புதன், 7 செப்டம்பர், 2022

தெக்குபூத்தெரு


தெக்குபூத்தெரு

_____________________________________

ருத்ரா




நியூயார்க் டைம்ஸ்குவேர் கூட‌

அப்புறம் தான்.

திருநெல்வேலியின் தெக்குபூத்தெரு

என்றால்

திருநெல்வேலிக்கார‌னுக்கு

இல்லை இல்லை.

தின்னவேலிக்காரனுக்கு

உடம்பெல்லாம் 

இதயம் முளைத்து 

துடிக்க ஆரம்பிக்கும்.

தெக்குப்பூதெருவு

மரமே இல்லாம 

எப்படி இப்படி "பூத்து"இருக்கு?

இது தான் திருநெல்வெலிக்காரந் தமிழு.

இனிப்பு தேங்காபூக்கணக்கா

ருசியா நெனவுல இருக்கிறது

இந்த தெக்குப்பூத்தெரு தான்.

"தெற்குப் புதுத் தெரு"தான்

இப்படி கூத்துகட்டி பாட்டு பாடுது.

பரமபதக்கட்டம் விளையாட்டு போல்

இருக்கும் 

வீடுகளின் கொத்து கொத்தான‌

வாசல் முடுக்குகள்.

எங்கு ஏணி

எங்கு பாம்பு 

தெரியாது.

எப்படியும்

மாமா அத்தை

சித்தி சித்தப்பா

அவர்களின் பிள்ளைகள்

எல்லாம்

சேக்காளிகளாய் இருப்பார்கள்.

அவர்களோடு

ரத்னா

பார்வதி

பாப்புலர்

ராயல் என்று

சினிமா டாக்கிஸ்களுக்கு போய்

படம் பார்த்து வருவது

சொர்க்க லோகம் போவது போல் தான்.

ஒவ்வொரு வீடும்

ஒரு சிறுகதை

ஒரு நாவல் 

ஒரு துணுக்கு

என்று 

நம் நினைப்புகளில்

அவல் தான்.

எழா..என்ன‌

அடுப்பாங்கரை வேல எல்லாம்

முடிஞ்சுதான்னு

உரையாடல் துவக்கினார்கள்

என்றால்

கலைடோஸ்கோப்பு சித்திரங்கள் போல்

வண்ண வண்ண உருட்டல்களில்

பாடு பேசல் எனும்

நிகழ்ச்சி நிரல் நீண்டுகொண்டே

இருக்கும்.

அப்படியென்றால்

அந்த தெருவில் வாக்கிங் போவது..

அது தான் இல்லை.

அந்த சரித்திரப்பிரசித்தி பெற்ற‌

அனுபவங்கள் எல்லாம்

வாகையடி முக்கு

வாய்க்காங்கரப்பாலம் தாண்டி

அந்த ரயில்வே ஃபீடர் ரோட்டின்

வயல் விரிப்பு தாலாட்டும்

காற்று வெளியில் மிதந்தால் 

மட்டுமே சுகம்.

நெட்டக்கழுத்து மரங்களின்

உயரம் 

பச்சைஇலை அடர்த்தியை வைத்து

நிழலையே பரப்பி வைத்து

கூழு வத்த காயப்போட்டது மாதிரி

சிவனோட புலித்தோலை

கார்பெட் ஆக்கி குளு குளு உணர்வை

தூவியிருக்கும்.

அதுல வாக்கிங் போய்ட்டு

அப்படியே ரோட்டோர சிமிண்ட் பெஞ்சில்

உக்காந்து 

தெங்காசி போற ரயிலை

உத்துப்பாத்தப்பறம்

அது அடுத்து போகும்

அந்த சேர்மாதவி கூண்டுப்பாலத்துக்குள்ள‌

நொழஞ்சு போறதையும் கற்பனைபண்ணி

பாத்து நெட்டுயிர்த்த போது

அதில் தான் திருநெல்வேலி வாசனை

மொக்கிகிட்டு நிக்கும்.

மந்திரமூர்த்தி ஸ்கூல் கட்டிடம்

கம்பீரமா மருத மரங்கள்

தோள்ல கை போட்டு நிக்கிற மாதிரி

போஸ் கொடுக்கும்.

இந்த ஹேலுசினேஷ சில்லிப்புகள்

அந்த ரோட்டில் நிறையவே

எனக்கு கெடச்சிருக்கு.

______________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக