புதன், 28 செப்டம்பர், 2022

"கவுண்ட் டவுண்"

  "கவுண்ட் டவுண்"

________________________________



மனிதா!

உன்னையே நீ

சுருட்டிக்கொண்டு

காணாமல் போய்விடுவதற்கு

கண்டு பிடித்த உனது சொல்

"டெக்னாலஜி"

எல்லா துறைகளிலும்

சந்து பொந்துகளிலும்

மூலை முடுக்குகளிலும்

புழு பூச்சி

மரம் மட்டைகளிலும்

ஏன்

கண்ணுக்குத்தெரியாத‌

அந்த நுண்ணுயிரிகளிலும்

இன்னும்

மில்லியன் ஒளியாண்டுகளை 

கடந்து

பல வண்ண முகங்கள் காட்டும்

ஒளி இருள் பிழம்புகளிலும்

அந்த சொல்

ஊடுருவியிருக்கிறது.

மூளைப்பெட்டியை திறக்கும் 

சாவி உன்னிடம்

வந்து விட்டது.

கருமுட்டைகளும் விந்தணுக்களும்

உன் டிஜிடல் கர்ப்பத்துள்

நுழைந்து விட்டன.

என்ன செய்யலாம் இதை வைத்துக்கொண்டு?

பணம் பண்ண வேண்டியது தான்.

பிஞ்சுகள் கூட‌

அரக்கத்தனமான "கேம்ஸ்"களில்

கருகிப்போகின்றன.

கவலையில்லை.

பணம் குவிகிறது.

உலகத்தின் கனிம வளங்களையெல்லாம்

சுருட்டி வைத்துக்கொண்டு

அழைக்கின்றாய்.

வாருங்கள் இதோ

செவ்வாய்க்கோளில் போய்

நட்சத்திர ஓட்டல்கள் கட்டி

பிரபஞ்ச காக்டெய்லை

கண்ணாடிக்கிண்ணங்களில் ஏந்தி

அருந்தி அருந்தி அனுபவிக்கலாம்.

பில்லியன் பில்லியன் டாலர்களில்

அந்த பயணத்துக்கு டிக்கெட்டுகள்

ரெடி ஆகி அச்சடிக்கப்பட்டு விட்டன.

பில்லியன் கணக்கில் இருக்கும்

மக்களின் 

கனவுகளில் ஆசைகளில்

தீ பற்றி எரிகிறது.

ஆனால்....

எதியோப்பிய சோமாலிய‌

எலும்புக்கூட்டு மனிதர்களின்

குழிவிழுந்த 

பசித்த 

வெறித்த கண்கள்

மண்ணுக்குள் மக்கத்தொடங்கி விட்டன.

ஓ!

டெக்னாலஜியே!

ராட்சச டினோசார்கள்

எலும்பு ஃபாசில்களாய்

மிஞ்சி விட்டது போல்

இந்த மொத்த பூமி உருண்டையின்

எலும்புக்கூட்டு ஃபாசில்கள்

பற்றி

இன்று ஒரு ஏ ஐ சைபோர்க்

குறிப்பு எடுத்துக்கொண்டிருக்கிறது.

மனிதா!மனிதா!

இந்தக்கணினிகள்

உன் ரத்தசிவப்பு அணுக்களில்

நுட்பமான "பைத்தான்"களை

கூடு கட்டிக்கொள்ளுவதற்கு முன்

உன்னையே

உலுக்கிக்கொண்டு

விழித்துக்கொள்.

ரகசியமான ஒரு "கவுண்ட் டவுண்'

உன் முதுகில் ஏறி சவாரி செய்து கொண்டு

டிக் டிக் டிக்..

என்கிறதே?

உன் இதய "லப் டப்"களில்

அது சின்க்ரோனைஸ் ஆகும் முன்

விழித்துக்கொள்.

ஆம்

விழித்துக்கொள்.


_________________________________________________________

ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக