திங்கள், 12 செப்டம்பர், 2022

எதையோ சொல்லிவிட்டுப்போங்கள்...

 வாழ்க்கையை

வாழ்வதற்குப்பதில்

அதை 

கவிதை சிறுகதை

நாவல் என்று

நறுக் என்று கடித்தோ

நாவல் என்று

பல்லில் கடித்து

சவ்வு போல் இழுத்து 

பீட்ஸா தின்பது போல்

தின்றோ

ரசிக்கலாம்.

இசை ஆல்பங்கள் என்று

லட்சக்கணக்கில்  கோடிக்கணக்கில்

ஸரிகமபதிநிஸவை

பதினியில் நொங்குவெட்டிப்போட்டு

அந்த பனையோலைப்பட்டையில்

உறிஞ்சுவது போல்

ருசிக்கலாம்.

இன்னும் கண்ணாடிப்புட்டி

சொர்க்கங்கள் இருக்கின்றன.

நெட்ஃப்ளிக்ஸ் கிளிக்குகளில்

வாழ்க்கையின் காமிரா பிம்பங்களை

உருட்டிப்பிசைந்து உண்ணலாம்.

இதற்கு மேல்..

வாழ்க்கை என்றால்

வெறும் மன அடுக்குகள்.

அதன் ஹாலுசினேஷ சிமிட்டல்கள்

ஃப்ராய்டிஸ உட்பிறாண்டல்கள்..

இல்லாவிட்டால்

மாண்டூக்ய உபநிஷத காரிகைக்கு

உள் நுழைந்து 

முடக்கென்று பிடித்துக்கொண்ட‌ 

சிந்தனைச்சுளுக்குகளை

நீவி விடும் கௌடபாதன் வரிகள்..

தொடாமலேயே

சிந்தனை செயல் அறிவு உணர்வு

ஆகியவற்றால் தொடாமல் தொடுவது எனும்

"அஸ்பரிச யோகம்"...

ஆம்..

வாழாமலேயே வாழ்வது...

சரி தான்

அந்த முட்டை அப்படியே இருக்கட்டும்.

அதிலிருந்து

இந்த பிரபஞ்சங்கள் சிறகு முட்டிக்கொண்டு

வெளி வரட்டும்...

சரியா..

வாழ்க்கை எனும் அது

எப்படியேனும் வாழட்டும்..

அதை வேடிக்கை பார்ப்பது மட்டுமே

நமது வேலை..

அல்லது இலக்கியம் 

அல்லது தத்துவம்

அல்லது

எதையோ சொல்லிவிட்டுப்போங்கள்...

சமுதாயம்..

இதன் ரம்ப நாக்குகள்

அறுத்து தள்ளும்

அவலங்களின் சிதிலங்களின்

சித்திரங்கள் 

ரத்த வண்ணத்தில் மட்டுமே

வலியை வடித்துக்கொண்டிருக்கட்டும்.


_________________________________________________

ருத்ரா







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக