்கி
விழுந்து கொண்டே
அதில் ஒரு பாதையை
நான் செதுக்கிவைத்து
செதில் செதில்களாய்
அர்த்தங்கள் இல்லாமல்
சிதறுண்டு போவதிலிருந்து
மீண்டு
அர்த்தப்பிழம்பாய்
அவதரித்துக்கொண்டேன்
எழுந்து
நான். சுடப்பட்டு வீழ்ந்த
என்மீதே
உட்கார்ந்து கொண்டேனோ ?
என்ன மயக்கம் இது ?
என் முதல் வரி
மங்கலாய்
கசங்கலாய்
வெறுமையாய்
உணர்வுகள் வறண்டனவாய்
ஆனால்
தூய அறிவுப்பிண்டமாய்
அங்கே கிடந்தது
எல்லாமே தெரிந்து கொள்ளுதல்எனும்
ஆபாசம் கலக்காத
அந்த அறிவின்மையே
உண்மையான அறிவுடைமை.
பளிச்சென்றுநான் பார்த்துவிட்டேன்.
எல்லாவற்றையும்
எங்கோ உயரத்தில்
விறைத்துக்கிடந்த வானம்
வாய்பிளந்து
திறந்து கொண்டது.
இந்த பிரபஞ்சம் எல்லாமே
அம்மணமாய் தெரிந்தது.
கோள்கள் எல்லாம்
நெஞ்சுமுனைக்குள் வந்து
துடித்து துடித்து
ரத்தம் இறைத்தன.
நிழல் செறிவுகள்
சல்லடையானதில்
இருள் ஒழுகல்கள்
புதிர்க்காட்சிகள் ஆயின.
கூரிய அம்புகள் போல்
துளைக்கும் குண்டுகள் போல்
மொக்கு அவிழும் மலர்கள் போல்
முறுக்கு ஏறி
முறுக்குவிடும்
சுழல் இரவில்
அண்டவெளியே
அருவியாய் இறங்கும் கவிதை!
துளியிலும் துளியாய்
தூசியிலும் தூசியாய்
நான். நட்சத்திரங்களைக்கொண்டு
மிடைந்த வைத்திருந்த போதும்
வெறுமை கவிழ்ந்த போதையில்
குப்புறக்கிடக்கும் வானம்.
அடங்காத தாகம்
என்னை
ஆர்ப்பரித்துக்கொண்டே
குடித்து தீர்த்தது.
எதையோ
நான் பிரதிபலித்தேன்.
பிடிபடாத
ஏதோ ஒரு
பிம்பத்தின் குழம்பில்
நான் புதையுண்டு கிடந்தேன்.
தொடமுடியாத ஒரு ஆழத்துள்
இன்னும்
அசுத்தங்களால் தீண்டப்படாமல்
பிண்டம் பிடிக்கப்படாத
ஒரு பிண்டமாய்
பிரண்டு பிடக்கின்றேன்.
அந்த நட்சத்திரங்கள்
என் காலச்சக்கரம்
உருட்டித்தள்ளி நொறுக்கிவிட்ட சுவடுகள்.
நாள நரம்புகளை
அறுத்துக்கொண்டு விடுதலை பாடும்
என் இதய யாழ்
உங்கள் மூச்சுகளில் முட்டுகிறதா ?
சன்னல்கம்பிகள்
உடைந்து தூளான பின்
அதோ
துல்லியமாய
ஒரு வானம்!




(இது ஒரு கவிதையின் மொழிபெயர்ப்பு அல்ல. அந்த கவிதையின் மொழி உயிர்ப்பு)
============================================ருத்ரா.இ பரமசிவன்.

http://genius.com/Pablo-neruda-poetry-annotated

Poetry

Pablo Neruda


POETRY LYRICS




And it was at that age ... Poetry arrived
in search of me. I don't know, I don't know where
it came from, from winter or a river.
I don't know how or brush

no they were not voices, they were not
words, nor silence,
but from a street I was summoned,
from the branches of night,
abruptly from the others,
among violent fires
or returning alone,
there I was without a face
and it touched me.
I did not know what to say, my mouth
had no way
with names,
my eyes were blind,
and something started in my soul,
fever or forgotten wings,
and I made my own way,
deciphering
that fire,
and I wrote the first faint line,
faint, without substance, pure
nonsense,
pure wisdom
of someone who knows nothing,

and suddenly I saw
the heavens
unfastened
and open,
planets,
palpitating plantations,
shadow perforated,
riddled
with arrows, fire and flowers,
the winding night, the universe.
















"கடவுளும் கந்தசாமியும்"

"கடவுளும் கந்தசாமியும்"
================================================ருத்ரா


"உனக்கு என்ன வரம் வேண்டும்"
வாலிபன் கந்தசாமியாகிய நான்
குரல் கேட்டு சுற்றும் முற்றும் பார்த்தேன்.
கடவுள் குரல் தான் அது!
கடவுள் கேட்டார்
எனக்கு பளிச்சென்று பொறி தட்டியது.
"இறைவா 
அவள் கடைக்கண் என் மீது விழவேண்டும்.
அதோடு
என்னிடம் அவள்
ஐ லவ் யூ சொல்லவேண்டும்."

"தந்தேன் வரம் "

மறைந்து விட்டார் அவர்.

அவர் சொன்னது போல்.
அவள் எதிரே தோன்றினாள் 
வா என் அருகில் வா 
என்றாள்
அடக்க முடியாத ஆசையில் 
அவள் அருகில் சென்றேன்.
என் தலையை நெகிழ்ச்சியோடு வருடினாள்.
எழில் கொஞ்சும் தோற்றத்தில்
அம்பிகை போல் நின்றிருந்தாள்.
அவள் தான் சந்தேகமில்லை.

"வா மகனே வா."

"என்னது.  மகனேயா"..
வடிவேல் பாணியில் வீறிட்டுவிட்டு
மயங்கி வீழ்ந்தேன்.
கூட்டம் கூடிவிட்டது.
தண்ணீர் தெளித்து
என்னை எழுப்ப முயன்று கொண்டிருந்தார்கள்.
நான் இன்னும் கண் விழிக்க வில்லை.
கனவு உலகில் நான்.
என்னைச்சுற்றி பஞ்சு பஞ்சாய்
மேக மண்டலங்கள் .....
அங்கே ...
கொண்டையில் பூ சுற்றிக்கொண்டு
துந்தணாவை நிமிண்டி விட்டுக்கொண்டு
நாரதர் "நாராயணா" என்றார்.
அவரிடம் 
எங்கே ஈசன் என்று
அவர் கொண்டையை பிடித்து ஆட்டி 
கோபத்துடன் கேட்டேன்.
ஈசன் பின்னாலேயே நின்றிருந்தார்.
இறைவா என்ன சோதனை.?
ஏன் இப்படி பண்ணி விட்டீர்கள்..
அவர் விளக்கினார்.
"ஓ அதுவா!
நீ என்னவோ சொன்னாயே என்ன ..அது...
ஆம் "லவ்"..அது என்ன என்று 
நாரதரைக்கேட்டேன்.
அன்பு என்றார்.
ஓ ..அப்படியா!
அம்பிகையின் கடைக்கண் வேண்டும் 
அவள் அன்பு வேண்டும் என்று தான்
கேட்கிறாய் போலிருக்கிறது என்று
அவளை உடனேயே அனுப்பினேன்..."

"போதும் சாமி..போதும்..
"உங்களுக்கு ஒரு கும்பிடு
உங்கள் வரத்துக்கும் ஒரு கும்பிடு"

கூட்டத்திலிருந்து
திமிறிக்கொண்டு ஓடினேன்.
எதிரே யார் நின்று கொண்டிருக்கிறார்கள்?
தெரியவில்லை.
அவரையும் முட்டி மோதிக்கொண்டு
தலை தெறிக்க ஓடினேன்.
எதிரே புதுமைப்பித்தன் தான்
"கட கட வென்று "சிரித்துக்கொண்டு
நின்றிருந்தார்.

=========================================================

திங்கள், 24 அக்டோபர், 2016

"பாப் கார்ன்"







"பாப்கார்ன்"
=======================================ருத்ரா

"இப்போ நா
என்ன சொல்றேனா...."
"அதைத்தான் நானும் சொல்றேன்."
"இப்போ
அதுக்கான நேரம் இல்ல."
"நேரமாவது காலமாவது."
"சரி நீ ஆரம்பி"
"யார் எங்கேருந்து ஆரம்பிச்சா என்ன‌
பூனை பைய விட்டு வெளியே வரணும்.
இலவங்காய் வெடிச்சாகணும்
இந்த மொக்கைக்கிளிகளுக்கு தெரிஞ்சாகணும்."
"இது என்ன‌ புதுசா ஒரு மொக்கை."
"சரி விடு.மறுபடியும் ஆரம்பிப்போம்.
யாரு ஆரம்பிக்கிறது சொல்லு."
"யாரு ஆரம்பிச்சா என்ன.
முடிச்சு வைக்கிறது தான் முக்கியம்."
"அப்போ நீ முடிச்சு வை."
"என்னது?"
"இல்லல்லே. நீ பின்னாலேருந்து வா."
"அதை நீயே செய்யேன்."
"பின்னலே இருந்து வந்தாலும்
முன்னாலே இருந்து போனாலும்
ஒரு இடத்திலே
மோதித்தானே ஆகணும்.
அப்போ பொறி தெறிச்சு தானே
ஆகணும்."
............................................................
...................................................................
அது வேற ஒண்ணுமில்ல.
அந்த மூணு வார்த்தை ஆங்கில "பிட்டை"
வெளியே போட‌
இந்த ரெண்டு இளசும்
மனசுக்குள்ள‌
ரவுசு விட்டுகிட்டு
இருக்குதுக மச்சி.
அதோ பாருங்க‌
"பாப்"கார்ன் பொரி
கொறிச்சுகிட்டே
நாலு மணி நேரமா
உக்காந்திருக்கிறத.
தீப்பொறி தெறிக்குமா?
அந்த மூணு வார்த்தை இது தான்
"ஐ லவ் யூ டா"
நான்கவதாய் எதற்கு இந்த "டா"
அது தமிழ் இலக்கணத்து
"அசைச்சொல் ")
========================================ருத்ரா

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

கல்பெயர்த்து இழிதரும்




கல்பெயர்த்து இழிதரும்
===========================================ருத்ரா இ பரமசிவ ன்

(சங்கத்தமிழ் நடையில் நான் எழுதிய செய்யுட்கவிதை.)

கல் பெயர்த்து இழிதரும் 
இமிழ் இசை அருவி
புல்லோடு ஆங்கு பழனம் தழீஇ
பச்சை படர்த்தி பகலவன் தீவிழி
அவிப்பக் குளிரும் நீர் விரி பரவை
நெடுநல் நாட!அஃது மன் அன்று
உள் ஊறு தண்புயல் கண்புயல் படர‌
அடுதுயர் தந்தனை வெஞ்சுரம் ஏகி.
நீர்ச்சுனை தீச்சுனை போலும் நிழலும் வேகும்
அழல்நுரை அள்ளி அன்னமும் கலங்கும்.
ஐய நின் துழந்த பிரிவின் கொல் துயர்
பொய்த்தீ பற்றி பொல்லாங்கு செய்யும்.
மைபொதி வானும் புள்நிரல் பொலிவும்
இடி உமிழ்பு கண்டு நடுக்குறு செய்யும்.
துடி அன்ன அதிர்வில் புல்லிய தும்பி
வலைச்சிறைக் கண்ணும் அழியச்சிதையும்.
முற்றிய கழையைப் பற்றி நெரிக்கும்
தூம்பின் நீள்க் கை நெம்பு தரும் வேழம்.
யானும் முறிபடும் உயிர் நரல் கேட்டிலை.
நாஞ்சில் கவ்விய கொழுஞ்சினை கயல்படும்
துடிப்பும் அறியலை உயிர் நூல் கோத்து
உலுக்கிச் செகுக்கும் ஊசியோடு அழியும்
ஆவியும் கண்டிலை ஆர்கலி மாவொடு 
தழுவினையாக ஆற்றொடு போகி
ஐந்தும் மறந்தனை எத்திணையாயினும்
அத்திணை ஈண்டு அருகுமின் விரைமின்
நெடுவேல் அன்ன மாவின் தளிராய் 


(பொழிப்புரை தொடரும்)

=================================================ருதரா

12 செப்ட ம்பர் 2014 ல் எழுதியது

(நயன் தாரா)

பார்வைகளின் பூ மழையே
============================================ருத்ரா இ பரமசிவன்.
(நயன் தாரா)

உங்கள் பெயரை என்னால்
இப்படித்தான் பெயர்க்க முடிந்தது.
நீங்கள் நினைத்தால்
உங்கள் விழிகளின் வியர்த்த நடிப்பில்
எல்லா உலகங்களையும்
பெயர்த்தெடுத்து
ரசிகனின் இதயரோஜாவாக்கி
உங்கள் கூந்தலில்
சொருகிக்கொள்ள முடியும்.
"ராமராஜ்ஜியத்தில்"
ஆந்திராவுக்குள்
ஒரு சூறாவளியை கிளப்பினீர்கள்.
தமிழ் நாட்டில்
உங்களைப்பற்றிய
கிசு கிசுக்களின்
கொசுக்கடிகளின் ஊடேயும்
"ஹேட் ட்ரிக்" அடித்தீர்களே.
இங்கு உள்ள‌ வெள்ளித்திரை
பத்மினி சாவித்ரி ஊர்வசிக்கு அப்புறம்
சஹாரா பாலைவனம் ஆகிவிட்டது.
ஜோதிகாவின் அற்புத முகரேகைகள்
கண்டோம்!..ஆனால்
நடிப்பின் சிகரம் தொடும் முன்னே
அந்தநடிப்பின் வெண்ணிலவு
வீட்டுக்குடும்பத்தின் ஒரு
சிம்னி விளக்காகி
இல்லறம் எனும் நல்லறம்
எனும் அன்புக்காவியத்தின்
அடர்ந்த "சூரியனின்"
பொன் திரைக்குள் போர்த்துக்கொண்டது.

உங்களுக்கு
நடிகர்கள் ஒரு பொருட்டல்ல.
அவர்கள் உங்கள் முகத்தில்
"கண்ணாடி பார்த்து"க்கொண்டே
நடித்து
கட் அவுட் பால்குடங்களின்
ஜிகினாலோகத்துள்
நுழைந்து விடுவார்கள் போலிருக்கிறது.
ஆனாலும் "நானும் ரவுடி தான்"ல்
"விஜய நயன் தாரா சேதுபதி"
என்று நடிப்பின் பிழம்பு
ஒரு நேர்கோட்டில் வந்து
தியேட்டர்களையெல்லாம்
ஒரு அள்ளு அள்ளி விட்டதே.

நயன் தாரா அவர்கள் நடிப்பின்
பரிமாணம் ஒரு புதுமைப்பாணம்!
அது ஊடுருவாத உணர்ச்சிக்காடுகள் இல்லை.
கணக்கற்ற பட்டைகள் தீட்டப்பட்ட
வைரத்திலிருந்து வரும்
கணக்கற்ற நயனக்கதிர்கள்
பார்வைகள்! பாவனைகள் !

பெண்ணியத்தின் சராசரி
கண்ணீர்ப்பூக்களாக இல்லாமல்
அந்த மகரந்தங்களோடு
மனத்தின் ஒரு
வெடி மருந்துகிட்டங்கியும்
பொதிந்து இருக்கிறது.
பாத்திரங்கள்
அழகு நிரப்பிக்கொண்டு மட்டும்
வரவில்லை.
அதிர்சசியூட்டும் யதார்த்தமும்
உள்ளடக்கிக்கொண்டிருக்கிறது.
"மாயா"
"நானும் ரவுடி தான் "
"தனியொருவன்"
என்ற படங்களில்
அவரது மும்முனை வெற்றி
அடுத்தடுத்து வரும்  படங்களிலும்
ஒரு வீச்சோடு வருகிறது.
சமுத்திரத்தின் திரைகள் எனும்
 அலைகளில்
ஆண் அலை  பெண் அலை
உண்டு என்கின்றனர்.
சினிமாத் திரை எனும்
இந்த அலைகளில்
நடிப்பின் வானம்
நயன தாரா எனும் பெண் அலையாய்
பொங்கி எழலாம்.
எத்தனை நாளைக்கு தான்
இதை வெள்ளித்திரை என்று
சொல்லிக்கொண்டிருப்பது?
அதை பிளாட்டினத்திரை
என்று சொல்லும் "பொற்காலமும்" வரலாம்
நயன்தாரா அவர்களால்.!


===================================================
















சனி, 22 அக்டோபர், 2016

கண்ணதாசன் அலை

கண்ணதாசன் அலை
==========================================ருத்ரா இ.பரமசிவன்

கோப்பைக்கவிஞனென
கொச்சைப்படுத்துவார்
கொச்சைப்படுத்திக்கொள்ளட்டும்.
இவர் கோப்பைக்குள் ஏழுகடலுண்டு.
எழுத்துக்கள் எழுந்துவந்தால்
அத்தனையும் சுநாமிகளே

அதர்மக் கரையுடைக்கும்
ஆவேச அலைகள் தான்.
துலாபாரத்தின்
"துடிக்கும் ரத்தம் பேசட்டும்"
இன்னும் இந்த தேசத்தின்
செங்கொடிகளில்
நரம்போட்டங்களை காட்டுகின்றன.

தத்துவம் என்பது தனியாக இல்லை.
வீடு வரை உறவு வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை கடைசி வரை யாரோ?
இந்த இரண்டு வரிகளில்
மனிதனின் தேடல் பற்றிய‌
கேள்வியின் கூர்மை நங்கூரம்
பாய்ச்சி நிற்கிறது.

பிரமனையும் படைக்கும் பிரமனே கவிஞன்.
இதையும் ஆணித்தரமாய் சொன்னான்.
சாவு என்பது பயப்பட அல்ல‌
ஆலிங்கனம் செய்து கொள்ள.
யமன் கூட அவனுக்கு "உமன்" தான்
வா வந்து அணைத்துக்கொள் என்பான்.
மனிதன் தன் நிழலையே படைத்தான்
கடவுள் என்று.
அதனால் தான் அவன் இப்படி எழுதினான்.
"நான் ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை
நான் நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை"

சட்டி சுட்டதடா. கை விட்டதடா.
எறும்புத்தோலை உரித்துப்பார்க்க‌
யானை வந்ததடா..
என்ன ஆழமான வரிகள்?
வேதங்களின் லட்சக்கணக்கான சுலோகங்கள்
முழங்கியா
நம் "லப் டப்"களுக்கு
அர்த்தம் சொல்லப்போகின்றன?

இரவின் கண்ணீர் பனித்துளி என்றான்.
இருட்டுக்கும் கூட உணர்ச்சி உண்டு.
தூங்காத இமைகளில்
கண்ணீரின் வைரங்கள்.
கவலைகளே பட்டை தீட்டும்.

காதல் என்ன பளிங்கு கோட்டையா?
சலவைக்கல் கட்டிடமா?
அந்த தள்ளுவண்டிக்காரியின்
தளுக்குத் தமிழ்கூட
இனிய கலித்தொகை அல்லவா?
"எலந்த பயம்..எலந்த பயம்.."
தமிழ் நாட்டின் ஒலிபெருக்கிகள் எல்லாம்
தொண்டை சுளுக்கிக்கொண்டன.

காதல் கிளுகிளுப்புகள் கூட‌
அந்த கவியரசனுக்கு
விளையாட்டு காட்டும் கிலுகிலுப்பைகள் தான்.
"சுட்ட உடல் கூட எழுந்து நடக்கலாம்.
உப்புக்கடல் கூட சர்க்கரை ஆகலாம்.
அன்னை தந்த பால் விஷமும் ஆகலாம்
நீ சொன்னது எப்படி உண்மை ஆகலாம்?"
அதோ அந்த பாறாங்கல்லில் முட்டி
சுக்கு நூறாக சிதறிப்போகிறேன் என்கிறான்
காதலி மட்டுமே அவனுக்கு உண்மை.


கவிஞனின் பேனாவுக்குள்
காதல்
டிராகுலாவாகவும் இருக்கலாம்.
மயில்பீலிகளாகவும் வருடலாம்.
கண்ணதாசன் என்ற கவிஞன் மட்டுமே
தன் மைக்கூட்டில்
எரிமலையின் லாவாவை நிரப்பி வைத்து
காதலை கவிதையாக‌
கொப்பளிக்க முடிந்தது.

மெட்டுக்கு சட்டை தைத்து தரவே
பேனாவை ஏந்தினார்.
மெட்டு ஒலி
அவர் கவிதையால்
தமிழ் மண்ணையே எதிரொலிக்கும்
மெட்டி ஒலி ஆனது.

=====================================================
19 அக்டோபர் 2014ல் எழுதியது

வெள்ளி, 21 அக்டோபர், 2016

கலக்கி அடிக்கிறார் "தர்மதொரை"

கலக்கி அடிக்கிறார் "தர்மதொரை"
=========================================ருத்ரா இ பரமசிவன் 
(விஜய் சேதுபதி)

அண்ணந்தம்பி கதை
ஆயிரம் வந்துருச்சு.
ஆனாலும்
அண்ணங்களே தம்பியை
"போட்டுத்தள்ளும்"
கொடூரத்துக்கு
படம் ஏன் தாவியது.
சீனு ராமசாமி
"குடியிருக்கும்"
திரைக்கதைக்குள்ளே
டாஸ்மாக் "குடி"யிருந்து
டார்ச்சர் பண்ணுது.
விஜய் சேதுபதி
இழவு வீட்டு
குத்தாட்டத்தில்
சாராய நாற்றத்தோடு வாழ்க்கையின்
சாராம்சத்தையும்
மனம் உருக பிழிந்து காட்டுகிறார்.
வடக்கத்திய தமன்னா கூட‌
ஒரு கவிஞர் எழுதிய மாதிரி
"வெள்ளாவி"யில் வச்சு எடுத்த‌
வெள்ளை ரோஜாவாய்
விஜய சேதுபதியுடன்
"எந்தப்பக்கம் பார்த்தாலும்
வானம் ஒன்று தான்"
என்ற பாட்டில்
வானச்சிரிப்பின் மின்னல் பூவாய்
மத்தாப்பு கொளுத்துகிறார்.
தமிழனுக்கு
குடித்து நாசமாகாதே என்பதையும்
நடித்து தான் காட்ட வேண்டியிருக்கிறது.
இதுவும்
நமக்கு "வாத்தியார்"
கத்துக்கொடுத்த பாடம் தான்.
குடிப்பது போலே நடிப்பார்
நடிப்பது போலே குடிப்பார்
என்று அபிநயித்து
"குடி"யிருந்த கோயிலாய் தான்
தமிழ் நாட்டை ஆக்கி விட்டிருந்தார்.
இதில் ராதிகாவுடன்
விஜய்சேதுபதி
பேசும் வசன‌ங்கள்
முள் போல் தைப்பது
அவர் நடிப்பின் கூர்மை!
குதர்க்கத்தை தர்க்கமாக்குகிறார்.
கழுதையை குதிரையாக்கி
ஓடும் பொய் வாழ்க்கையின்
தள்ளாட்டங்களை
தள்ளாட்டம் இல்லாமல் தத்துவமாக்கி
"பொளந்து"கட்டுகிறார்.
இவர் நடித்த
"சூது கவ்வும்"என்ற படத்தின் தலைப்பின்
முன் வரிகள் "தர்மத்தின் வாழ்வுதன்னை"
என்பது எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்?
தெரிந்திருந்தால்
அந்த நெருப்புக்கவிஞன் பாரதியின்
உருட்டுவிழிகளில் சுடரும்
விடியல் தெரிந்திருக்கும்!
ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா
என்று அவன் அழைத்ததும்
காதில் நுழைந்திருக்கும்!
இப்படி இருட்டுக்குள் நுழைந்து
குடியின் "வர்ண வர்ண தேசங்களை"
காண நேர்ந்திருக்காது.
இருப்பினும் விஜயசேதுபதியின்
கனல் துண்டுகள் தெறித்துவிழும்
விழிகளின் நடிப்பில்
புதிது புதிதாய் நாம்
பல பரிமாணங்களை பார்க்கின்றோம்.
குடியின் தீமைகளை விளக்கமட்டும்
படம் எடுத்தால்
அது வெறும் பிரச்சாரமும் அரசியல் நெடியும்
கலந்ததாக வறண்டு போய்விடும்.
எனவே தான் மூணு வித கலர்க்கன‌வுகளும்
மூணு நாயகிகளும்.
இந்த மசாலாவுக்குள்
திகிலும் அதிர்ச்சியுமாய்
கொஞ்சம் பொடி தூவியிருக்கிறார்கள் கதையில்.
ராஜேஷின் ப்ரொஃபெஸ்ஸர் பாத்திரம்
விஜய சேதுபதியோடு
மெருகு கூட்டுகிறது.
ராஜேஷுக்கு அவர் குரல் தான் நடிப்பு.
குழைவு கனிவு ஒரு கம்பீரம் மற்றும் கணீர் ஒலி
இத்தனையின் சங்கமமே அவர்.
வெகு காலம் கழித்து தலை காட்டியிருந்தாலும்
இன்னும் நடிப்பின் சதுரங்க கட்டத்தில்
ராஜா தான்.
அவர் மகள் ஐஸ்வர்யாவின் களையான எளிய தோற்றம்
எல்லோராலும் பெரிதும் ரசிக்கப்படுகிறது.
எம் எஸ் பாஸ்கர் எந்த கோணத்திலும்
நம்மை கிச்சு கிச்சு மூட்டியும்
குணசித்திரத்தைக்காட்டியும் நெகிழ்த்திவிடுவார்.


விஜய சேதுபதி அவரது இரண்டாவது சகாப்தத்தில்
நுழைந்து விட்டார்,
முந்தைய படங்களில்
கதையின் அழுத்தத்தையும் கனத்தையும்
ஒன்றாய் தாங்கி
வெண்கொற்றக்குடை ஏந்திய ராஜாவாய் வருவார்.
இப்போது "கதாநாயக" ஒளிவட்டம் மட்டும்
தலையில் சூட்டிக்கொண்டு
அலப்பறை செய்கிறார்.
ஒரு கட்டத்தில்
நடிகர் திலகம் "மூக்கைச்சிந்தினாலும்" (புதிய பறவை)
பெரும் நடிப்பென ரசிக்கப்பட்டது.
ரஜனியோ சிகரெட் தூக்கிப்போட்டு வாயில் பிடிப்பது
என்ற மேன்னரிசத்தில் துவங்கி
ஸ்டைல் மன்னனாய் சூபர்ஸ்டார் ஆகிவிட்டார்.
ஆனால் வெறும் யதார்த்தம் காட்டி சூப்பர்ஸ்டார்
ஆகி விட்டவர் விஜய சேதுபதி.
ஆனால் இந்த இரண்டாம் சகாப்தத்தில்
மசாலா சேதுபதியாய்
பழைய புழுக்கூட்டை (கொகூன்) உடைத்துக்கொண்டு
பட்டாம்பூச்சியாய் பறக்க நினைக்கிறாரோ.?
அதற்கு "பாஷா" போல கதை அமைத்து
பாதை போட்டுவிடுவார் சீனுராமசாமி!
ஒரு ரஜனிபதியாய் அல்லது சிவாஜி சத்ரபதியாய்
அவர் ஆரோகணித்து வந்திடுவார் என்பதை
கட்டியம் கூறுவதே இந்த "தர்மதுரை".

==================================================================












பெண்ணை மடல் மா








































பெண்ணை மடல் மா
==========================================ருத்ரா இ.பரமசிவன்

பெண்ணை மடல்மா கலித்தல் அன்ன‌
எருக்கம் சூடி உருக்கம் பயின்று
ஆயிழைப் பொலங்கிளர் வாணுதல் எய்ய‌
இல் இல் அடுத்து ஊர்ந்தனை மன்னே!
தகரக்கூந்தல் கனலன் குரலென‌
கூரிய வீசும் அவள் நிலை அறியா
புல்லியக்கல்லா நெடுமகன் போல
மடலேறு ஆண்தகை மடம் கொண்டன்ன‌
அவள் பயிர் மடமே உணரா நின்று
உகுத்தனை என்னே விரிஉளை அலரி.
தூற்றல் கொடுநோய் அவள் உற்றது அறிதி.
குரூஉ மயிர் யாக்கை உளியத்து படர்முள்
செத்தென போர்த்த நீள்வரிப்பெண்ணை
நெடுமா தொலைச்சிய‌ செல்தி! ஒள்ளிழை
உண்கண் பனியின் பசப்ப கண்டிசினே.
வெள்ளிமீன் விண்குறி விரைதி!விரைதி!
எதிர்தர வருவாய் குன்றின் அடுக்கத்து
ஏந்திழை ஆங்கு ஏந்திக்கொள வாராய்.
=======================================


விளக்க உரை
=========================================

பெண்ணை மடல்மா கலித்தல் அன்ன‌
எருக்கம் சூடி உருக்கம் பயின்று
ஆயிழைப் பொலங்கிளர் வாணுதல் எய்ய‌
இல் இல் அடுத்து ஊர்ந்தனை மன்னே!


பனைமர மட்டைகளில் செய்யப்பட்ட குதிரை குளம்பு அதிர வருவது போல் ஆரவாரத்துடன் தன் காதல் தோல்வியை ஊருக்கு உணர்த்தும் வண்ணம் எருக்கம் பூ மாலை சூடி மன நெகிழ்ச்சி யுற்று வருகின்றவனே.நகைகள் அணிந்த தன் காதலியின் பொன் போல் சுடரும் அந்த நெற்றியழகைக் காண ஒவ்வோரு வீடாக உற்றுப் பார்த்து மெல்ல மெல்ல அசைந்து வருபவனே.


தகரக்கூந்தல் கனலன் குரலென‌
கூரிய வீசும் அவள் நிலை அறியா
புல்லியக் கல்லா நெடுமகன் போல
மடலேறு ஆண்தகை மடம் கொண்டன்ன‌
அவள் பயிர் மடமே உணரா நின்று
உகுத்தனை என்னே விரிஉளை அலரி

.
தகரம் எனும் நறுமண மூலிகையின் நெய்பூசிய மணம் மிக்க அவள் கூந்தல் (தகரக்கூந்தல்) வெம்மை மிக்க கதிரவனின் ஒளிக்கூந்தல்  கற்றைகளைப்போன்று கூர்த்த நோக்கில் உன்னைப் பார்க்கும் அவளின் (காதல்) நிலையினை நீ அறியாமல் சிறுமை மிக்கவனாய் படிக்காத முட்டாளைப் போன்று (புல்லியக் கல்லா நெடுமகன் போல) இந்த பனைமடல் குதிரை ஏறி வந்து விட்டாயே! மடத்தனம் எனும் பெண்மை நிறைந்த "மடப்பம்"என்பது ஆண்மகனுக்கு கொஞ்சமும் பொருந்துமோ? அவளது மெல்லிய மடப்பத்தை (காதலை வெளிக்காட்டாத‌ சிணுக்கம் நிறைந்த மடம் எனும் உணர்வை) நீ இப்படி புரிந்து கொள்ளாமல் ஒரு முரட்டுத்தனமான மடத்தனத்தை இப்பொய்க்குதிரை ஏறியா வெளிப்படுத்துவது? உன் குதிரையின் பொய்யான பிடரி மயிர்ப் பிசுறுகள் அலரிப் பூக்களைப்போல  தெருவெல்லாம் உதிர்வது போல் நீ என் மீது இப்படி ஊரார் தூற்றும் பழிச்சொற்கள் பரவ விடலாமோ?(விரித்தனை என்னே விரியுளை அலரி)


தூற்றல் கொடுநோய் அவள் உற்றது அறிதி.
குரூஉ மயிர் யாக்கை உளியத்து படர்முள்
செத்தென போர்த்த நீள்வரிப்பெண்ணை
நெடுமா தொலைச்சிய‌ செல்தி! ஒள்ளிழை
உண்கண் பனியின் பசப்ப கண்டிசினே.


அவள் அடைந்த பழிச்சொல்லால்  அவள் மிகவும்  துயர் உற்றதை இப்போதாவது தெரிந்து கொள். குட்டையான மயிர்கள் நிறைந்த உடம்பினை உடைய கரடியைப்போல் முள் படர்ந்தாற்போன்றே (குரூஉ மயிர் யாக்கை உளியத்து படர் முள் செத்தென) அந்த வரிகள் நிறைந்த நெடிய பனைமடல் குதிரையை அழித்துவிட்டு (தொலைச்சிய) அல்லது கொன்று விட்டு திரும்பிச்செல்.ஒளிமிக்க அணிகலன்கள் பூட்டிய அவள் உன்னை நினைத்து பசலையுற்று கண்ணீர் மல்கும் காட்சியை இப்போதாவது கண்டு கொள்வாயாக.


வெள்ளிமீன் விண்குறி விரைதி!விரைதி!
எதிர்தர வருவாய் குன்றின் அடுக்கத்து
ஏந்திழை ஆங்கு ஏந்திக்கொள வாராய்.


நாளை விடிவெள்ளி தோன்றும் வேளை அவள் உன்னை சந்திக்கும் ஒரு அடையாளம் (விண்குறி) அறிந்து விரைந்து வந்துவிடு. குன்றுகளின் அந்த அடர்ந்த வெளியில் அவளை நீ எதிர்கொள்ள வந்துவிடு.பெருமை மிக்க அணிகள் அணிந்து அங்கு உனக்காக காத்திருக்கும் அவளை காதலுடன் சந்தித்துக்கொள்ள‌ விரைந்து நீ அங்கு வருவாயாக!
(தலைவன் மடலேறி தலைவிக்கு ஊர்ப்பழி ஏற்படுத்திய தவறைச் சுட்டிக்காட்டிய தோழி அவனுக்கு எடுத்து உரைத்தது.பனை மடல் குதிரை ஏறி தலைவன் தன் காதல் நிறைவேறாமல் போனதே என்று தன் துயரத்தை ஊருக்குச்சொல்லும் ஒரு வழிமுறை இது.தன்னைக் காதலிக்கவில்லை யென்றால் அமிலம் வீசிக்கொல்லும் இன்றைய அரக்கத்தனமான காதல் அல்ல அன்றைய சங்க காலக் காதல் )

=================================ருத்ரா இ.பரமசிவன்