வெள்ளி, 30 செப்டம்பர், 2022

படிக்கட்டுகள்

 படிக்கட்டுகள்

____________________________________________

ருத்ரா




தூங்கிக்கொண்டே இரு.

நீளமான காலப்பாம்பை

துண்டு துண்டாய்

ஊறுகாய் போட்டு

அதில் ஊறிக்கொண்டே இரு.

தூங்கும்போது

கனவின் விழிகள்

மூர்க்கமாய் திறக்கின்றன.

எதிர்ப்படும் இட்லர்களின்

தலைகளையெல்லாம்

கொய்து விடுவாய்.

அப்புறம் என்ன‌

எல்லோருக்கும் மகுடம் தான்.

தூக்கம் கலைந்து விடுகிறது.

கனவு நூலாம்படைகள் 

கிழிந்து தொங்குகின்றன.

அவலங்களே 

வாழ்க்கையாகிப்போன பின்

வியர்த்து வியர்த்து வழிகின்றது

இமையோரங்களில்

கனவுகள்.

தூங்கிக்கொண்டே விழித்துக்கொண்டிரு.

அல்லது

விழித்துக்கொண்டே தூங்கிக்கொண்டிரு.

என்ன இது?

புதிர் போடும் யோகாசனமா?

புதிர் அவிழ்க்கும் யோகாசனமா?

ஓம் ...கருந்துளை.

அதையும் துளைத்து புழுத்துளை வழியே

அந்த எதிர் பிரபஞ்சத்தின்

பிடரியைப்பற்றி இழு.

துரியப்பாய்ச்சல் என்று

கௌடபாதர் 

ஜிகினாக்களின் ஸ்லோகங்களில்

சுகமாய்த்தான் தொங்கவிடுகிறார்

உரித்த கோழிகளாய்.

பதமாய் சுட்டுத்தின்கிறார்கள்.

பாஷ்யங்களாய்

பாஷ்யங்களின் பாஷ்யங்களாய்

கூவிக் கூவி

குவித்து வைத்து எரிக்கிறார்கள்.

அஞ்ஞானம் எரிகிறது.

ஞானம் ஒளிர்கிறது.

அது எப்படி

வர்ணங்களுக்கு இங்கே

ரத்தக்கம்பளம்?

மனிதர்கள் சாம்பலாய் மிஞ்சினால் 

போதும்.

ஆயிரம் ஆயிரமாய் சாதிகளைக்கொண்டு

இங்கு எல்லாம் எரிக்கப்படுகிறது.

பிரம்மமும் இங்கு 

உடன்கட்டை ஏறுகிறது.

புரிகிறதா?

புரிந்து ஒண்ணும் நீ

கிழிக்கப்போவது இல்லை.

உன் தவத்தை தொடர்.

தூங்கிக்கொண்டே விழித்திரு

அல்லது

விழித்துக்கொண்டே தூங்கிக்கொண்டிரு.

இறப்புகளும் பிறப்புகளும்

உன் மூக்கு நுனியில்

பில்லியன் கணக்கில் 

பிம்பங்கள் 

காட்டிக்கொண்டே இருக்கட்டும்.

இந்தத் தீயைப்பொசுச்சி விழுங்கி விடும்

இன்னொரு தீயை எப்போது

பற்றவைக்கப்பொகிறாய்?

இந்த சூரியமண்டலம் தாண்டிய‌

எக்ஸோ ப்ளேனட்டுகள்

காத்திருக்கின்றன உன் படிக்கட்டுகளாய்!


_______________________________________________________________‍











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக