சப்பரம்
___________________________________________
ருத்ரா
ஒவ்வொரு மணித்துளியும்
சொட்டு சொட்டாய்
முற்றுப்புள்ளி வைக்கிறது.
இடைவெளியைக்கூட
லட்சக்கணக்காய் கூறு போடுகிறது
இயற்கை எனும் இயற்பியல்.
அந்த நுண்துளிக்காலத்தில்
நுண்ணுயிரிகளின்
பிரபஞ்சங்கள் பல கோடி.
எதை அடையாளம் காண்பது.
ஆம்.
திரும்பிப்போக
வீடு மறந்து விட்டது
கடவுளுக்கு.
மனிதன் வழி காட்டுகிறான்
தன் கணித நுட்பத்தால்.
"எண்கள் என்பவை எல்லை கடந்தது.
அதில் பகா எண் எனும்
ப்ரைம் நம்பர்களின்
இறுதி எண்ணில் தான்
உங்கள் வீடு" என்றான்.
கடவுளும் மலைத்தது போல் நின்றார்.
அப்புறம்
சிரித்துக்க்கொண்டே சொன்னார்.
அந்த வீடு நீ தான்.
அதில் எப்போது நுழைவாயோ
அதில் தான் நானும் நுழைவேன்."
அவனது "வாயேஜர்"
இப்போது தான்
சூரியன் வீட்டு புழக்கடையைத்
தாண்டியிருக்கிறது.
"ம்ம்ம் சப்பரம் புறப்படட்டும்."
குரல்கள் குதூகலித்தன.
கோவிலிலிருந்து
சாமி ஊர்வலம் துவங்கியது.
___________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக