திங்கள், 12 செப்டம்பர், 2022

வண்ணதாசனின் தரிசனம்.



வண்ணதாசனின் தரிசனம்.



ஒரு சாவை 

அவர் தரிசனம் செய்ததில்

ஆயிரம் கோயில்கள்

குடி கொண்டிருந்தன.

அந்த உடலை மற்றவர்களோடு

சேர்ந்து தூக்கி கிடத்தியது.

அந்த கால்விரல்களை 

கயிற்றில் முடிச்சு போட்டது.

உயிரற்ற உடலைப்பற்றிய‌

அவரது கவிதை

அத்தனை உயிர்ப்புடன் இருந்தது

சிறு வயதுகளில்

நெய்ப்பந்தம் பிடிக்கும்போது மட்டும்

கூப்பிடுவார்கள்

தாத்தாவுக்கு 

சொர்க்கம் செல்லும் பாதையின்

இருட்டை துடைத்து அழிக்க.

மற்றபடி 

பசங்களா..பக்கத்துலெ வராதீங்கலெ

பயந்திருவீங்க..

வெளயாடப்போங்கலேன்னு

வெரட்டீருவாங்க.

சாவு செய்தியே தீட்டாகி

பக்கத்திலே

குழல்வாய்மொழி சமேத ஒரு

சிவன் கோயிலையே

இழுத்துப்பூட்டி விடுவார்களே.

இந்த நிலையில் 

நீக்கள் சாவும் கூட‌

மனிதன் அழகிய பக்கங்களில்

ஒன்று என்றும்

அவனால் முற்றும் என்று

எழுதிய நாவலின் முற்றுப்புள்ளியை

பார்க்கவே முடியாத 

எழுத்தாண்ட பக்கம் என்றும்

நினைத்திருப்பீர்களோ.

சாவைப்பற்றி 

சுகமாக ஒரு கவிதை எழுத‌

எமனின் மடியையே 

சௌகரியமான ரெக்ளைனிங்க் சேர் ஆக‌

வைத்து எழுதும் வல்லமை பெற்றவர்

நீங்கள்.

முயன்று முயன்று பார்த்து

வலிக்க வைக்க எண்ணியது மரணம்

கவிஞனை!

வாடா! காலால் உன்னை எட்டி 

உதைக்கிறேன்

என்ற அந்த எரிமலைக்கவிஞனின்

எட்டயபுரத்து சுவாசம் 

இன்னும் அடங்கவே இல்லை.

நாம் தான்

நினைவு தின தோரணங்களில்

அவனை 

தொங்க விட்டுக்கொண்டிருக்கிறோம்.

சாவு என்ற புள்ளி

பின்னுக்கே போய்

அந்த மாணிக்க கருப்பையில்

சுடர் பூத்ததையும்

தரிசனம் செய்பவன் 

கவிஞன் எனப்படுகிறான்.


______________________________________________

ருத்ரா



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக